கூர்க் முதல் ஸ்பிட்டி வரை: செல்லவேண்டிய 5 இடங்கள்!

இந்தியாவில் பார்க்கவேண்டிய சுற்றுலாத் தலங்களும் இடங்களும் எக்கச் சக்கமாக இருக்கின்றன.

சுற்றுலாவில் விருப்பம் கொண்ட மக்கள் அதிகம் சென்றிடாத பகுதிகளுக்குச் செல்லும்போது அங்கே வாழும் சமூகங்களை ஆதரிக்கலாம்.

அதாவது கர்நாடக மாநிலத்தின் கூர்க்கில் உள்ள காபி தோட்டங்கள் முதல் ஸ்பிட்டி பள்ளத்தாக்கின் விவசாய முறைகள் வரை கற்றுக்கொள்ளலாம்.

பல்வேறுபட்ட நிலப்பரப்புகளைக் கொண்ட இந்தியா, சாகசப் பயணிகளுக்கு ஒரு வளமான அனுபவத்தை வழங்குகிறது.

சமீப ஆண்டுகளில் ஒரு புத்துணர்வுள்ள சுற்றுலா அலை உருவாகியுள்ளது. பொதுவாக குடும்பம் மற்றும் நண்பர்களும் மறக்கமுடியாத தருணங்களைப் பெறுவதற்கு அதிகம் விரும்புகின்றனர்.

உங்கள் வழக்கமான பயணத்தை மாற்றுவது எப்படி? இதோ ஐந்து முக்கியமான இடங்கள்…

1. கூர்க், கர்நாடகா

கர்நாடகத்தின் பனிசூழ்ந்த மலைகளில் அமைந்துள்ளது கூர்க். பசுமையான நிலப்பரப்புகள், பரந்த காபி தோட்டங்களுக்கு பெயர் பெற்றது.

ஆனால் அழகைத் தாண்டி, இது உண்மையிலேயே தனித்துவமான அனுபவத்தை உங்களுக்கு வழங்க காத்திருக்கிறது.

காபி தோட்டங்களை அருகிருந்து பார்ப்பதும், அதன் வழியாக நடந்துசெல்வதும் மிகப்பெரும் அனுபவம். நாம் காபி கொட்டைகளைப் பறிக்கலாம்.

அந்த விவசாய நடைமுறைகளைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு. வேதி உரங்கள் இல்லாத விவசாய முறைகளில் உள்ள சவால்களைப் புரிந்துகொள்ளலாம்.

அந்த நிமிடங்களில் காபி கொட்டைகள் அரைக்கப்பட்டு செய்யப்படும் காபியை அருந்தும்போது வேறெங்கும் கிடைக்காத புத்துணர்வை அடைவீர்கள். அதற்கு முதலில் நீங்கள் செய்யவேண்டியது இதுதான்: கூர்க் செல்லவேண்டும்.

2. ஸ்பிட்டி பள்ளத்தாக்கு, இமாச்சலப் பிரதேசம்

வடக்கு இமயமலையில் மறைந்திருக்கும் தொலைதூர ஸ்பிட்டி பள்ளத்தாக்கின் அழகிலும், அதன் பருவகாலங்களின் மாற்றங்களை ரசிப்பதிலும் உங்கள் மனம் லேசாவதை உணர்வீர்கள்.

இங்கு இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்கின்றனர்.

ஆனாலும் பல தடைகளைக் கடந்து அதில் வெற்றியும் அடைகிறார்கள். உயரமான பகுதிகளில் வாழும் உள்ளூர் சமூகங்கள் இயற்கை விவசாயத்திற்காக தங்களை அர்ப்பணித்தவர்கள்.

இங்கே பயணியாகச் செல்லும் நீங்கள், ஒரு பார்வையாளராக இந்த விவசாய நடைமுறைகளை ஆராயலாம், உள்ளூர் குடும்பங்களுடன் விவசாயப் பணிகளில் ஈடுபடலாம். எல்லாமும் உங்களுக்கு அனுபவம்தான்.

3. அலிபாக், மகாராஷ்டிரா

மும்பையில் இருந்து கொஞ்ச நேரம் படகில் சவாரி செய்தால் வந்துவிடக்கூடிய சுற்றுச்சூழலுக்குப் புகழ்பெற்ற இடம்தான் அலிபாக்.

இந்த இடம் அமைதியையும் மனசுக்கு இதமான உணர்வையும் உங்களுக்கு வழங்கும். இதுவொரு கடலோர நகரம்.

சுற்றுச்சூழலால் ஏற்படும் தாக்கங்களைக் குறைக்கும் இயற்கை எழில்மிகு ரிசார்ட்டுகள் நிறைந்த கடல் நகரம்.

கடல் மீன்களை விதவிதமாக சாப்பிட்டுக் கொண்டே அழகிய கடற்கரைகளில் ஓய்வெடுக்கலாம். அத்துடன் கடற்கரையில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றும் தூய்மைப்பணியில் ஈடுபடலாம்.

இந்த அலிபாக் நகரம், இயற்கை மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான இடமாக இருந்துவருகிறது.

4. வயநாடு, கேரளா

கேரளாவில் உள்ள அழகிய வயாநாடு பகுதி இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களுக்கு தவிர்க்கமுடியாத இடம்.

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இப்பகுதி பல்லுயிர்க் காடுகள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் இயற்கை விவசாயத்திற்குப் புகழ்பெற்றதாக விளங்குகிறது.

இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் உள்ள ரிசார்ட்டுகள் பார்வையாளர்களுக்கு இயற்கையுடன் இணக்கமாக இருப்பதற்கான தருணங்களை வழங்குகின்றன.

அதேநேரத்தில் வழிகாட்டிகளின் உதவியுடன் கூடிய மலையேற்றங்கள் பசுமையான காடுகளை ஆராயவும், பூர்வீக வனவிலங்குகளைக் கண்டறியவும் உங்களை அனுமதிக்கின்றன.

இயற்கை விவசாயத்தின் மூலம் கிடைக்கும் விளைபொருட்களை விற்பனைக்கும் வைக்கிறார்கள். அதில் நமக்குப் பிடித்ததை வீட்டுக்கு வாங்கிவரலாம்.

5. ரிஷிகேஷ், உத்தரகாண்ட்

உலகின் யோகா தலைநகராகக் கருதப்படுகிறது ரிஷிகேஷ். இது வெறும் ஆன்மீக தலம் மட்டுமல்ல.

அதைவிட கூடுதல் சிறப்புகளைக் கொண்டது. கங்கையின் கரையில் அமைந்துள்ள இந்நகரம், நீண்டகாலமாக சுற்றுச்சூழல் சார்ந்த நடைமுறைகளைக் காப்பாற்றி வருகிறது.

இங்குள்ள தங்குமிடங்கள் யோகா, தியானம், இயற்கை உணவுகள் மற்றும் நீர் பாதுகாப்பு முயற்சிகளை வழங்குகின்றன.

மேலும் பயணிகள் யோகா, தியானம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த வகுப்புகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும், ரிஷிகேஷின் புனிதமான மற்றும் இயற்கை அழகைப் பாதுகாப்பதிலும் பங்களிப்பு செய்யலாம்.

– தான்யா

You might also like