எனக்குப் பிடித்த மக்கள் திலகத்தின் திரையிசைப் பாடல்!

நினைவுகளைப் பகிர்ந்த வைகோ

மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ எம்.ஜி.ஆர்., கலைஞரைப் பற்றிப் பகிர்ந்து கொண்டவை.

எம்.ஜி.ஆர். பற்றி வைகோ:

எம்.ஜி.ஆர். படங்களில் ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தைப் போன்றதொரு படத்தை யாரும் எடுக்க முடியாது.

எம்.ஜி.ஆர். அவர்கள் சீனிவாசனுக்கு கார் பரிசளிக்க வந்தபோதுதான், சீனிவாசன் என்னை எம்.ஜி.ஆரிடம் முதன்முதலில் அறிமுகப்படுத்தினார்.

அதன்பிறகு, நான் திமுகவில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், ஒரு நாள் நூலகத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தபோது, அப்போது நூலகத்திற்கு சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வந்திருந்தார்.

அவருடன் வந்த மோகன் ரங்கன் எம்.பி, “இதுதான் கோபால்சாமி” என்று என்னை அவருக்கு நினைவூட்டினார்.

ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்ததே எம்.ஜி.ஆர்.தான்.

தமிழ்நாட்டு அரசியலில் பாடல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அதில் எம்.ஜி.ஆர். பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் “அச்சம் என்பது மடமையடா.. அஞ்சாமை திராவிடர் உடைமையடா.. என்ற பாடல்.

இன்றளவும் எம்.ஜி.ஆரின் இத்தகைய பாடல்கள் கேட்போருக்கு எழுச்சியை உண்டாக்கும்.  

கலைஞர் பற்றி வைகோ:

வை.கோபால்சாமி என்ற பெயரை வைகோ என மாற்றியது கலைஞர் தான். ஒருமுறை அகில இந்திய அளவிலான அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் குழு நடந்தபோது நான் தொலைவில் அமர்ந்திருந்தேன்.

அப்போது, வி.பி.சிங் அருகில் அமர்ந்திருந்த கலைஞர் அவர்கள், தம்பி ‘வைகோ’விற்கு என்று எழுதினார்.

என்னுடைய பாட்டனார் பெயர் கோபால்சாமி. அதைதான் எனக்கு வைத்திருந்தார்கள். ஆனால், அதை வைகோ என்று மாற்றிச் சூட்டியது கலைஞர் தான்.

கலைஞர் என் மீது எல்லையற்றப் பாசம் வைத்திருந்தார். பல நேரங்களில் என்னுடன் பேசும்போது, அவருடைய மனதில் இருப்பதை வெளிப்படையாக என்னுடன் பகிர்ந்து கொள்வார். அந்த அளவிற்கு என்னுடன் நெருக்கம் பாராட்டினார்.

நான் வளர வேண்டும் என்று நினைத்தவரும் கலைஞர் தான். என்னை வளர்த்துவிட்டவரும் கலைஞர்தான். என்னை மூன்றுமுறை ராஜ்யசபாவிற்கு அனுப்பியவரும் கலைஞர்தான். என்னுடைய இத்தகைய வளர்ச்சிக்கு காரணமும் அவர்தான்.”

– வைகோவின் வலையொலிப் பேச்சிலிருந்து ஒரு பகுதி.

You might also like