நினைத்தேன் வந்தாய் – ‘தேவ’ கானங்களால் நினைவுகூரப்படும் படம்!

பூவே உனக்காக, லவ் டுடே, காதலுக்கு மரியாதை என்று தனது கேரியரில் அடுத்தடுத்த படிகளை அடைந்துவந்த நடிகர் விஜய்க்கு மீண்டும் ஒரு ‘குடும்பப்பாங்கான’ படமாக அமைந்தது ‘நினைத்தேன் வந்தாய்’.

1998ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதியன்று வெளியானது. அந்த ஆண்டின் சிறந்த ‘மியூசிகல் ஹிட்’ படங்களில் ஒன்றாக மாறியது.

விஜய்க்கு அப்போதிருந்த மார்க்கெட்டை மேலும் ஒரு படி முன்னகர்த்தியதில் இதற்கும் ஒரு பங்குண்டு.

தெலுங்கு ரீமேக்!

‘காதலுக்கு மரியாதை’ படத்திற்குப் பிறகு, விஜய் நடித்த ரீமேக் படமிது. தெலுங்கில் கே. ராகவேந்திரராவ் இயக்கிய ‘பெல்லி சந்ததி’, 1996இல் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

‘வாரிசு’வில் விஜய்யின் அண்ணனாக நடித்த ஸ்ரீகாந்த் இதில் நாயகன். ரவளி, தீப்தி பட்நாகர் அவரது ஜோடியாக நடித்திருந்தனர். கீரவாணி இசையமைத்திருந்தார்.

மூத்த இயக்குநரான ராகவேந்திரராவ் பெரிய நட்சத்திரங்களை வைத்து பிரமாண்ட படங்களை இயக்கிவந்த நேரத்தில், ‘சின்னதாக ஒரு படம் பண்ணலாமே’ என்ற முடிவுடன் தந்த படம் இது.

இப்படத்தின் வெற்றி தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ‘ரீமேக்’ ஆனது.

தெலுங்கில் இப்படத்தை நான்கு தயாரிப்பு நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கியிருந்தன.

தமிழில் இயக்குநர் ராகவேந்திரராவ் பேனரில் இதனைத் தயாரித்தார் அல்லு அரவிந்த். இவர் தமிழில் மாப்பிள்ளை, டார்லிங் உட்பட 4 படங்களைத் தந்திருக்கிறார்.

தமிழில் இப்படத்தை ஆக்குவதென்று முடிவு செய்தபோது, இதனை இயக்கும் பொறுப்பு கே.செல்வபாரதிக்கு வழங்கப்பட்டது. அப்போது இயக்குநர் சுந்தர்.சியிடம் அவர் இணை இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் அறிமுகமாக இப்படம் வழி வகுத்தது.

இளம்பெண் ஒருவரைக் காதலிக்கும் ஒரு இளைஞர், அவரது மூத்த சகோதரியைப் பெண் பார்க்கச் செல்வதுதான் இப்படத்தின் மையக்கரு.

பெண் பார்க்கப் போன இடத்தில் மூத்தவர் தான் மணப்பெண் என்று தெரியாமல் அந்த இளைஞர் ‘ஓகே’ சொல்ல, அதன்பிறகு தனது சகோதரி மனதில் காதலன் இருப்பதை அறிந்து அந்த இளம்பெண் என்ன செய்தார் என்று திரைக்கதை நகரும்.

முழுக்க ‘ட்ராமா’ வகைமையில் அமைந்த இந்தக் கதையை காமெடி, பாடல்கள், சண்டைக்காட்சிகள் என்று பொழுதுபோக்காக நகர்த்தியிருந்தது ரசிகர்களுக்குப் பிடித்துப் போனது.

சிறப்பான உள்ளடக்கம்!

விஜய்க்கு ஜோடியாக ரம்பாவும் தேவயானியும் நடித்திருந்தது வித்தியாசமான ‘காம்போ’வாக அப்போது பார்க்கப்பட்டது.

பின்னாட்களில் ‘மின்சார கண்ணா’, ‘என்றென்றும் காதல்’ படங்களில் ரம்பாவும், ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தில் தேவயானியும் விஜய்யின் ஜோடியாக நடித்தனர்.

‘நினைத்தேன் வந்தாய்’ படத்தின் வெற்றிக்கு அதன் காட்சியாக்கமும் ஒரு காரணம். ’வண்ண நிலவே’ பாடலை இப்போது பார்த்தாலும் ‘அழகு’ கொஞ்சும். இத்தனைக்கும் ரம்பாவின் கால்ஷீட் கிடைக்காமல் ‘டூப்’பாக இன்னொருவரை வைத்து படம்பிடிக்கப்பட்ட பாடல் அது.

இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் இளவரசு. அனைத்து வண்ணங்களையும் தொடர்ந்து பிரேம்களில் பார்க்கிற உணர்வை உருவாக்குவது அவரது பாணி.

அதற்காக, பிலிம் புராசஸிங்கில் சில பரீட்சார்த்த முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.

அவர் பணியாற்றிய பாஞ்சாலங்குறிச்சி, பெரியதம்பி, இனியவளே, மனம் விரும்புதே உன்னை, ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட படங்களிலும் இது போன்ற அனுபவத்தைப் பெற முடியும்.

‘நினைத்தேன் வந்தாய்’ படத்தின் மிகப்பெரிய ‘ப்ளஸ்’ ஆக அதன் பாடல்கள் அமைந்தன.

‘உனை நினைத்து நான் எனை மறப்பது’, ‘பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா’, ‘உன் மார்பில் விழி மூடி’ பாடல்கள் ஒரிஜினல் தெலுங்குப் படத்தில் இருந்தது அப்படியே இதில் பயன்படுத்தப்பட்டன.

 அவற்றில் கீரவாணியின் ‘டச்’ தெரியும். இதில் ‘உனை நினைத்து’ பாடலை மட்டும் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.

அதேநேரத்தில் ‘என்னவளே என்னவளே’, ‘மல்லிகையே மல்லிகையே’, ‘வண்ண நிலவே வண்ண நிலவே’ பாடல்களை ‘மெலடி’யாக குழைத்திருந்தார் தேனிசைத் தென்றல் தேவா.

அந்தப் பாடல்களின் முதல் வரியில் ‘அடுக்குத் தொடர்’ வரும்படியாக சொற்களைக் கோர்த்து ரசிகர்கள் திரும்பத் திரும்ப முனுமுனுக்கும்படி செய்திருந்தார் பாடலாசிரியர் பழனிபாரதி.

‘மனிஷா மனிஷா போல் சிரிப்பாளா’ பாடலை இயக்குநர் செல்வபாரதியே எழுதியிருந்தார்.

’தேவ’ கானங்கள் என்று வரிசைப்படுத்தும் படங்களில் ஒன்றாக, ‘நினைத்தேன் வந்தாய்’ இசையமைப்பாளர் தேவாவுக்கு அமைந்தது.

அந்தக் காலகட்டத்தில் ஒரு படத்தில் ஏழு பாடல்கள் இடம்பெறுவது சாதாரணம். அவை ரசிகர்களை குஷிப்படுத்துகிற வகையில் அமைந்துவிட்டால், அதுவே படத்தின் வெற்றிக்கு வித்திட்டுவிடும்.

அந்த வகையில் கல்லூரி இளைஞர், இளைஞிகள் கொண்டாடுகிற பாடல்களைக் கொண்டிருந்தது இப்படம். அதுவே ‘ரிப்பீட்’ ஆடியன்ஸ் வர வழி வகுத்தது.

இந்தப் படத்தில் ஆரம்பக் கட்டத்தில் கவுண்டமணி நடிப்பதாக இருந்திருக்கிறது. ஆனால், அவர் இதில் இடம்பெறவில்லை. மணிவண்ணன் நடித்த பாத்திரம் கிட்டத்தட்ட அவருக்காக வார்த்தது போல் தென்படுகிறது.

செந்தில், ஆர்.சுந்தர்ராஜன் வரும் காட்சிகளும் கொஞ்சமாய் சிரிப்பூட்டும். இதில் அல்வா வாசு, சார்லி இருவரும் நாயகன் விஜய்யின் மச்சான்களாக நடித்திருந்தனர்.

பசி நாராயணன், ஜோக்கர் துளசி சேர்ந்து வந்து ‘காபி சாப்பிட்டீங்களாண்ணா.. டிபன் சாப்பிட்டீங்களாண்ணா..’ என்ற வசனம் பின்னாட்களில் இப்படத்தின் அடையாளங்களில் ஒன்றானது.

இன்றும் கூட, விசேஷ வீடுகளில் சம்பந்தமில்லாமல் யாராவது சிலர் சாப்பாட்டுக்கூடம் பக்கம் நடமாடினால் இந்த வசனத்தை வைத்துக் கிண்டலடிக்கிற வழக்கம் இருக்கிறது.

அடுத்தடுத்து பாடல்கள், நகைச்சுவை, வசனக் காட்சிகள் என்று படம் நகர்ந்து சட்டென்று ‘கிளைமேக்ஸ்’ நோக்கி பாய்வது இப்படத்தின் சிறப்பாக இருந்தது.

இப்படி பொழுதுபோக்கு அம்சங்களை நிறைத்திருந்ததால் வெற்றிப்படமாக மாறிய ‘நினைத்தேன் வந்தாய்’, இருபத்தேழு ஆண்டுகள் ஆனபோதும் இன்னும் சில ரசிகர்கள் மனதில் ‘பசுமையான நினைவுகளை’ எழுப்பக்கூடியதாக உள்ளது.

-உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like