விஜய் அதிமுகவிடம் விதித்த கூட்டணி நிபந்தனை?

ஆடிட்டர் குருமூர்த்தியின் பேட்டியிலிருந்து...

சில நாட்களாக தமிழக ஊடகங்களில் பரபரப்பான செய்தியாகவும் விவாதத்திற்கான பொருளாகவும் அடிபட்டது மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் சென்னை வருகை.

அந்த வருகையின்போது அவர் சந்தித்த முக்கியமான நபர்களில் ஒருவர், ‘துக்ளக்’ ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி.

அவருடனான அமித்ஷாவின் சந்திப்பு குறித்து செய்திகள் அடிபட்ட நிலையிலும், குருமூர்த்தியின் நேரடிப் பேட்டி நேற்று தந்தி டிவியில் வெளியானது. பேட்டி எடுத்தவர் ஹரிஹரன்.

பேட்டி துவங்கியதுமே ஹரிஹரன் நேரடியாக சப்ஜெக்டுக்குள் வந்துவிட்டார்.

அவருடைய முதல் கேள்வியே, “அமித்ஷா உங்களை இரண்டு மணி நேரம் சந்தித்து இருக்கிறாரே, என்ன பேசினீர்கள்?” என்று கேட்டபோது, அதற்கு விரிவாக பதில் சொன்னார் குருமூர்த்தி.

“அமித்ஷாவை அடிக்கடி நான் பார்த்துப் பேசுவது புதிதல்ல. டெல்லியில் அவரை அடிக்கடி பார்க்கும்போது, சுமார் இரண்டு மணி நேரம் வரை அவருடன்  பேசியிருக்கிறேன். பலமுறை பேசி இருக்கிறேன். அதெல்லாம் வெளியே வரவில்லை. இங்கே வந்தபோதும் அவரை எனது வீட்டிற்கு அழைத்திருந்தேன். அவரும் வந்திருந்தார். சுமார் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். தமிழக அரசியல் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம்” என்று சொன்னார்.

அதைத் தொடர்ந்து ஹரிஹரன் கேட்ட அடுத்த கேள்வி, “தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில், எடப்பாடியை எப்படி உங்களது பாஜக அணிக்குள் இப்போதே கூட்டணிக்குள் கொண்டு வந்தீர்கள்” என்று கேட்டபோது, அமித்ஷாவின் பெருமைகளைப் பற்றி விவரித்த குருமூர்த்தி, “குறிப்பிட்ட  நாட்களுக்குள் பதில் சொல்லும்படி பாஜக தரப்பில் வற்புறுத்தி இருக்கலாம். அதன் பெயரில் இபிஎஸ் டெல்லி சென்று அவரை சந்தித்திருக்கலாம்” என்றார்.

அடுத்து ஹரிஹரன் கேட்ட கேள்வி, “இருந்தாலும் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து அமித்ஷா தான் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தாரே ஒழிய எடப்பாடி அதைப்பற்றி குறிப்பிடவே இல்லையே?. சென்னையில் நடந்த அமித்ஷாவுடன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூட அமித்ஷாதான் கூட்டணி பற்றிப் பேசினார். உடனிருந்த எடப்பாடி அதைப் பற்றி பேசவே இல்லையே”  என்று கேட்டபோது குருமூர்த்தி சொன்ன பதில்,

“அவர்கள் இருவரும் யார் செய்தியாளர்களிடம் பேசுவது என்பது பற்றி முன்பே பேசி இருக்கலாம். அதனால் அமித்ஷா பேசியிருக்கிறார்.

அன்றைக்கு உடனிருந்த எடப்பாடி பேசாத நிலையில் அடுத்த நாள் செய்தியாளர்கள் சந்திப்பில் தன்னுடைய நிலையை தெளிவுபடுத்தி இருக்கிறார். இது அவர்களுக்குள் நடந்த உரையாடலாக இருக்கலாம்” என்றார்.

இதையடுத்து எடப்பாடி குறித்து அடுத்தடுத்து சில நெருக்கடியான கேள்விகளை ஹரிஹரன் கேட்டதற்கு, “இது பற்றி நீங்கள் எடப்பாடியிடம் தான் கேட்க வேண்டும்” என்று சொன்னார் குருமூர்த்தி.

அதற்கு அடுத்து விஜயின் தவெக கட்சிப் பற்றி கேள்வி எழுந்தபோது, “அரசியலில் இறங்குவதற்கு முன்பு இரண்டு பேர் என்னிடம் அரசியலைப் பற்றி பேசி இருக்கிறார்கள்.

இதில், முக்கியமானவர் கமல். கமலிடம் பல விஷயங்களைப் பற்றி நான் பேசினேன். அதைப்பற்றி நான் விரிவாகச் சொல்ல முடியாது. ரஜினிகாந்தும் என்னை சந்தித்துப் பேசினார்.

ஆனால் அவரிடமும் நான் உள்ள நிலைமையை எடுத்துச் சொன்னேனே ஒழிய, அவர் அரசியலில் நுழைவதற்கான அழுத்தத்தை நான் கொடுக்கவில்லை” என்றார்.

அதன்பின் ஹரிஹரன் கேட்ட கேள்வி, “தற்போதைய நிலையில் விஜய் அதே மாதிரி உங்களை சந்தித்தாரா?” என்று கேட்டதும் சிரிப்புடன் குருமூர்த்தி சொன்ன பதில்,

“விஜய் என்னை வந்துச் சந்திக்கவில்லை. ஆனால், கட்சி ஆரம்பித்தவுடன் அவரைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து எனக்கு வந்து கொண்டிருந்தன. அதிமுகவுடன் கூட்டணி அமைக்க அவர் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூட செய்திகள் வெளிவந்தன.

குறிப்பிட்ட தொகுதிகளைக் கேட்கிறார் என்றும் துணை முதலமைச்சர் பதவி கேட்கிறார் என்றும் பல்வேறு விதமான செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன.

அதிலெல்லாம் அந்தக் கூட்டணி பேச்சுவார்த்தை இயலாத நிலையில் தான் எடப்பாடி பாஜகவுடன் சேர்வது குறித்த முடிவை எடுத்திருக்கிறார்” என்று சொன்னார்.

தொடர்ச்சியாக ஹரிஹரன் கேட்ட கேள்வியில், “பாஜகவுக்கும் அதிமுகவுக்குமான உறவுவைவிட, அதிமுகவுக்கும் தவெகவுக்குமான உறவு வந்து மிக எதார்த்தமான ஒரு கூட்டணியாக இருந்திருக்கும் இல்லையா?” என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த குருமூர்த்தி, “இருந்திருக்கலாம். ஆனால், என்ன காரணத்தினால் அந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்தது என தெரியவில்லை” என்றார்.

தொடர்ந்து ஹரிஹரன் கேட்ட அடுத்த கேள்வி, “அண்ணாமலையை தமிழக பாஜக தலைமைப் பொறுப்பிலிருந்துத் தூக்க வேண்டும் என்று எடப்பாடி ஏதாவது நிபந்தனை விதித்தாரா?” என்று கேட்டதும் குருமூர்த்தி பதில் சொன்னார்.

“அப்படி ஏதும் நிபந்தனையை அவர் விதிக்கவில்லை. எடப்பாடி, பாஜகவில்  இணைவது இயல்பாக நடந்தது மாதிரியே மூன்றாண்டுகளுக்குப் பிறகு அண்ணாமலை தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியதும் இயல்பாக நடந்தது.

நயினார் நாகேந்திரன் உள்ளே வந்ததும் இயல்பாக நடந்தது. இதுதான் நடந்ததே ஒழிய எடப்பாடி எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை” என்றார்.

இதுபோன்ற கேள்விகளுடன் தொடர்ந்து பயணப்பட்ட நிலையில், அடுத்து டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் போன்றவர்கள் நிலை என்ன?, பாஜக அவர்கள் விஷயத்தில் என்ன முடிவு எடுக்கப்போகிறது? என்று கேட்டதும்,

குருமூர்த்தியின் பதில், “தேர்தலுக்கு இன்னும் சில காலம் இருக்கிறது. அதற்குள் அவர்கள், அவரவர் நிலை உணர்ந்து தகுந்த முடிவெடுப்பார்கள்” என்றார்.

அடுத்த கேள்வியாக ஹரிஹரன், “அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன் என்று அமித்ஷா சொல்லி இருக்கிறாரே?” என்றதும் குருமூர்த்தியின் பதில்,

“அவர் அப்படித்தான் சொல்வார். முடிவெடுப்பது குறித்து தகுந்த ஆலோசனையை அடுத்தடுத்த மாதங்களுக்குள் பேசி முடிவெடுக்கப்பட்டுவிடும்.

தேர்தலுக்குள் ஒரு வலுவானக் கூட்டணியை கட்டமைக்க வேண்டிய அவசியம் பாஜகவிற்கும் இருக்கிறது. அதிமுகவிற்கும் இருக்கிறது.

முக்கியமாக திமுகவை ஆட்சிப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே இலக்காக இருக்கிறது. அந்த இலக்கிற்காக அடுத்தடுத்து கூட்டணி குறித்து எந்த நிலைப்பாடும் எடுக்கப்படலாம்” என்று பேட்டி நீண்டது.

அண்ணாமலை விஷயத்தில் என்ன செய்யப் போகிறது பாஜக?

“தான் தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து பாஜகவை எந்த அளவுக்கு வலுப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு வலுப்படுத்தும் வேலையை செம்மையாகச் செய்தவர் அண்ணாமலை.

தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையை தேசிய அளவில் பல பேருக்கு தெரியும்.

அடுத்து அவர் தேசிய அளவில் ஒரு முக்கிய பொறுப்புக்கு நியமிக்கப்படுவதும் நடக்கும்” என்றார்.

குருமூர்த்தி பேட்டியின் இன்னொரு ஹைலைட், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானைப் பற்றி அவர் தெரிவித்த விஷயங்கள்.

சீமான் இயக்கத்தை நடத்திவரும் விதத்தைப் பற்றியும், அவருக்கு சமீபத்திய ஈரோடு இடைத்தேர்தலில் கிடைத்த வாக்கு சதவீதம் பற்றியும் கூடுதலாகவே புகழ்ந்து பேசிய குருமூர்த்தி, அதையடுத்து இன்னொன்றையும் சொன்னார்.

“தனித்த அடையாளத்துடன் நாம் தமிழர் கட்சியை நடத்தி வரும் சீமான் மாதிரி திடமான கொள்கையுடன் இயங்குபவர்கள் வேறு யார் இருக்கிறார்கள். பெரியாரைப் பற்றி யாரும் பேச முடியாத அளவுக்கு பேசியிருக்கிறார் சீமான்.

காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பலரும் பெரியாருக்கு ஜால்ரா போட்டு வரும் நிலையில், சீமான், அதேப் பெரியாரைப் பற்றி, “இது பெரியார் மண்ணல்ல.. பெரியாரே மண் தான்” என்று பேசி, அதே ஈரோட்டில் எவ்வளவு கூடுதலான சதவீத வாக்குகளையும் வாங்கி இருக்கிறார்” என்றார்.

அதன் தொடர்ச்சியாக, “சீமான் அடுத்து அதிமுக பாஜக கூட்டணி பக்கம் வர வாய்ப்பு இருக்கிறதா?” என்று கேட்டார் ஹரிஹரன்.

அப்போது அதற்கு பதில் சொன்ன குருமூர்த்தி, “அவருடைய கட்சியில் இருப்பவர்களுக்கும் எம்எல்ஏ ஆக வேண்டும் என்று ஆசை இருக்காதா?. அதனால், அவரும் உரிய நேரத்தில் முடிவெடுப்பார்” என்றார்.

“நிறைவாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்” என்று கேட்டார் ஹரிஹரன்.

அதற்கு பதிலளித்த குருமூர்த்தி, “நான் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர். நாங்கள் திமுகவை ஒரு தீய சக்தியாகத் தான் எப்போதுமே பார்க்கிறோம்.

இப்போதும் அதைத்தான் வலியுறுத்துகிறோம். அந்த தீய சக்தியை அகற்றுவதற்கு உரிய வலுவானக் கூட்டணியை அமைப்பதற்கான விஷயங்களில் இப்போது தான் ஒரு துவக்கம் ஆரம்பித்திருக்கிறது.

இனி அதை வேறு வேறு கட்சிகள் இணைந்து அதை வலுப்படுத்தி, அதை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்துவதுதான் எங்களுடைய நோக்கம். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்” என்றார்.

நன்றி: தந்தி தொலைக்காட்சி

You might also like