நூல் அறிமுகம்: மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்!
தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் பெ.சுந்தரனாரின் (சுருக்கமாகப் பெ.சு,) அறிவுலகப் பணிகள் குறித்து, ஆய்வாளர் அ.கா. பெருமாள் அவர்கள் ‘மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்’ என்கிற குறுநூலை எழுதியுள்ளார்.
நாற்பத்தி இரண்டு ஆண்டுகளே வாழ்ந்த மனோன்மணியம் சுந்தரனார், நாடகாசிரியர், ஆய்வாளர், உரைநடை எழுத்தாளர் என்கிற பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.
அவர் மொத்தமாக ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியவை 650 பக்கங்களில் அடங்கிவிடும்.
ஆனால், தமிழ் இலக்கிய வரலாற்றின் கால ஆராய்ச்சி, கல்வெட்டு ஆய்வு ஆகியவற்றுக்கு வித்திட்டவர் என்கிற சிறப்புக்கு உரியவர்.
மனோன்மணியம் சுந்தரனாரின் பல்வேறு கலை, இலக்கியத் தொண்டுகளை தமிழுலகுக்கு கவனப்படுத்துகிறது இந்த நூல்.
கல்வெட்டாய்வாளர், தமிழ் இலக்கிய வரலாற்றாய்வாளர், நாடகாசிரியர், அறிவியல் கட்டுரையாளர் என வெவ்வேறு பரிமாணங்களில் அவர் ஆற்றிய தமிழ்ப் பணிகளை இந்நூல், விரிவாக ஆய்வு செய்கிறது.
மிக முக்கியமான ஆளுமையின் பன்முகத்தன்மையை அற்புதமாக அறிமுகப்படுத்துகிறது அறிஞர் அ.கா.பெருமாளின் இக்குறுநூல்.
அபூர்வமான பல தகவல்களை உள்ளடக்கியுள்ள இந்நூல் மனோன்மணியம் சுந்தரனாரை ஆவணப்படுத்தி கௌரவிக்கிறது.
******
நூல்: மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்!
ஆசிரியர்: அ.கா.பெருமாள்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு
பக்கங்கள்: 82
விலை: ரூ.70/-