தோல்வி தான் வெற்றியின் மிகப்பெரிய உந்துதல்!

நூல் அறிமுகம் : தோற்றாலும் விடமாட்டேன்!

தோல்வி தான் ஒரு வெற்றியின் மிகப்பெரிய உந்துதல் என்பதற்கு தங்கள் அனுபவத்தையும் அந்த கடினமான சூழலை கடந்து எப்படி வெற்றியை அடைந்தார்கள் என்பதையும் 40 வெற்றியாளர்கள் பற்றிய கட்டுரைகள் தொகுத்து தரப்பட்டுள்ளது.

ஒவ்வொருவருமே தங்களின் முயற்சியைக் கைவிடாமல் தோல்வியுடன் பெரும் போராட்டத்தை வென்று வெற்றியை நிலைநாட்டி இருக்கிறார்கள்.

எந்த வெற்றியாளர்கள் பற்றியும் வெளி உலகத்திற்கு அவர்களின் வெற்றியின் வெளிச்சத்தை மட்டுமே காட்டுவார்கள்.

ஆனால், அவர்கள் கீழே இருந்து எவ்வாறு மெல்ல மெல்ல மேலே உயர்ந்தார்கள் என்பதை கட்டுரையில் கூறியிருப்பது வாசிக்கும் நமக்கும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையையும் தருகிறது .

அனைவருமே தங்கள் தோல்விகளை எவ்வாறு மாற்றி அமைத்து வெற்றியை ருசித்தார்கள் என்பதின் தொகுப்பு இந்நூல்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கூட தாங்க மாட்டான் என்பவர்களுக்கு மத்தியில் 76 வயது வரை தன் விடாமுயற்சியால் கருந்துளை ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்தவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

சார்பியல் கோட்பாட்டை கண்டுபிடித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் வெற்றிக்குப் பின்னால் மிகப்பெரிய தோல்விகளும் அவமானங்களும் இருந்தாலும் எதைக் கண்டும் தொலைந்து விடாத உழைப்பால் தன் வெற்றியை நிலை நாட்டியிருக்கிறார்.

கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஹார்மோன் பிரச்சனையால் தன் உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டோம் பல போராட்டங்களுக்குப் பிறகு புகழ்பெற்ற கால்பந்து வீரராக உலகமே கொண்டாடுகிறது.

படிப்பிற்கும் தனக்கும் ரொம்ப தூரம் என்று கூறும் சீனாவைச் சேர்ந்த ஜாக் மா மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனராக மாறி இருக்கிறார்.

படிப்பில் ஆர்வம் இல்லாத பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக தன் இளம் வயதிலேயே வியாபாரத்தின் மீது தன் கவனத்தை செலுத்தி இருக்கிறார் பல சிறு சிறு தொழில்கள் செய்து பின்னர் ஏமன்நாட்டில் எண்ணை நிறுவனத்தில் வேலை பார்த்து ரிலையன்ஸ் என்ற பெரும் சாம்ராஜ்யத்தின் ஆளுமையாக திகழ்ந்தவர் திருபாய் அம்பானி.

விஷ ஜுரத்தால் தன் காது கேட்கும் திறமையை இழந்து 12-வது வயதிலேயே நாளிதழ்கள், மிட்டாய் போன்ற பற்றி வியாபாரம் செய்து பின்னர் ரயிலில் நாளிதழ்களை விற்கும் பணியை செய்திருக்கிறார்.

பின்னர் ரயிலிலேயே தன் அச்சு வேலையையும், ஆராய்ச்சி செய்யும் ஆர்வமும் ஏதாவது ஒன்றின் மீது மட்டுமல்லாமல் பல பொருட்களின் மீது தன் ஆராய்ச்சியை தொடர்ந்து இருக்கிறார் .

அறிவியல் ஆராய்ச்சி உலகத்தில் தாமஸ் ஆல்வா எடிசன் இல்லாமல் அறிவியல் உலகம் இல்லை என்ற அளவிற்கு அவரின் பெயர் நிலைத்திருக்கிறது.

மிகவும் வசதியான வீட்டில் பிறந்து வளர்ந்தாலும் தாய் தந்தை தனித்தனியாக பிரிந்ததால் அந்த பாசத்திற்காக ஏங்கி தன் பாட்டியுடன் வளர்ந்த ரத்தன் டாடா, ஹார்வர்ட் யூனிவர்சிட்டியில் மேலாண்மை படிப்பை முடித்து ஜி.ஆர்.டி டாட்டாவின் அழைப்பால் ஸ்டீல் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளர்களுடன் தானும் ஒரு தொழிலாளராக தன் பயணத்தை ஆரம்பித்தவர் பல போராட்டங்களுக்குப் பிறகு டாட்டா நிறுவனத்தை திறம்பட நிர்வகித்தவர்.

தன் தந்தையின் விடாத அச்சுறுத்தலும் சித்ரவதையுமே தன்னை வீட்டை விட்டு வெளியேற வைத்தது என்றும் தன் சகோதரன் உடன் சேர்ந்து முயற்சி செய்து கார்ட்டூன் வரையும் ஓவியக் கூடம் ஆரம்பித்து, பின்னர், நடிக்க முயற்சி செய்தது, கூட்டாக சேர்ந்து அனிமேஷன் தொழிலை ஆரம்பித்திருக்கிறார்.

கூட்டாளிகள் ஏமாற்றிவிட்டு சென்றதும் யதார்த்தமாக எலியின் ஓவியத்தை வரைந்து நம்பிக்கையுடன் சென்ற இடமெல்லாம் தோல்வி மட்டுமே கிடைத்தது.

பல நிராகரிப்புகளுக்கு பின் திரையில் தோன்றி மிகப்பெரிய வெற்றியை தந்தது அதுதான் மிக்கி மவுஸ். இன்று வால்ட் டிஸ்னி உலகெங்கும் பிரபலமாக இருப்பது அவரின் விடாமுயற்சியும் தோல்வியையும் கடந்து வந்ததால் தான் .

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பல போராட்டங்களுக்குப் பிறகு தன் வெற்றியை நிலைநாட்டினாலும் திருமணம் முடித்து குழந்தை பிறந்த பின்பு தன் இரட்டை குழந்தைகளை தன் கணவரின் பராமரிப்பில் விட்டுவிட்டு தொடர் பயிற்சியால் பல பதக்கங்களைப் பெற்று வெற்றி கண்டவர்.

தொடர்ந்து இருபத்தைந்து வருடங்களாக ஒரு தொடர் நிகழ்ச்சியாளராக அமெரிக்க தொலைக்காட்சியில் பிரபலமான ஓபரா வின்ஃபிரே, ஹாரி பாட்டர் என்னும் மாயாஜால கதையால் பிரபலமான ஜேகே ரௌலிங், தன் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி பிரபல பாப் இசை பாடகியாக வலம் வந்த மடோனா அவர்கள் தங்களின் விடாமுயற்சியும் தோல்விகளையே வெற்றிகளாய் மாற்றும் யுக்தியையும் கையாண்டு தங்களுக்கு என தனி ஒரு இடத்தைப் பிடித்துள்ளனர்.

ஃபோர்ட் நிறுவனத்தின் வெற்றியாளராக அறியப்படும் ஹென்றி ஃபோர்ட் பலமுறை ஆரம்பித்த இடத்திற்கு மறுபடியும் வந்ததாக கூறுகிறார். இருந்தும் தன் கனவு நனவாகப் போராட்டத்துடன் தோல்வியை வென்று வெற்றியைச் சொல்லி இருக்கிறார்.

தான் மிகச்சிறந்த தொழிலதிபராக ஆனதற்கு உறுதுணையாக இருந்தது தோல்விகளும் சறுக்கல்களும் தான் என்கிறார்.

சிரிப்பு மன்னன் என்று அழைக்கப்படும் சார்லி சாப்ளின் வாழ்க்கை முழுவதும் பெரும் துன்பம் மட்டுமே அனுபவித்திருக்கிறார்.

இசை உலகின் ஜாம்பவானாக வலம் வரும் ஏ.ஆர்.ரஹ்மான், “தன் வெற்றிக்கு தன் தாயின் உறுதுணையும் விடாமுயற்சியும் ஆஸ்கர் விருதுவரை அழைத்துச் சென்றது என்றாலும் அதற்கு என் கற்றலும் தோல்விகளுமே காரணம்” என்கிறார்.

அழகு மட்டுமே சினிமாத் துறையில் சாதிக்கும் என்று என்றதை மாற்றி தன் திறமையால் சாதித்த நவாசுதீன் சித்திக்,

தன் ஏழ்மையும் இயலாமையும் மற்றவர்கள் தன்னை ஏளனமாக பார்த்தாலும் விடாமுயற்சியால் மிகப்பெரிய கால் பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தன் அபரிமிதமான உடல் உயரமே தன் திறமைக்கு எதிரியாக நின்றது பல வீழ்ச்சிக்குப் பிறகு தன் வெற்றியை நிலைநாட்டி இருக்கும் அமிதாபச்சன் தன் உயரத்தையே மிஞ்சும் தோல்விகளை வென்றிருக்கிறார்.

ஹாலிவுட் தனக்கென நிலையான இடத்தைப் பிடித்த சில்வர்ஸ்டர் ஸ்டோலன், ஸ்டீவ் ஜாப்ஸின் ஆப்பிள் நிறுவனம், ஒரு சாதாரண விவசாயி மகனாக பிறந்தது என் பல தோல்விகளுக்கு அடியெடுத்து வைத்தது என்பவர் பின்னாளில் தன்னிறக்க குணத்தால் கடன்காரனாகி அதிலிருந்து மீண்டு வந்து தன் 30-வது வயதில் சட்டம் படித்து அரசியலில் ஈடுபட்டு விடாத முயற்சியால் பின்னர் அமெரிக்காவின் சிறந்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆபிரஹாம் லிங்கன்.

இன்று ஆக்சன் கிங் காக வலம் வரும் ஜாக்கி சான் தன்னை ஒரு நடிகனாக நிலை நிறுத்த அவர் சந்தித்து தோல்விகளும் அவமானங்களுமே கை கொடுத்தது என்கிறார்.

ரயில் விபத்தில் தன் காலை இழந்து சேர்க்கை கால் மூலமாக எவரெஸ்ட் முதற்கொண்டு ஆஸ்திரேலியா ஐரோப்பா தென் அமெரிக்கா இந்தோனேசியா போன்ற நாடுகளில் உள்ள சிகரங்களையும் தன் விடாமுயற்சியால் ஏறி சாதனை படைத்த அருணிமா சின்காவின் மனோபலமும் பிறக்கும் பொழுதே இரண்டு கைகளும் கால்களும் இன்றி பிறந்த நிக் வுஜிசிக் கின் வாழ்க்கை தளர்ந்து போயிருக்கும் அத்தனை மனிதர்களுக்கும் மிகப்பெரிய உந்து சக்தியை கொடுக்கும் என்பது மிகையல்ல.

– வே.சுகந்தி

******

நூல் : தோற்றாலும் விடமாட்டேன்
ஆசிரியர்: நசீமா ரசாக்
பக்கங்கள்: 164
விலை: ரூ. 210/-

You might also like