உலக நாடக தினத்தில் தமிழ் நாடகத் தந்தையின் நினைவுகள்!

உலக நாடக தினம் (மார்ச் 27) கொண்டாடப்படும் வேளையில், தமிழ் நாடகத்தின் தந்தையாகப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார் பற்றி அறிந்துகொள்வதற்கு அவரது சில வாழ்க்கைக் குறிப்புகள் மீள்பதிவாக.
***
தமிழ் நாடகங்களை முதன் முதலில் உரைநடையில் எழுதியவர் பம்மல் சம்பந்த முதலியார். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குநர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்.
வாழ்க்கையின் அந்திமக் காலத்திலும், அதாவது தனது 81-வது வயது வரையிலும்கூட நாடகக் கலைக்கு அருந்தொண்டு ஆற்றினார். கண்பார்வை மங்கிய நிலையில், தாம் சொல்லி பிறரை எழுத வைத்து நாடகங்களை உருவாக்கிய அற்புதக் கலைஞர்.
இளமைக்காலம்
சென்னையில் பம்மல் விஜயரங்க முதலியாருக்கும் மாணிக்கவேலு அம்மாளுக்கும் 1873 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பிறந்தார்.
விஜயரங்க முதலியார் முதலில் தமிழ் ஆசிரியராகவும் பின்னர் பள்ளிக் கல்வித்துறையில் ஆய்வாளராகவும் பணியாற்றினார்.
அவரே முன்வந்து தமிழ் நூல்களை வெளியிட்டு வந்தார். அதனால் வீட்டில் ஆங்கில, தமிழ் நூல்களுக்குப் பஞ்சமில்லை. இரண்டாயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இருந்தன.
சிறுபிராயம் முதலே அவற்றை ஒவ்வொன்றாக ஆர்வத்துடன் படித்தார் பம்மல் சம்பந்த முதலியார்.
பின்னர் சட்டக் கல்வி பயின்று வழக்கறிஞரானார்.
1924 முதல் 1928 வரை நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
நாடக எழுத்து
சிறுவயதிலேயே ஆங்கில, தமிழ் நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்ற சம்பந்த முதலியார், மிகப் பழமையான தமிழ் நாடகத்தின் அவலநிலையைக் கண்டு கவலையுற்றார்.
1891-ம் ஆண்டு பெல்லாரி நகரிலிருந்து வந்த கிருஷ்ணமாச்சார்லு என்ற ஆந்திர நடிகர் நடித்த நாடகங்கள் அவருக்கு தமிழ் நாடகங்கள்மீது பிரியம் கொள்ள வைத்தன.
அவரது நாடகக் குழுவில் வழக்கறிஞர்களும், மருத்துவர்களும், பட்டப்படிப்பு முடித்தவர்களும் சேர்ந்திருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.
தமிழகத்திலும் அதுபோல ஒரு நாடகக் குழு அமைக்கத் திட்டமிட்டார் சம்பந்த முதலியார். தமிழ் நாடகங்களில் புதுமையைப் புகுத்தவேண்டும் என்ற ஆவலுடன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து சென்னை ஜார்ஜ் டவுனில் 1891 ஆம் ஆண்டு ஜூலையில் ‘சுகுண விலாச சபை’ என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.
தற்போது அந்த சுகுண விலாச சபையில் பம்மல் சம்பந்த முதலியார் திருவுருவச் சிலை அமைந்துள்ளது.
நாடகத்தில் புதுமை
நாடகம் என்றால் தெருக்கூத்து என்ற மனநிலையே நகரத்தில் வாழ்பவர்களுக்கு இருந்துவந்தது. அந்த நிலையை மாற்றி நகரங்களில் மேடைகள் அமைத்து நாடகங்களை அரங்கேற்றினார்.
பெரிய பதவிகள் வகித்தவர்களையும் உயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் நாடகங்களில் நடிக்க வைத்தார்.
சர்.சி.பி.ராமஸ்வாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார் (எம்.கே.ராதாவின் தந்தை), சர். ஆர்.கே.ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம் போன்ற சமூகத்தில் பெருமனிதர்களாக உயர் பதவிகள் வகித்தவர்களும் பம்மல் முதலியாரின் நாடகங்களில் நடித்தார்கள்.
முதல் நாடகம்
பம்மல் சம்பந்த முதலியாரின் முதல் நாடகம் அவரது 22 வயதில் ‘லீலாவதி-சுலோசனா’ என்ற பெயருடன் அரங்கேறியது. அதைத் தொடர்ந்து எண்பது நாடகங்களை எழுதினார்.
தன் வாழ்நாளில் நாடகக் கலைக்குச் செய்த அரிய பணிக்காக அவருக்கு சங்கீத நாடக அகாதமி விருது, நாடகப் பேராசிரியர் விருது, பத்மபூஷண் என பல விருதுகளையும் பெருமைகளையும் பெற்றார்.
நாடகங்களில் சிலவற்றில் செய்யுள், கீர்த்தனைகளை அவர் அறிமுகப்படுத்தினார். இன்று தமிழ் நாடகங்கள் நவீன நாடகங்களாக வளர்ச்சி அடைந்ததற்குப் பின்னணியில் ஆணிவேராக இருந்தவர் பம்மல் சம்பந்த முதலியார்.
தமிழில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை அதன் சுவை குறையாமல் தந்திருக்கிறார்.
Hamlet, As You like it, Macbeth, Cymbeline, Merchant of Venice என்ற நாடகங்களை அமலாதித்யன், நீ விரும்பியபடியே, மகபதி, சிம்மளநாதன், வணிபுர வாணிகன் என்ற பெயர்களில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார்.
அவரது பல நாடகங்கள் காலவா ரிஷி, சதி சுலோச்சனா, மனோகரா, ரத்னாவளி, யயாதி, ராமலிங்க சுவாமிகள், சந்திரஹரி, ஊர்வசி சாகச, தாசிப் பெண், சபாபதி, வேதாள உலகம் என தமிழ்த் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டு மக்களிடம் வரவேற்பைப் பெற்றன.
– தான்யா
You might also like