பெங்களூருவைச் சேர்ந்த திவ்யா தேஜஸ்வி, ஊரடங்கின்போது தனது ஆசிரியர் பணியை இழந்தார். அப்போது அவருக்கு எதிர்காலம் குறித்த கவலை இருந்தது.
ஆசிரியரான அவரது கணவரும் வேலையை இழந்தார். இந்த நிலையில், தனது மகள் விளையாடும் பொம்மையைப் பார்த்து ஒரு தனித்துவமான யோசனையைப் பெற்றார்.
ஆரம்ப பரிசோதனை முயற்சியை நினைவுகூர்ந்த திவ்யா, “என் மகளின் பொம்மைகளில் முதன்முறையாக (பாரம்பரிய இந்திய உடைகளில்) எனக்கான பாதையை வகுத்துக்கொண்டேன்.
நான் வேடிக்கைக்காக சில படங்களை ஆன்லைனில் பதிவேற்றினேன்.
வாடிக்கையாளர் விரும்பும் பொம்மைகளை மட்டும் செய்துதரும் பணியை எனக்கான தொழிலாக மாற்ற விரும்பினேன்.
சில பொம்மைகளுக்கு உடனடி பதில் கிடைத்தது. உண்மையில், சில நாட்களில் அவற்றைப் பரிசளிக்க விரும்பிய ஒருவரிடமிருந்து 20 பொம்மைகளுக்கான முதல் ஆர்டரைப் பெற்றேன்.
இதுவோர் ஆசீர்வாதம் என்று சொல்வேன். அந்த நாளிலிருந்து நான் திரும்பிப் பார்க்கவே இல்லை. அவ்வளவு பிஸியாக இருக்கிறேன்” என்கிறார்.
திவ்யா உருவாக்கும் பொம்மைகள் பிளாஸ்டிக், செயற்கைப் பொருட்கள், கம்பளி மற்றும் நூல் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகின்றன.
இன்று திவ்யா வெற்றிகரமான ஒரு தொழில்முனைவோர். தனது கைவினைப் பொம்மைகளை விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் சம்பாதிக்கிறார்.
இவரது பொம்மைகள் ‘லலிதா டால்ஸ்’ என்ற பிராண்ட் பெயரில் சந்தைக்கு வருகின்றன.
பொம்மை ஆபரணங்களைச் செய்வதில் திறமையான அவரது தாயாரின் பெயரை தன் பிராண்ட்டுக்கு வைத்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல, பொம்மைகளை கைவினைப் பொருட்களாக உருவாக்குவதில் அவருக்கு உதவும் ஐந்து பெண்களுக்கும் வேலைவாய்ப்பு அளித்திருக்கிறார்.
இந்த பொம்மைகள் உலகளவில் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளன. அமெரிக்கா, கனடா, மலேசியா மற்றும் கொரியா ஆகிய நாடுகளுக்குள் நுழைந்து உலகளவில் ரசிகர்களைப் பெற்றுள்ளன.
திவ்யா உருவாக்கும் பொம்மைகள் ஏற்கெனவே உலக மக்களின் இதயங்களைத் தொட்ட நிலையில், சொந்தமாக ஒரு பிரத்யேக ஷோரூமை தொடங்கும் இலக்கை வைத்திருக்கிறார்.