இனி, தமிழகப் பல்கலைக் கழகங்களுக்கு ஆளுநர், வேந்தரல்ல!

கரைவேட்டி கட்டிக்கொண்டு அரசியல் செய்யலாம், ராஜ்பவனில் அமர்ந்துகொண்டு ஒருதரப்புக்கு சார்பாக நடந்து கொண்டால் இப்படித்தான் நடக்கும். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இது ஒன்றும் புதிதல்ல.

நாகாலாந்தில் பணியாற்றிய காலத்திலேயே ஒருதலைபட்சமாக நடந்து கொண்டார் என்பது தான் அவர் மீதான விமர்சனம்.

தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்றது முதல் அந்த பதவிக்கு நியாயம் செய்யாமல் நடப்பதாக விமர்சனத்திற்கு ஆளானார் ஆளுநர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஒன்றுகூடி நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டுமே அவரது கடமை.

ஒருவேளை மாற்றுக் கருத்து இருந்தால் அதுகுறித்து கட்டாயம் மாநில அரசிடம் கேள்வி எழுப்பலாம். ஆனால் அதே மசோதாவை திருத்தியோ, திருத்தாமலே சட்டப்பேரவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து போட்டாக வேண்டும்.

ஆனால், தமிழ்நாடு அரசு அவ்வாறு மறுமுறை நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களை எவ்வித காரணமும் இல்லாமல் கிடப்பில் போட்டுவிட்டு ஊருக்கெல்லாம் உபதேசம் செய்து கொண்டிருந்தார் ஆர்.என்.ரவி.

இப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

“ஆளுநரின் செயல்பாடு நேர்மையாக இல்லை. 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதம்.

2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு அன்றே ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 200-ன் படியே ஆளுநர் செயல்பட வேண்டும். வெறுமனே மசோதாவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் கூற முடியாது.

இனிமேல் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு ஒருமாதம் காலக்கெடு. மேல்நடவடிக்கை எடுக்க விரும்பினால் 3 மாதத்திற்குள் மசோதா மீது முடிவு எடுக்க வேண்டும்” என தீர்ப்பளித்துள்ளனர்.

முத்தாய்ப்பாக சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்துள்ளது.

அதில் முக்கியமான ஒரு மசோதா. இனிமேல் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு ஆளுநர், வேந்தர் அல்ல. முதலமைச்சர் தான் வேந்தராக செயல்பட முடியும்.

Article 200 in Constitution of India – Assent to Bills என்ன சொல்கிறது. He may return the bill (if it is not a Money Bill) for reconsideration by the House. If passed again by the House/Houses with/without amendment, the governor shall not withhold assent.

அதாவது, ஆளுநர் மசோதாவை (அது பண மசோதாவாக இல்லையென்றால்) சபையின் மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்பலாம். திருத்தங்களுடன்/திருத்தங்கள் இல்லாமல் மீண்டும் அவையால் நிறைவேற்றப்பட்டால், ஆளுநர் ஒப்புதலைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதே அரசியல் சாசனத்தின் கூற்று.

பாராண்ட மன்னாதி மன்னரெல்லாம் மண்ணோடு மண்ணாகிப் போனதை வரலாறு சொல்கிறது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவனைத் தான் வானுறையும் தெய்வமாக பார்க்கிறது தமிழ் நிலம்.

ஆட்சி, அதிகாரம் என்பதைத் தாண்டி மக்கள் நலனுக்காக ஒருவர் செயல்பட்டால் அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும் தமிழர்களால் கொண்டாடப்படுவார். தமிழர் நலனுக்கு எதிரான விஷயங்களை முன்னெடுத்தால் சட்டத்தால்  வீழ்த்தப்படுவார்கள்.

– அரவிந்த் குமார், ஊடகவியலாளர்

You might also like