ஒரு சினிமாவை வந்த சூட்டோடு பார்த்து திகட்டத் திகட்ட பாராட்டுகிறோம் அல்லது அதன் எதிர்முனையில் வண்டை வண்டையாகத் திட்டுகிறோம். பிறகு அதை அப்படியே மறந்து விடுகிறோம்.
ஆனால், அதே சினிமாவை மீண்டும் மீண்டும் நிதானமாக பார்க்கும் சந்தோஷமான அல்லது கொடூரமான நிலைமை எத்தனை பேருக்கு வாய்க்கும்?
சினிமா பற்றி எழுதுபவர்களுக்கு இந்த நிலைமை உத்தரவாதமாக ஏற்படும்.
அந்த அனுபவத்தில் சொல்கிறேன். ஒரு சினிமாவில் பல விஷயங்களை நாம் முதல் பார்வையில் தவற விடுகிறோம்.
இரண்டாம், மூன்றாம் பார்வைகளில் கூட இது சர்வ நிச்சயமாக நிகழும்.
அது கிளாசிக் சினிமா என்று மட்டுமல்ல. வழக்கமான டெம்ப்ளேட்டில் அமைந்த அப்பட்டமான மசாலா திரைப்படங்களுக்கு கூட இந்தக் காரணம் பொருந்தும்.
ஒன்று செய்யுங்களேன்.
நீங்கள் மிகவும் வெறுத்த ஒரு சினிமாவை இப்போது வலுக்கட்டாயமாக மீண்டும் நிதானமாக ஒருமுறை பாருங்களேன்.
அத்தனை வெறுப்பையும் தாண்டி ஒரேயொரு சுவாரசியம் கூட அதில் இல்லாமல் போகாது.
“நான் ஏம்ப்பா நடுராத்திரில சுடுகாட்டுக்குப் போகணும்” என்று கேட்டால் பதில் இல்லை.
கல்லா கட்டும் கமர்சியல் நோக்கத்தைத் தாண்டி, அது அப்பட்டமான மசாலா திரைப்படமாக இருந்தாலும்கூட அதில் ஏதாவதொரு சுவாரசியமான விஷயம் அல்லது விஷயங்கள் ஒளிந்திருக்கும். அதற்குப் பின்னால் ஒன்றிற்கு மேற்பட்ட மூளைகளின் உழைப்பு இருக்கும்.
அந்தப் படைப்பு, பல முறை அடித்து அடித்து திருத்தி எழுதப்பட்டிருக்கும்.
“இந்த இடத்தை ஆடியன்ஸ் நிச்சயம் ரசிப்பாங்க” என்று உள்ளுக்குள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கும். ஆனால், நுகர்வோன் என்ன செய்கிறான் என்றால் இத்தனை விஷயங்களையும் ஓரம்கட்டிவிட்டு ‘மொக்கை’ என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுகிறான்.
சில கமர்சியல் திரைப்படங்களை மீண்டும் மீண்டும் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கும். எப்படி இந்த விஷயங்களை முந்தைய பார்வைகளில் தவற விட்டோம் என்று.
சில ரசிகர்களாவது இதைக் கண்டுபிடித்து ரசிப்பார்கள் என்கிற நம்பிக்கையோடு ஒரு படைப்பாளி உருவாக்கி வைக்கும் அந்த மெனக்கெடல் இருக்கிறதல்லவா? அது பாராட்டுக்குரியது.
கற்களின் நடுவே அரிசியை தேடும் அபத்தமான விளையாட்டாக இது இருந்தாலும் அந்த அரிசி ஏன் ஆரம்பத்திலேயே தெரியாமல் போனது என்று வியப்பு கலந்த குற்றவுணர்வு ஏற்படுகிறது.
சினிமா என்றல்ல, பல விஷயங்களை இப்படித்தான் நாம் மேம்போக்காக அணுகிவிட்டு, ஆனால், தீர்மானமான தீர்ப்புகளை எழுதி விடுகிறோம்.
– நன்றி: சுரேஷ் கண்ணன் முகநூல் பதிவு