சிறுவர் இலக்கிய எழுத்தாளரும் 60 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகைத் துறையில் பணியாற்றியவருமான ‘வாண்டு மாமா’ (Vaandu Mama) வி.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் – ஏப்ரல் 21.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் என்ற ஊரில் (1925) பிறந்தவர். இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். திருச்சி லால்குடி திண்ணியம் கிராமத்தில் அத்தைகளிடம் வளர்ந்தார். அவர்கள் கூறிய கதைகள் அவரது கற்பனை வளத்தைப் பெருக்கியதோடு, பசி, வறுமையையும் மறக் கடித்தது.
திருச்சி சின்னக் கடை வீதிமுனை பிள்ளையார் கோயில் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும், முகமதியன் இலவசப் பள்ளியிலும் பிறகு நேஷனல் கல்லூரி உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். அப்போதே, ஏதாவது வரைந்துகொண்டே இருப்பார். ரவிவர்மாவின் படங்களைப் பார்த்து அதேபோல வரைவார். கதை எழுதுவதிலும் ஆர்வம் பிறந்தது.
முதன்முதலாக கலைமகள் இதழில் ‘குல்ருக்’ என்ற கதை எழுதினார். பாரதி என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். சென்னையில் நடைபெற்ற கையெழுத்துப் பத்திரிகைகள் மாநாட்டில் இவரது பத்திரிகை முதல் பரிசு பெற்றது. விளம்பரப் பலகைகள், புத்தக அட்டை, உள்பக்கப் படங்கள் வரையும் ஓவியராக திருச்சியில் பணியாற்றினார்.
கவுசிகன் என்ற புனைப்பெயரில் எழுதினார். ஆனந்தவிகடன் இதழின் ஓவியர் மாலி, இவரது திறனை அறிந்து, சிறுவர் கதைகள் எழுதுமாறு கூறினார். இவருக்கு ‘வாண்டு மாமா’ என்று பெயர் சூட்டியதும் அவர்தான்.
பிறகு திருச்சியில் இருந்து வெளிவந்த ‘சிவாஜி’ பத்திரிகையின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். அதன் சிறுவர் மலர் பகுதியில் கதைகள் எழுதினார். வானவில், கிண்கிணி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார். கல்கி இதழில் விற்பனைப் பிரிவு குமாஸ்தாவாக சேர்ந்தவர், விரைவில் ஆசிரியர் குழுவில் இணைந்தார்.
கல்கியின் ‘கோகுலம்’ குழந்தைகள் வார இதழில் பலே பாலு, சமத்து சாரு போன்ற இவரது படைப்புகள், குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. அங்கு 23 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
பலரது குழந்தைப் பருவ கற்பனைகளுக்கு, சாகசக் கனவுகளுக்கு உயிர் கொடுத்தவர். சித்திரக் கதைகள் (Comics) சிறுவர் நாவல்கள், சாகசக் கதைகள், அறிவியல் புனைக் கதைகள், மருத்துவம், இயற்கை, தொழில்நுட்பம் என பல தளங்களில் முத்திரை பதித்தவர்.
அறிவியல், தொழில்நுட்பம் பற்றி படிக்கப் பிடிக்காத சிறுவர்களைக்கூட ஆர்வத்துடன் படிக்கத் தூண்டும் வகையில் எழுதியது இவரது தனிச் சிறப்பு.
குழந்தைகளுக்கான கதைகள், நாவல்கள், அறிவியல் நூல்கள், சித்திரக்கதைகள் உள்ளிட்ட ஏராளமான குழந்தை இலக்கியங்களைப் படைத்துள்ளார். கவுசிகன் என்ற பெயரில் இவரது 6 சிறுகதைத் தொகுப்புகள், 10 நாவல்கள் வெளிவந்துள்ளன.
இவரே வரைந்த அழகான சித்திரங்களுடன் இவரது படைப்புகள் வெளிவந்தன. சிறந்த குழந்தை இலக்கியத்துக்கான பரிசுகள், சிறப்பு வெளியீடுகளுக்கான பரிசு உட்பட பல பரிசுகளை பெற்றுள்ளார்.
‘ஒரு குழந்தை எழுத்தாளன் தன் எழுத்து மூலமாக தானும் குழந்தையாகிவிடுகிறான். காலம் முழுவதும் குழந்தையாக இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்!’ என்று பெருமிதத்தோடு கூறுவார். வாழ்நாள் முழுவதையும் சிறுவர் இலக்கியத்துக்காக அர்ப்பணித்த வாண்டு மாமா கடந்த ஆண்டு 89-வது வயதில் மறைந்தார்.
– ஆயிஷா நடராசன்
#வாண்டுமாமா #VaanduMama #விகிருஷ்ணமூர்த்தி #சித்திரக்கதைகள் #Comics #சிறுவர்நாவல்கள் #சாகசக்கதைகள் #அறிவியல்புனைக்கதைகள் #மருத்துவம் #இயற்கை #தொழில்நுட்பம் #science #fiction