ஒரு திரைப்படம் என்பது அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பது திரையுலகின் பொதுவிதி. பழங்காலத்தைப் பேசுகிற கதைகளாக இருந்தாலும், அப்படங்களின் திரைக்கதை ‘ட்ரெண்டு’க்கு ஏற்றாற்போல இருந்தாக வேண்டும்.
அவ்வாறில்லாமல் போனால், அப்படங்கள் ரசிகர்களை ஈர்க்காது. அதனாலேயே, குறிப்பிட்ட காலத்தில் முழுமையாகத் தயாராகி முடங்கிப் போகிற திரைப்படங்கள் பின்னர் வெளியாகி வெற்றி காண்பதென்பது ’கானல்நீராக’ மாறும்.
வெகு சில படங்கள் அந்த எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி இருக்கின்றன. அதற்குச் சமீபத்திய உதாரணம், சுந்தர்.சியின் ‘மத கஜ ராஜா’. அது துருவ நட்சத்திரம், சர்வர் சுந்தரம் உட்படப் பல திரைப்படங்களைத் தூசி தட்டுகிற சூழலை உருவாக்கியிருக்கிறது.
அந்த வரிசையில் இணைந்திருக்கின்றன ‘யங் மங் சங்’ மற்றும் ‘சுமோ’.
பிரபுதேவாவின் பழைய சூட்டிப்பு!
‘சூதுகவ்வும் 2’ படத்தை இயக்கிய அர்ஜுன், அதற்கு முன்னர் உருவாக்கியது ‘யங் மங் சங்’. கும்கி, பாண்டிய நாடு, சுந்தரபாண்டியன் படங்களின் வழியே குறிப்பிட்ட எண்ணிக்கையில் தீவிர ரசிகர்களைப் பெற்ற நடிகை லட்சுமி மேனன், ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரக் காரணமாக அமைந்தது.
இந்தியில் அக்ஷய்குமார், சல்மான்கான் போன்ற முன்னணி நாயகர்களை இயக்குவதில் பிஸியாக இருந்த பிரபுதேவாவை மீண்டும் ’தேவி’யில் ஏ.எல்.விஜய் நாயகனாக ஆக்கினார். அப்படம் பெற்ற வெற்றியைப் பன்மடங்காக்கிக் காட்டும் சூட்டிப்போடு அவர் ‘யங் மங் சங்’கில் நடித்தார்.
மின்சார கனவு, விஐபி காலகட்டத்தில் இருந்த ‘ஸ்டைலிஷான’ பிரபுதேவாவைப் பார்க்கலாம் என்கிற அளவுக்கு அப்படத்தின் விளம்பரங்கள் இருந்தன. 2016 வாக்கில் ‘யங் மங் சங்’ படப் பணிகள் தீவிரமாக நடந்தன. ஆனால், அந்த சூடு வெகுசீக்கிரமாகவே அடங்கியது. படம் முழுமையாகத் தயாராகியும் ஏதோ சில காரணங்களால் வெளியாகவில்லை என்ற சொல்லப்பட்டது.
அதன்பிறகு குலேபகாவலி, மெர்குரி, லட்சுமி, சார்லி சாப்ளின் 2, தேவி 2, பொன் மாணிக்கவேல், தேள், மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை, பஹீரா, தி கோட், பேட்ட ராப், ஜாலியோ ஜிம்கானா படங்களில் நடித்துவிட்டார் பிரபுதேவா. ஒருகாலத்தில் அவர் வில்லனாக நடித்த ‘பேட்ஆஸ் ரவிகுமார்’ இந்திப்படம் கூட ரிலீஸ் ஆகிவிட்டது.
லட்சுமிமேனம் நடிப்பில் புலிக்குத்தி பாண்டி, சந்திரமுகி 2, சப்தம் படங்கள் வந்துவிட்டன.
இயக்குனர் அர்ஜுனும் கூட ‘மார்க் ஆண்டனி’, ‘குட் பேட் அக்லி’ உட்படச் சில படங்களின் கதையாக்கத்தில் பங்காற்றிவிட்டார்.
இப்போது ‘யங் மங் சங்’ வெளியாகும் என்ற தகவல்கள் உலவத் தொடங்கியிருக்கின்றன.
சித்ரா லட்சுமணன், ஆர்.வி.உதயகுமார், தங்கர்பச்சான், ஆர்ஜே பாலாஜி, அஸ்வின் சரவணன் உட்படப் பலர் நடித்துள்ள இப்படமானது ‘குங்க்ஃபூ’ தற்காப்புக்கலை சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.
அது போக தாடையில் மீசையை ஒழுகவிடுகிற பிரபுதேவாவின் 70’ஸ் ஸ்டைல், தற்காப்புக்கலை பற்றிய புரிதல் ஏதுமில்லாத அக்கால மக்களின் மனநிலை என்று இப்படத்திலுள்ள சில அம்சங்கள் இப்படத்தின் நகைச்சுவை கண்டிப்பாக ஈர்க்கும் என்ற நம்பிக்கையைத் தருகின்றன.
மீண்டும் ‘மிர்ச்சி’ சிவா!
சுமார் ஆறு ஆண்டு காலக் காத்திருப்புக்குப் பிறகு இந்த வாரம் வெளியாகிறது மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’. பிப்ரவரி 14, ஆயிரம் விளக்கு படங்களை இயக்கிய எஸ்.பி.ஹோசிமின் இதனை இயக்கியிருக்கிறார். நிவாஸ் பிரசன்னா இசையமைத்திருக்கிற இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் ராஜிவ் மேனன்.
ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் சுமோ வீரர் யோஷினோரி தஷிரோ இதில் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். பட விளம்பரங்களில் சிவா உடன் அவரே முன்னிலைப்படுத்தப்பட்டார். இவர்களோடு யோகிபாபு, விடிவி கணேஷ், சேத்தன், பெசன்ட் ரவி, ஸ்ரீநாத் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.
2019வாக்கில் இதன் படப்பிடிப்பு நிறைவுற்று, அந்த ஆண்டு இறுதியில் ‘சுமோ’ வெளியாவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அம்முயற்சிகள் தடைபட்டன. பிறகு கொரானோ உட்படப் பல காரணங்களைச் சொல்லி இப்படத்தின் வெளியீடு தள்ளிபோடப்பட்டு வந்தது. இப்போது, திடீரென்று இது திரையை எட்டவிருக்கிறது.
‘சுமோ’ படத்தின் பர்ஸ்ட் லுக், ட்ரெய்லர் ஆகியன 2019இல் வெளியாகின. இப்போது மீண்டும் ஒரு ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.
‘சுமார் ஒன்றரை வயது குழந்தைக்கு உண்டான ஐக்யூ உள்ள ஜப்பானியரைத் தமிழ்நாட்டுக் கடலோரப் பகுதியொன்றில் கண்டெடுக்கிற சிவா, அவரது ‘சுமோ’ விளையாட்டுத் திறமையை அறிந்து, பின்னர் அவருடன் ஜப்பானுக்குப் பயணிப்பதைக் காட்டுவதாக’ உள்ளது ட்ரெய்லர்.
இதில் இட்லி சாப்பிடும் போட்டியில் யோஷினோரி பாத்திரம் களமிறங்குவதாகவும் காட்சி இருப்பதாகச் செய்திகள் வந்தன. அவருக்கு ‘விநாயகர்’ வேடமிட்டு இனிப்பும் கொழுக்கட்டையும் கொடுப்பது போன்று ஒரு பாடலும் அமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. ‘ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியில் அந்த பாடல் ஒலிக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு’ என்று அப்போது பேட்டி தந்திருந்தார் சிவா.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குனர் வெங்கட் பிரபு, தனது ட்விட்டர் பக்கத்தில் ‘அகில உலக சூப்பர்ஸ்டார் சிவாவின் புதிய அவதாரம் ‘சுமோ’ என்று குறிப்பிட்டிருந்தார்.
‘சுமோ’ குறித்து சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் வெளியான செய்திகள் சிலவற்றில், நீண்ட காலம் காத்திருப்பில் உள்ள ‘பார்ட்டி’ படத்தை மிர்ச்சி சிவா எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுவும் கூட விரைவில் வெளியாகுமென்று சொல்லும் வகையில், அப்படத்தின் பாடல் வீடியோ யூடியூபில் வந்திருக்கிறது.
ஆக, நீண்டநாட்கள் காத்திருப்பில் உள்ள படங்களில் ‘நம்பிக்கைக்குரிய’ சில படங்கள் தூசி தட்டப்பட்டு, அவற்றின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிற சூழல் பிறந்திருக்கிறது. அவை ரசிகர்களுக்கு நல்லதொரு தியேட்டர் அனுபவத்தைத் தந்தால் இந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகும்!
- மாபா