ட்ராமா – குழந்தைப்பேறின்மை பிரச்சனையின் இன்னொரு முகம்!

மருத்துவ உலகம் குறித்த திரைப்படங்கள் பார்வையாளர்களின் கவனத்தைக் குவிப்பதில் தடுமாற்றங்களை எதிர்கொள்ளும். அப்படங்கள் பேசும் பிரச்சனைகள் சமகாலத்தைப் பிரதிபலிக்கும்பட்சத்தில், அவற்றின் உள்ளடக்கம் எளிமையாக இருக்கிறபோது, அவை பெரும் வரவேற்பைப் பெறும்.

அந்த வரிசையில் ‘செயற்கை கருத்தரிப்பு’ நுட்பத்தைப் பற்றிப் பேசும் வகையில் குற்றம் 23, காதலிக்க நேரமில்லை, மிரியம் மா, யசோதா உள்ளிட்ட சில திரைப்படங்கள் இதுவரை வந்திருக்கின்றன. அவை வெவ்வேறு வகைமையில் அமைந்திருந்தன.

அவற்றில் ஒன்றாக அமைந்திருக்கிறது தம்பிதுரை மாரியப்பன் இயக்கியுள்ள ‘ட்ராமா’ (Trauma). ஆங்கிலத்தில் இந்த வார்த்தைக்கு ‘அதிர்ச்சி அல்லது சோகத்திற்கு உள்ளாகும் நிலை’ என்று பொருள்.

இந்த படத்தில் விவேக் பிரசன்னா, சாந்தினி தமிழரசன், பிரதோஷ், பூர்ணிமா ரவி, ரமா, மாரிமுத்து, அஸ்வின் நாக், ஈஸ்வர், பிரதீப் கே.விஜயன் உள்ளீட்ட பலர் நடித்துள்ளனர்.

சரி, எப்படி இருக்கிறது ‘ட்ராமா’ தரும் திரையனுபவம்?

‘ட்ராமா’ கதை!

குழந்தைப்பேறு இல்லாமல் சுந்தர் – கீதா (விவேக் பிரசன்னா, சாந்தினி) தம்பதி வருத்தத்தில் இருக்கின்றனர். ஆண்மைக்குறைவால் அவதிப்படும் சுந்தர் அதனை மனைவி கீதாவிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறார். அலுவலக நண்பரான ரகு (அனந்த் நாக்), அந்தப் பிரச்சனையை கீதாவிடம் சொல்லி விளக்குமாறு கூறி வருகிறார்.

இந்த நிலையில், ஒரு குழந்தைப்பேறின்மை சிகிச்சை மையம் குறித்த தகவல் சுந்தருக்குக் கிடைக்கிறது. அங்கு ரகுவை அழைத்துக்கொண்டு செல்கிறார். அங்கிருக்கும் தலைமை மருத்துவர் ஒரு மாத்திரை டப்பாவை கொடுக்கிறார். ’இதனைச் சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும்’ என்று உறுதியளிக்கிறார். கீதாவுக்குத் தெரியாமல் தினமும் அதனைத் தந்து வருகிறார் சுந்தர்.

இந்த நிலையில், கீதா கர்ப்பமுறுகிறார். சுந்தரும் மகிழ்ச்சியடைகிறார். ஆனால், முன்பின் தெரியாத ஒரு நபரிடம் இருந்து வரும் மொபைல் கால் அவர்களது மகிழ்ச்சியைச் சுக்குநூறாக்குகிறது.

எதிர்முனையில் இருந்த நபர் என்ன பேசினார்? அதனால் சுந்தர் – கீதா தம்பதி எதிர்கொண்ட மன அழுத்தம் எத்தகையது என்று சொல்கிறது ‘ட்ராமா’வின் மீதி.

இந்த திரைப்படத்தில் மேற்சொன்ன தம்பதி மட்டுமல்லாமல் இன்னும் சில பாத்திரங்களும் உள்ளன.

பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் இளம்பெண்ணை (பூர்ணிமா ரவி) ஒரு வாலிபர் (பிரதோஷ்) துரத்தி துரத்திக் காதலிக்கிறார். அந்தப் பெண்ணின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநராக (மாரிமுத்து) இருக்கிறார். ஒருகட்டத்தில் மகள் கர்ப்பமுற்றிருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் அவரது தாய் (ரமா) அதனைத் தனது கணவரிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறார்.

இரண்டு வாலிபர்கள் கார் திருட்டில் ஈடுபட முயற்சிப்பது இன்னொரு கதையாக விரிகிறது. மெக்கானிக் (ஈஸ்வர்) ஒருவர் அவர்களைத் திருட்டில் ஈடுபடுமாறு தூண்டி விடுகிறார்.

இக்கதைகளுக்கு நடுவே, இளம் தம்பதியரை மிரட்டிப் பணம் பறித்துக் கொலை செய்யும் கும்பலொன்று நடமாடுகிறது.

வெவ்வேறு திசையில் கிளை விரிக்கும் கதைகளை ஒரு புள்ளியில் கொண்டு வந்து நிறுத்துகிறது ‘ட்ராமா’ திரைக்கதை.

தாக்கம் எத்தகையது?

ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதது போன்று தோற்றம் தரும் நான்கு கதைகளை, அவற்றோடு தொடர்புடைய பாத்திரங்களை அறிமுகப்படுத்திய வகையில் கவனம் ஈர்த்திருக்கிறார் இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன்.

படம் ஓடத் தொடங்கி சுமார் அரை மணி நேரத்திலேயே கதை சொல்லும் திசை நமக்குப் புரிந்துவிடுகிறது. அதற்கேற்றவாறு காட்சிகளை அடுக்கியிருக்கிறார். கதையிலுள்ள முடிச்சுகளை இறுக்குவதில் அபார திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதேநேரத்தில், அந்த முடிச்சுகளை அவிழ்ப்பதில் அவசரம் காட்டியிருக்கிறார். அதுவே இப்படத்தின் மைனஸ்.

போலவே, இரண்டு வாலிபர்கள் கார் திருட்டில் ஈடுபட முயற்சிப்பதாக வரும் காட்சிகள் கொஞ்சம் சிரிக்க வைத்தாலும், இது போன்றதொரு சீரியசாக நகரும் கதையில் ‘அமெச்சூர்தனமாகவே’ தெரிகின்றன.

இவை போதாதென்று பின்பாதியில் வரும் சில காட்சிகள் பழைய திரைப்படங்களை டிவியில் பார்த்தாற் போலிருக்கின்றன. அவற்றைச் சரிப்படுத்தியிருந்தால், இப்படம் தந்திருக்கும் திரையனுபவமே வேறாக இருந்திருக்கும்.

இப்படிச் சொல்லக் காரணம், இதிலுள்ள தொழில்நுட்பக் கலைஞர்களின் பேருழைப்பு.

இந்தக் கதையிலுள்ள ‘த்ரில்’ தன்மைக்கு ஏற்ற, அதோடு நாம் ஒன்றுகிற காட்சியமைப்பைத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அஜித் ஸ்ரீனிவாசன். கலை இயக்குனர் முஜிபுர் ரஹ்மான் அதற்கேற்ற பின்னணியை அமைத்து தந்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர் முகன் வேல், பல காட்சிகளை ‘ஹாஃப் வே’யில் தொடங்கியிருக்கிறார் அல்லது முடித்திருக்கிறார். அது, குறுகிய நேரத்தில் கதையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தத் துணை நின்றிருக்கிறது. ஆனால், பின்பாதியில் அந்த திறமை பளிச்சிடவில்லை.

இப்படத்தில் சண்டைக்காட்சிகள் திருப்தி தரும் விதமாகவே உள்ளன. அதற்காக ஸ்டண்ட் கொரியோகிராஃபர் சுரேஷை பாராட்ட வேண்டும்.

இசையைப் பொறுத்தவரை ராஜ்பிரதாப் ‘ஓகே’ எனும்படியான பங்களிப்பைத் தந்திருக்கிறார். பின்னணி இசையிலும் சரி, பாடல்களிலும் சரி, குறை ஏதும் வைக்கவில்லை.

’மாண்டேஜ்’ ஆக பாடல் காட்சிகள் இருப்பதால், அவை கதை நகர்வுக்கு உதவியிருக்கின்றன.

இது தவிர இன்ன பிற தொழில்நுட்பங்களும் இக்கதையைத் தெளிவாகப் பார்வையாளர்களுக்குச் சொல்லத் துணை நின்றிருக்கின்றன.

நடிப்பைப் பொறுத்தவரை, பெரும்பாலான நடிப்புக்கலைஞர்கள் ‘அளவாக’ நடித்துள்ளனர்.

விவேக் பிரசன்னா, சாந்தினி இருவருமே ‘குழந்தைப்பேறின்மை’ பிரச்சனையால் அவதிப்படும் மேல்தட்டு வர்க்க தம்பதியைச் சட்டென்று நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றனர்.

பூர்ணிமா ரவி, பிரதோஷ் ஜோடி சட்டென்று நம்மை ஈர்க்கிறது. பிரதோஷ் வெவ்வேறு ஹேர்ஸ்டைலில் வந்து போயிருப்பது, படப்பிடிப்பு பல்வேறு காலகட்டத்தில் நடந்திருப்பதைக் காட்டுகிறது. ஆனாலும், ஒப்பனைக்கலைஞர் அது தெரிந்துவிடாமல் சமாளித்திருக்கிறார்.

‘கல்லூரி’ படப்புகழ் மதன் கோபால் மற்றும் அவருடன் வருபவர் இருவருமே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளின் உள்ளடக்கம் ‘ரொம்ப பழசு’ என்றபோதும், அவர்களது நடிப்பு அதனை மறக்கடிக்கிறது.

போலீஸ் அதிகாரியாக வரும் சஞ்சீவ், கான்ஸ்டபிளாக வரும் வையாபுரி இருவருமே பெரிதாகத் திரையில் தங்கள் இருப்பை வெளிப்படுத்தவில்லை.

இவர்கள் தவிர்த்து மறைந்த இயக்குனர், நடிகர் மாரிமுத்து மற்றும் ரமா, அனந்த் நாக், நமோ நாராயணா, பிரதீப் கே.ராஜன், அருவி பாலா உள்ளிட்ட பலர் இதில் உள்ளனர்.

குழந்தைப்பேறின்மை பிரச்சனையும் அதற்குத் தீர்வு காண்பதாகச் சொல்லும் மருத்துவமனைகளும் பெருகியிருக்கும் காலகட்டத்தில், அந்த பின்னணியில் நிகழும் ஒரு குற்றத்தின் கோரமுகத்தைக் காட்டியிருக்கிறது ‘ட்ராமா’. இதனை வெறுமனே கற்பனை என்று ஒதுக்கித் தள்ள முடியாது. அதேநேரத்தில், அந்த அதிர்ச்சியைப் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கும் விதத்தில் கொஞ்சம் ‘செயற்கைத்தனம்’ தலை தூக்கியிருப்பதை இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன் தவிர்த்திருக்கலாம்.

’ட்ராமா’ தரும் திரையனுபவம் அதிர்ச்சி தரும் வகையில் இருப்பதற்கேற்ற ‘செறிவான’ உள்ளடக்கம் அமையப் பெறாதது ஒரு குறையே. பின்பாதி திரைக்கதையில் இயக்குனர் காட்டியிருக்கும் கவனம் போதுமானதல்ல என்பதே அதற்குக் காரணம். அதனைச் சரிப்படுத்தியிருந்தால் இப்படம் ‘திருப்தி’ தரும் த்ரில்லராக அமைந்திருக்கும்..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like