வெகுளிப்பெண்ணாக ஊர்வசி காட்டிய ‘வெரைட்டி’!

‘எத்தனை படத்துல தான் இவரு போலீசா நடிப்பாரு’ என்று சில நடிகர்களைப் பார்த்ததும் தோன்றும். அதேபோல நீதிபதி, அரசியல்வாதி, பிச்சைக்காரன் என்பது போன்ற பாத்திரங்களில் குறிப்பிட்ட சில நடிகர்களையே அழைப்பார்கள் உதவி இயக்குனர்கள். கொஞ்சம் உஷாரான நடிப்புக்கலைஞர்கள் ‘ஏற்கனவே இதை பண்ணிட்டனே’ என்று மறுத்துவிடுவார்கள். அவ்வாறு ‘நோ’ சொல்ல முடியாதவர்கள் ஒரே மாதிரியான பாத்திர வார்ப்புகளுக்குள் சிக்கி ஒருகட்டத்தில் வாய்ப்புகளை இழந்து நிற்பார்கள். ஆனால், அது போன்ற தருணங்கள் முதன்மை பாத்திரங்களில் ஏற்று நடிப்பவர்களுக்கு ஏற்படாதா?

நிச்சயமாக அந்த நிலைமை அவர்களை வந்து சேரும். உதாரணமாக, போலீஸ் பாத்திரத்தில் விஜயகாந்த் நடித்த படங்கள் கணிசம் என்றபோதும் சத்ரியன், ஊமை விழிகள், வல்லரசு என்று அப்படிப்பட்ட பாத்திரங்களில் நடித்த படங்களை நம்மால் பட்டியலிட முடியும். இன்றும் கூட, இது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தக்கூடியது. மிகத்திறமை வாய்ந்தவர்கள் அந்த ‘repetition’ தென்படாமல் திரையில் தோன்றுவார்கள்.

அந்த வரிசையில், தொண்ணூறுகளில் நம்மை தனது நடிப்பால் அசரடித்தவர் ஊர்வசி. அதற்கு முன்னர் அவர் பல படங்களில் தலைகாட்டியபோதும், ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்திற்குப் பின்னரே அவருக்கென்று தமிழில் தனி ரசிகர் வட்டம் உருவானது.

’வெகுளிப்பெண்’ பாத்திரம்!

’மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணாக நடித்தார் ஊர்வசி. தாய் தந்தையற்ற அப்பெண் பாட்டியின் அரவணைப்பில் வளர்பவராகக் காட்டப்பட்டிருந்தார். அந்த பாட்டி செய்யும் திருட்டுத்தனங்களைப் பொறுக்க முடியாதவராக, அதேநேரத்தில் அதனைக் கட்டுப்படுத்த முடியாதவராக அமைக்கப்பட்டிருக்கும் அப்பாத்திரம்.

அப்படிப்பட்ட அந்த இளம்பெண் ஒரு இளைஞரோடு பழக நேரும்போது, அவரிடத்தில் தனது பாட்டி பற்றிக் குறைபட நேர்கிறபோது, தன்னையுமறியாமல் நெருங்கிப் பழகுவார். இருவருக்குமிடையே ஒரு பந்தம் முளைக்கும்.

’என்ன நாம ஒட்டிண்டு இருக்கோம்’ என்று நீளும் அந்தக் காட்சியில் கமல்ஹாசனுக்கு இணையாக நடித்திருப்பார் ஊர்வசி. அன்று முதல் அனைவராலும் கவனிக்கப்பட்டார். ஆனாலும், சிறிது இடைவெளிக்குப் பிறகு சுப்பிரமணிய சுவாமி, மகளிர் மட்டும், வனஜா கிரிஜா, மாயாபஜார், ஆயுதபூஜை, புள்ளகுட்டிக்காரன் போன்ற படங்களில் நடித்தார்.

மேற்சொன்ன படங்களில் ஊர்வசியின் பாத்திரம், ‘மைக்கேல் மதன காமராஜன்’னில் வரும் திருபுரசுந்தரியின் சாயலைக் கொண்டிருக்கும். அதற்காக, அதே மாதிரியான தோற்றம், குரல் ஒலிக்கும் தொனி, உடல்மொழி போன்றவற்றை எதிர்பார்க்கக் கூடாது. அவற்றில் வரும் பெண் பாத்திரங்கள் அடிப்படையில் கொஞ்சம் வெகுளித்தனம் உடையவராகத் தெரியவரும்.

கேயார் இயக்கிய ‘வனஜா கிரிஜா’வில் வரும் செல்லம்மா பாத்திரம் அதனை நிறையவே வெளிப்படுத்தியது. இயல்பான பெண்ணுக்குரிய மூளை வளர்ச்சி இல்லாத, அதேநேரத்தில் சாதாரண வாழ்வில் நாம் சந்திக்கிற ஒருவராக வடிவமைக்கப்பட்டிருந்தது அப்பாத்திரம். அதனால் விளையும் கூச்சலும் குழப்பமும் திரைக்கதையை மேம்படுத்தியிருந்தது.

அப்படம் தந்த வெற்றியால், ஊர்வசிக்காகவே ‘மாயாபஜார்’ படத்தை உருவாக்கினார் கேயார். பார்த்திபன் இயக்கி நடித்த ‘புள்ளகுட்டிக்காரன்’ படத்தில் ‘மெட்டி மெட்டி வெள்ளி மெட்டி’ பாடலில் அந்த உணர்வே பிரதானமாக இருக்கும்.

அந்த காலகட்டத்தில் ஊர்வசி நடித்த ஆயுதபூஜை, தாய்க்குலமே தாய்க்குலமே, அருவா வேலு, மன்னவா, எட்டுபட்டி ராசா போன்ற பல படங்களில் அது போன்ற சித்தரிப்பைக் காண முடியும். ஆனால், ரசிகர்கள் அதனை எளிதில் கண்டுபிடிக்க முடியாதவாறு நடித்திருப்பார்.

அதற்கேற்ப, அப்பாத்திரங்கள் அனைத்தும் ‘வெரைட்டி’யாக அமைந்திருந்தன. பின்னணி வேறாக இருந்தாலும், படம் பார்ப்பவர்களை ஈர்க்க அந்த வெகுளித்தனம் ஒரு ஆயுதமாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்தார் ஊர்வசி.

அவற்றில் குறிப்பிடத்தக்கது ‘இரட்டை ரோஜா’.

’இரட்டை ரோஜா’ தந்த வெற்றி!

கணவன், இரண்டு குழந்தைகள் என்று மகிழ்ச்சியான வாழ்வை மேற்கொண்டு வரும் ஒரு நடுத்தர வயதுப் பெண், தனது பேராசை காரணமாகச் சில முடிவுகள் எடுப்பார். அவை எல்லாம் கணவரை எரிச்சல்படுத்துவதாக அமையும். ஒருகட்டத்தில் கணவரை விரும்பும் ஒரு தொழிலதிபரின் மகளால் கிடைக்கும் பணத்திற்காக, மனைவி எனும் இடத்தைத் துறக்கத் தயாராவார். குழந்தைகளோடு கொண்டிருக்கும் உறவை விடச் சமூகத்தில் கிடைக்கும் ‘பணக்காரி’ அந்தஸ்தே பெரிதென்று மாறுவார். அதனால் ஏற்படும் விளைவுகளை அந்த மனைவி உணர்ந்தாரா என்று சொல்லும் ‘இரட்டை ரோஜா’ படத்தின் மீதி.

இப்படத்தில் கணவராக ராம்கி, மனைவியாக ஊர்வசி, பணக்காரத் தொழிலதிபரின் மகளாகக் குஷ்பு ஆகியோர் நடித்திருந்தனர். தெலுங்கில் ஜகபதி பாபு, ஆம்னி, ரோஜா நடிப்பில் வெளியான ‘சுபலக்னம்’ படத்தின் ரீமேக் இது. அப்படமும் கூட ‘இன்டீசண்ட் புரபோசல்’ எனும் ஆங்கிலப் படத்தின் தழுவல் தான்.

ஒரு கதை எத்தனை முறை பிரதியெடுக்கப்பட்டாலும், அத்திரைப்படத்தில் தலைகாட்டும் நடிப்புக்கலைஞர்களால் வேறொன்றாக உருமாறும். அந்த மாயாஜாலம் ‘இரட்டை ரோஜா’விலும் நிகழ்ந்தது.

மிகுந்த புத்திசாலியாக, குயுக்தி மிக்கவராக, பணத்தை அடைய எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பவராக உள்ள ஒரு பாத்திரம், கிளைமேக்ஸில் தான் தனது முட்டாள்தனத்தை, வெகுளித்தனத்தை, யதார்த்தத்திற்குப் பொருந்தாத சிந்தனையைக் கைகொண்டிருந்ததை உணரும்.

இப்படியொரு கதையைக் கொண்ட திரைப்படம் ரசிகர்களால் வரவேற்கப்படாமல் போனால்தான் ஆச்சர்யப்பட வேண்டியிருக்கும்.

1996 ஏப்ரம் 5-ம் தேதியன்று ‘இரட்டை ரோஜா’ வெளியானது. அதே மாதத்தில் மாண்புமிகு மாணவன், சிறைச்சாலை, காலம் மாறிப் போச்சு, ராஜாளி, செங்கோட்டை ஆகிய படங்கள் வந்தன.

அதற்கடுத்த மாதத்தில் இந்தியன் வெளியானது. ஜூலை மாதத்தில் காதல் கோட்டை, சுந்தர புருஷன் படங்கள் வந்தன. ஆகஸ்ட் மாதத்தில் கேயார் இயக்கத்தில் ராம்கி நாயகனாக நடித்த ‘எனக்கொரு மகன் பிறப்பான்’ வெளியானது. பிறகு ‘காதல் தேசம்’, ‘மேட்டுக்குடி’ படங்கள் வந்தன.

இப்படங்களின் வருகைக்குப் பிறகும் ‘இரட்டை ரோஜா’ வெற்றி பெற்றது. இதே கதை இந்தியில் ‘ஜுடாய்’ என்ற பெயரில் அனில் கபூர், ஸ்ரீதேவி, ஊர்மிளா மடோன்கர் நடிப்பில் வெளியாகி ‘ப்ளாக்பஸ்டர்’ ஆனது.  கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பிலும், மலையாளத்தில் சுரேஷ்கோபி நடிப்பிலும் தயாரானது.

‘இரட்டை ரோஜா’ வெளியான காலகட்டத்தில் சுமாரானதாகக் கருதப்பட்டாலும், பின்னாட்களில் அனைவராலும் விரும்பப்படுகிற திரைப்படமாக மாறியது. யதார்த்தத்திற்குத் தொடர்பில்லாத கதை என்றபோதும், இதில் வரும் ஊர்வசியின் பாத்திரம் பேராசையால் அல்லலுறுகிற சில பெண்களின் வடிவமாக அமைந்திருந்தது. அப்படிப்பட்ட பெண்களும் அடிப்படையில் வெகுளிகள்தான் என்று ரசிகர்கள் உணர்ந்ததற்குக் காரணம் ஊர்வசியின் வேறுபட்ட நடிப்பு.

அந்த வகையில் ‘இரட்டை ரோஜா’ படம் கமர்ஷியல் பட வரிசையில் குறிப்பிடத்தக்கதுதான். 

  • மாபா
You might also like