காந்தி நினைவாக அன்னதானம் செய்த கே.சுப்பிரமணியம்!

மகாத்மா காந்தி 1948-ல் கொலையுண்டது சுப்ரமணியம் அவர்கள் உள்ளத்தை மிகவும் பாதித்தது. அதனால் மகாத்மாவின் அறநெறிகளை வலியுறுத்தும் வண்ணம் ஒரு படத்தை எடுக்க நினைத்து ‘கீதகாந்தி’ என்னும் படத்தை 1948-லேயே உருவாக்கத் துவங்கினார்.

இந்தப் படத்தில் பி.ஏ.பெரியநாயகிக்குப் பெரிய வேடம் கொடுத்தார். பி.எஸ்.சரோஜா, டி.ஆர்.ராமச்சந்திரன், எம்.ஆர்.எஸ். மணி போன்றோருடன் பிற்காலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த பழனியாண்டி அவர்களையும் நடிக்கச் செய்தார்.

எம்.ஆர்.எஸ். மணி என்பவர் சுப்ரமணியம் அவர்களுடைய ஊரான பாபநாசத்திற்கு அருகில் மாளாபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர். சுப்ரமணியம் அவர்களுக்கு உதவி டைரக்டராகப் பல படங்களில் பணியாற்றியவர்.

இந்தப் படத்தில் லலிதா, பத்மினி, போலோநாத் ஆகியோரின் நடனமும் இருந்தது.

சுப்ரமணியம் அவர்கள் தன் மகள் பத்மாவையும் இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

பத்மாவுக்கு அப்பொழுது ஐந்து வயதுதான். அவருக்காகச் சுப்ரமணியம் அவர்கள் துணைவியார் எழுதிய பாடலைப் பத்மாவே பாடி, அதற்கேற்றபடி நடனமாடவும் வைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களுக்கும் சுப்ரமணியம் அவர்கள் மனைவியார் மீனாட்சி அம்மாளே இசை அமைத்திருக்கிறார். பின்னணி இசை மட்டும் சி.என். பாண்டுரங்கம்.

இந்தப் படத்தை காந்தி இறந்த முதல் நினைவு நாளன்று (1949, ஜனவரி-30) வெளியிட விரும்பி இருக்கிறார். என்ன காரணத்தாலோ வெளியீடு மார்ச் 16-க்குத் தள்ளிப் போய்விட்டது.

இருந்தபோதும், ஜனவரி 30-ம் தேதியன்று, பத்திரிகைக் காட்சி நடத்தி, பெரியவர்களின் தலைத் திதிக்கு அன்ன வினியோகம் வழங்கப்படுவதுபோல பத்திரிகைகளுக்கு அன்ன வினியோகம் செய்தாராம்.

– வலம்புரி சோமநாதனின் ‘தமிழ்ப்பட உலகின் தந்தை டைரக்டர் கே. சுப்பிரமணியம்’ என்ற நூலிலிருந்து…

You might also like