ஏப்ரல் 2: ‘பையா’ வெளியாகி 15 ஆண்டுகள்!
பயணம், காதல், துள்ளல் என இப்படத்தில் வசனம் எழுதியது மறக்க முடியாத அனுபவம். இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தை இயக்குனர்களே பாராட்டிய படம்.
முழுக்க முழுக்க ‘ரோட் முவி’ என்பது அசாத்திய செயல். ஷாட் பகுப்பில் ஏற்கெனவே பழகிய விதமாக இல்லாமல் புதுமையைச் செய்திருப்பதை தொழில்நுட்பம் அறிந்தவர்கள் பலரும் உணர்ந்து பாராட்டினர்.
இரண்டரை மணி நேரம் காதல் உணர்வில் லயிக்க வைத்த படம். வசனத்தின் மூலமாகவே திரைக்கதை நகரும். அந்த விதத்தில் இது ஒரு குறிப்பிடத்தகுந்த திரைக்கதை அமையப் பெற்ற படம்.
தெலுங்கில் ‘ஆவாரா’ என்ற பெயரில் வெளியாகி அங்கும் வெற்றி பெற்றது.
கலைஞர் தொலைக்காட்சியில் இன்றும் இப்படம் திரையிடப்பட்டால் அவ்வளவு பேர் பார்க்கிறார்கள். யூட்யூபிலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
கார்த்தி, தமன்னாவின் இளமை. அதுவும் கார்த்தியை ஸ்டைலிஷ் லுக்கில் ஆக்ஷ்ன் ஹீரோவாக களமிறங்கிய படம்.
அதுவரை இருந்த கார்த்தியைத் தோற்றத்திலும் நடிப்பிலும் முற்றிலுமாக மாற்றி இருந்தார் இயக்குனர் லிங்குசாமி.
கார்த்தியின் கமர்சியல் வெற்றிப் படங்களின் தொடக்கம் ‘பையா’ தான். தமிழ்நாட்டின் பிடித்த கதாநாயகிகள் பட்டியலில் தமன்னாவும் இணைந்தது இப்படத்தின் மூலமே.
யுவனின் இசை
முத்துக்குமாரின் பாடல்கள்
‘என் காதல் சொல்ல நேரமில்லை’ பாடலை மறக்க முடியுமா?
மதியின் ஒளிப்பதிவு
ஆண்டனியின் படத்தொகுப்பு
இடைவேளை ஆக்சன் காட்சியை விட முடியுமா?
“அவங்க உன்ன தேடி வரல… என்ன தேடி வந்திருக்காங்க…”
“யார் அவங்க… எதுக்கு உன்னை தேடி வராங்க…”
“போக போக தெரியும்…” இடைவேளை இப்படி விடப்படும்.
எல்லாமே க்ளாஸ்.
படத்தில் பல வசனங்கள் குறிப்பிட்டுப் பாராட்டப்பட்டன. பத்திரிகைகளும், பலரும் பாராட்டிய வசனம் இது.
தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறும் தமன்னாவை உயரமான மலை உச்சிக்கு அழைத்து வந்து அவர்கள் கடந்து வந்த பெங்களூரு நகரைக் காட்டி நாயகன் இப்படிச் சொல்லுவான்.
“வந்த வழியில் எவ்வளவு மேடு பள்ளம். லைஃபும் அப்படித்தாங்க ….
அங்க பாருங்க நாம கடந்து வந்த ஊர்… இங்க இருந்து பார்க்கும்போது எவ்வளவு சின்னதா தெரியுது… அப்படிதாங்க நம்ம பிரச்சினைகளும்… பக்கத்தில் வச்சு பார்த்தா பெருசா தெரியும். கொஞ்சம் தள்ளி வச்சுப் பாருங்க… எல்லாமே சின்னதா தெரியும்…”
தமன்னாவுக்குப் பிடித்த வசனமாக ஒரு நேர்காணலில் அவர் குறிப்பிட்டது:
நாயகியை அவளுடைய பாட்டியின் பணக்கார வீட்டில் விட்டுவிட்டு ஆற்றமையுடன் ஊருக்குத் திரும்பவும் நாயகன் நண்பர்களிடம்: (அலைபேசியில்)
“பெங்களூர்ல இருந்து பாம்பே வரைக்கும் இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டிருக்கேன். அது ஒரு தூரமாவே தெரியல… இப்ப அவளை வீட்ல விட்டுட்டு கேட் வரைக்கும்தான்டா வந்துருக்கேன்… இந்த தூரம் பெரிய தூரமா இருக்குடா… தாங்க முடியலடா என்னால” என்று கண் கலங்குவான்.
“எப்பவும் மொத அடி நம்ம அடியா இருக்கணும்…”
இப்படி நிறைய….
*
– பிருந்தா சாரதி