விவசாயியாக மாறிய ஐ.ஏ.எஸ். அதிகாரி!

25% தண்ணீரைப் பயன்படுத்தி நெல் பயிரிடுவது எப்படி?

பஞ்சாபைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கஹான் சிங் பன்னு, மாநிலத்தின் பிரதானமான நிலத்தடி நீர் குறைபாட்டை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றுள்ளார். அதற்காக அவர் புதுமையான நெல் பயிரிடும் முறையை (SRB) உருவாக்கியுள்ளார்.

அவரது இந்த புதிய செயல்முறை தண்ணீரைச் சேமிக்கிறது. செலவைக் குறைத்து பணத்தை மிச்சப்படுத்துகிறது. மேலும், பாதுகாப்புடன் கூடிய விவசாயத்தை நோக்கி ஒரு மாற்றத்தை விதைக்கிறது.

பஞ்சாபின் வளமான விவசாய கிராமத்தில் பிறந்து வளர்ந்த கஹான் சிங் பன்னுவின் வாழ்க்கையில் விவசாயம் என்பது அவரது குழந்தைப்பருவத்தில் இருந்தே வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்துவருகிறது.

ஒரு காலத்தில் பருவமழைக் காலத்தில் பசுமையான நெல் வயல்கள் நிரம்பிய இடத்தில், நீர்வளம் குறையும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் ரொட்டிக்கூடை என அழைக்கப்படும் பஞ்சாப் மண்ணில், தற்போது நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது. வேகமாகக் குறைந்துவரும் நிலத்தடி நீர்மட்டத்தால் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது பஞ்சாப்.

மத்திய நிலத்தடி நீர்வாரியத்தின் சமீபத்திய தரவுகள், 2039 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் நிலத்தடி நீர்மட்டம் 1,000 அடிக்குக் கீழே குறையக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

“பல ஆண்டுகளாக நிலத்தடி நீர் சுரண்டப்படுவதால் இந்த ஆபத்து ஏற்படுகிறது” என்று கஹான் சிங் சுட்டிக்காட்டுகிறார்.

தற்போது, ​​பஞ்சாபின் மொத்த பரப்பளவில் 87 சதவீதத்தில் காரீப் பருவத்தில் நெல் பயிரிடப்படுகிறது.

நாட்டில் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சும் மாநிலம் இதுதான். அதில் 97 சதவீதம் பாசனத்திற்காகப் பயன்படுகிறது. குறிப்பாக நெல்லுக்கு பயன்படுத்தப்படுகிறது.

கஹான் சிங், தனது கிராமமான ஜெய் நகரில் நிலத்தடி நீர்மட்டத்தில் ஏற்பட்ட கடுமையான சரிவை நேரில் கண்டார்.

இப்பகுதியை பாதிக்கும் தண்ணீர்ப் பிரச்னையையும் நன்கு அறிந்திருந்தார். நீர்மட்டம் வீழ்ச்சியடைவது பயிர்களை மட்டுமல்ல, விவசாயத்தை நம்பியிருக்கும் மக்களையும் பாதிக்கிறது.

இந்நிலையில், விவசாயத்தில் வலிமையான பின்னணியைக் கொண்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கஹான் சிங், நெல் பயிரிடுவதற்கான தனது புதிய முறை மூலம் நம்பிக்கையைத் தருகிறார். இது விவசாயத்தில் நீர் பயன்பாட்டை 25 சதவீதமாகக் குறைக்கிறது.

1996ல் ஐஏஎஸ் அதிகாரியான கஹான் சிங், பஞ்சாபின் வேளாண் செயலாளராக பணியாற்றினார். பின்னர் பல சிறப்புமிக்க பணிகளுக்குப் பிறகு 2020ல் ஓய்வு பெற்றார்.

“சமீபகாலமாக பஞ்சாப் மாநிலத்தில் நீர்நிலைகளில் தண்ணீரின் இருப்பு நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. பெரும்பாலும் நெல் சாகுபடி, ஆனால் இது அந்தப் பகுதிக்கு சொந்தமானதல்ல. கடந்த சில ஆண்டுகளாக அவை தொடர்பான தகவல்கள் கவலையளிக்கின்றன” என்கிறார் அவர்.

இந்த நெருக்கடி அவரை செயல்படத் தூண்டியது. வளமான நெல் உற்பத்தி தொடர்ந்து குறைந்துவருவதை வெறுமனே பார்ப்பதற்குப் பதிலாக, நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயல்பாடுகளில் கவனம் செலுத்தினார்.

மேலும், விவசாயத்தை நிலைநிறுத்துவதற்கான தீர்வை உருவாக்குவதில் கஹான்சிங் ஈடுபாடுகாட்டினார்.

விவசாயத்தில் நீண்டகால அனுபவத்துடன் 64 வயதான அவர், படுகைகளில் நெல் விதைத்தல் என்ற நுட்பத்தை உருவாக்கினார். இம்முறை விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரைக் கணிசமாகக் குறைத்து, 75 சதவீதம்வரை சேமிக்கிறது.

“நெல் விவசாயத்திற்கு அதிக அளவு தேங்கி நிற்கும் நீர் தேவைப்படுகிறது. ஒரு கிலோ கிராம் அரிசியை உற்பத்தி செய்ய 4,000 லிட்டர் வரை பயன்படுத்தப் படுகிறது.

களை வளர்ச்சியை தடுப்பதற்காக பயிர் வளரும் வரையில் வயல்கள் நீரில் மூழ்கடிக்கப்படுகின்றன. இது கவனக்குறைவாக நிலத்தடி நீரை வடிகட்டும் ஒரு நடைமுறை” என்று அவர் விளக்குகிறார்.

தன் விவசாய அறிவைப் பயன்படுத்தி கஹான் சிங், உள்ளூர் விவசாயக் கருவிகள் உற்பத்தியாளர்களுடன் இணைந்து பணியாற்றினார். அவர்களுடன் சேர்ந்து SRB கருவியை உருவாக்கினார்.

ஒரே நேரத்தில் பாத்தி தயாரிக்கவும், நெல் விதைகளை நடவும் பயன்படும் ஓர் இயந்திரம். இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவரே விளக்குகிறார்:

“இயந்திரம் வயலில் பாத்திகளைத் தயாரித்து, ஒரே நேரத்தில் பாத்தியில் விதைகளை நடுகிறது.

எனவே, வயலை உழுத பிறகு இயந்திரத்தை பணியாற்றவிடுகிறோம். அடுத்து விதைகள் முளைக்கும்போது, ​​பாத்திகளின் வரப்புகளில் மட்டுமே தண்ணீரை விடுகிறோம்” என்றார்.

இதன் விளைவாக, நெல் சாகுபடிக்கு பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் தண்ணீரில் 25 சதவீதம் மட்டுமே தேவைப்படுகிறது. அதாவது, வழக்கமான முறைகளிலிருந்து இந்த புதிய முறைக்கு மாறுவது விவசாயிகளுக்கு சவாலாக இருந்தது.

“விதைகள் களைகளைக் கொன்றவுடன், நெல் சுமார் 100 நாட்களுக்குள் செழித்து வளரும். இந்த நுட்பத்தில் எனது அனுபவம் அற்புதமானது” என்று அவர் பெருமிதம் கொள்கிறார்.

சமீபத்தில் நெல் பயிரிடும் பருவத்தில், பஞ்சாப் முழுவதும் 12 சோதனைத் தளங்களில் கஹான் சிங் உருவாக்கிய புதிய நுட்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இது நீர்ப் பாதுகாப்பு மற்றும் நெற்பயிர் உற்பத்தியில் சிறந்த முடிவுகளை வழங்கியுள்ளது.

நன்றி: திபெட்டர் இந்தியா

You might also like