குப்புசாமியையும் ஸ்வர்ணலதாவையும் அடையாளப்படுத்திய பாடல்!

இயக்குனர் தரணியின் முதல் படமான ‘எதிரும் புதிரும்’ திரைப்படத்தின் ‘தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்தானா’ தற்போது வைரலாகி வருகிறது.

இந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே வி.சி.ஆரில் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பார்த்து முடித்த பின்னர் நிதானமாக ரிலீஸ் ஆகியது.

நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி தனக்கென ஒரு ரசிகப் பரப்பைக் கொண்டிருந்த புஸ்பவனம் குப்புசாமி சினிமாவிற்கு பாடத் தொடங்கியிருந்த தொடக்க காலம் அது.

அதுவரை அவர் திரையில் பாடிய பாடல்களும் தெம்மாங்கு மெட்டுக்களாக இருந்த சூழலில் வித்தியாசாகர் அதை உடைத்து இந்த “தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்தானாவை” அவருக்குக் கொடுத்து, அந்தப் பாடலும் பெரிய கவனிப்பிற்குள்ளானது.

இதே படத்தின் ‘காத்து பச பசங்க’ பாடலையும் புஸ்பவனமே பாடியிருந்தார்.

இந்தப் படத்தில் இன்னும் சில பாடல்கள் உண்டு என்றாலும் புஸ்பவனம் குப்புசாமி பாடிய இந்த இரண்டு பாடல்கள் அந்தப் படத்திற்கு அடையாளப் பாடல்களாக அமைந்தன.

“தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்தானா” பாடல் குறித்து தனியொருத்தி புத்தகத்தில் எழுதிய வரிகள் கீழே…

குப்புசாமி அவர்களின் நாட்டுப்புற பாடல்களிலும் சரி, திரையிசைப் பாடல்களிலும் சரி அவரின் குரலின் கணீர் தன்மையால் டூயட் பாடல்களும் குப்புசாமியின் பாடல்களாகத்தான் மொத்தமாய் அடையாளப்பட்டு நிற்கும்.

‘தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்தானா’ என்ற இந்தப் பாடலிலும் குப்புசாமியின் கணீர் குரல் வெளிப்படும் ‘சுல்தானே சுல்தானே’ என்று வருகிற ஒவ்வொரு இடத்திலும் ஸ்வர்ணலதா தன் குரலை ஐஸ்கிரீமாகக் குழையவிட்டு,

முழு க்ரெடிட்டையும் குப்புசாமியே எடுத்துப்போக விடாமல் தன் பாட்டாகவும் நம் நெஞ்சில் நிலை நிறுத்தி வைத்திருப்பதில் டூயட் பாடல்களில் எப்பேற்பட்ட குரலுக்கும் ஈடு கொடுத்துத் தன்னை நிரூபிப்பதில் அவர் காட்டியிருக்கும் முனைப்பை உணரலாம்.

  • நன்றி: அ.பாரி முகநூல் பதிவு
You might also like