அன்னை மணியம்மையின் தியாக வாழ்வைப் புரிந்துகொள்வோம்!

நூல் அறிமுகம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் தொண்டறம்!

*******
* பெரியாரைத் தவிர எதையும் பெரிதாகக் கருதாத – தொண்டராக, செவிலித் தாயாக, உதவியாளராக, உற்றத் துணைவராக, ஆலோசகராக, தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து மறைந்தவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்!

* அவரின் வாழ்க்கைப் பயணம் பற்றியும் தன்னலமற்ற தொண்டறம் பற்றியும் விளக்கிச் சொல்லும் ஒரு வரலாற்று ஆவணப் படைப்பு தான் இந்த நூல்!

* இந்த நூலை சிறப்பாக படைத்துள்ள ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்கள் தந்தை பெரியாரையும் அன்னை மணியம்மையாரையும் மிகவும் நன்றாக அறிந்தவர்.

ஆசிரியர் அய்யா திராவிட இயக்கத்தின் பல வரலாற்று நிகழ்வுகளின் உயிருள்ள சாட்சி! ஆகவே இந்த நூலை எழுதுவதில் அவரை விட மிகவும் பொருத்தமானவர் வேறு யாரும் இருக்க முடியாது. அந்த வகையிலும் இந்த நூல் சிறப்பு வாய்ந்தது!

* ஆசிரியர், நூலின் முன்னுரையில் அன்னை மணியம்மையாரைப் பற்றி குறிப்பிட்டுள்ளதைப் படித்தறியும் ஒவ்வொருவரும் மணியம்மையாரின் தியாக வாழ்வையும் தொண்டறத்தையும் புரிந்து கொள்ளாமல் கடந்து சென்று விட இயலாது !

இதோ அதில் சில :

* மணியம்மையார் பட்ட அவமானம் – வருமானத்திற்கு அல்ல! இந்த மக்களின் தன்மானத்திற்கு – பல்லாயிரம் ஆண்டுகளாக இழிவுபடுத்தப்பட்ட சமூகத்தின் இனமானத்திற்காகவே தான் அவரது குறுகிய கால வாழ்வின் பெருகிய வெகுமானம் அவருக்கு என்றும் அதுவே! அதை விளக்குவதே இந்த எளிய நூல் ஆகும்! 

* நூலில் அன்னை மணியம்மையார் பற்றிய பல தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது! அவரது – பிறப்பு, பெற்றோர், கல்வி, இயக்கத்தில் வகித்த பொறுப்பு மற்றும் பெரியார் – மணியம்மையார் திருமணம், பெரியாருக்கு ஆலோசனை கூறிய சம்பவங்கள், பெரியாருடன் பயணம், பெரியாரின் மறைவு, இயக்கத்தின் தலைவர், கலந்துகொண்ட போராட்டங்கள், துரோகிகளை வென்றது, எமெர்ஜென்சி அடக்குமுறை, நிகழ்த்திய சாதனைகள், அன்னையின் மறைவு என்று எல்லா தகவல்களையும் உள்ளடக்கிய நூல்!

* அன்னை மணியம்மையார் வேலூரில் வி.எஸ். கனகசபை – பத்மாவதி தம்பதியருக்கு 10.03.1920 அன்று மகளாகப் பிறந்தார். காந்திமதி என பெயர் சூட்டினார்கள். அரசுப் பள்ளியில் நான்காம் பாரம் வரை படித்தார்.

அவரது தந்தை கனகசபை பெரியார் தொண்டர். தந்தை பெரியாரின் உடல் நலத்தின் மீது மிகுந்த ஆர்வம் காட்டியவர். ஆனால் அவரே உடல் நலன் குன்றி மரணமடைந்தார்!

* தனது தந்தை கனகசபை மறைந்த பின்னர் தந்தையின் தலைவராக இருந்த பெரியாரின் நலன் பேணுவதற்காக 1943ம் ஆண்டு பெரியாரிடம் வந்து அவரை கவனித்துக் கொள்ளும் பணியைத் துவக்கினார்!

* பெரியாருக்கு தொண்டாற்றுவதே தனது கடமையாக எண்ணி வாழ்ந்து வந்தார். பெரியாரின் வயோதிகத்திற்கு ஏற்றபடி உணவுக் கட்டுப்பாட்டை ஒரு கண்டிப்பான தாயைப் போல கடைப்பிடித்தார். பெரியாரோடு எல்லா பயணங்களிலும் கலந்து கொண்டார்.

பெரியார் பொதுக் கூட்டங்களில் பேசும் போது இவரோ பெரியாரின் புத்தகங்களை கடை விரித்து விற்பனை செய்தார்! பெரியாரின் நம்பிக்கைக்கு உரியவராக உயர்ந்து நின்றார்!

* பெரியாரின் பெயரும் புகழும் வளர வளர‌ அவருக்கு எதிராக – சுயநலம், பதவி வேட்கை, அரசியல், ஆசாபாசம், விளம்பரம் இவைகள் யாவும் வரிந்து கட்டி வரிசையாக நின்றன !

* தனது அரசியல் சமுதாயப் பயணத்தை தடையின்றி நடத்தவும் தனது பகுத்தறிவு பிரச்சாரத்தை தொய்வில்லாமல் தொடரவும் தான் சிறுகச் சிறுக சேர்த்து வைத்த செல்வத்தை பொதுநலனுக்காக பயன் படுத்தவும் சட்டபூர்வமான வாரிசு தேவைப்பட்டது தந்தை பெரியாருக்கு !

* அதற்கு ஒரே சரியான தீர்வாக மணியம்மையாரை மணம் முடித்து அவரையே சட்டபூர்வ வாரிசாக ஆக்கி விடலாம் என பெரியார் எண்ணினார். அந்த விருப்பத்தை மணியம்மையாரிடம் தெரிவித்து அவரது சம்மதத்தையும் பெற்றார் !

* அதன்படி பெரியார் – மணியம்மையார் திருமணம் 1949ம் ஆண்டு நடைபெற்றது. அதன் காரணமாக அண்ணாவும் மற்றவர்களும் பெரியாரிடமிருந்து பிரிந்து திமுக என்ற அரசியல் இயக்கம் கண்டார்கள்!

* நூலில் இது போன்ற பல்வேறு சுவையான தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. தந்தை பெரியாருக்கு ஆலோசனை கூறிய ஈ.வெ.ரா. மணியம்மையார் என்ற தலைப்பிலுள்ள பகுதியில் ஆச்சர்யத்தையும் பெருமிதத்தையும் வரவழைக்கும் தகவல்கள் படிக்க கிடைக்கின்றன !

* தற்போது சென்னையில் இருக்கும் ‘பெரியார் திடல்’ பற்றிய சுவையான தகவல்கள் : பெரியார் திடலை (முன்பு டிராம் ஷெட்டாக இருந்த இடம் )

விலைக்கு வாங்கும் படி பெரியாரை வற்புறுத்தியவர் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு. “மனசில்லாமல் தான் இந்த இடத்தை வாங்கினேன்” என்றார் பெரியார்.

* பத்திரச் செலவே ரூ 8000/ ஆகிறது என்பதால் தனது சக்திக்கு மேல் போவதாக கவலைப் பட்டாராம். எப்படியோ இறுதியில் வாங்கிவிட்டார்.

ஒரு பகுதியை ஜி.டி.நாயுடுவும் மறு பகுதியை பெரியாரும் வாங்கி கொண்டார்கள். ஜி.டி. நாயுடு தனது பகுதியை பின்னர் தினத்தந்தி உரிமையாளர் சி.பா. ஆதித்தனாருக்கு விற்று விட்டாராம்!

* பெரியார் வசம் இருந்த – இப்போது இருக்கும் ‘பெரியார் திடல்’ இடத்தை தனக்கு விற்று விடும்படி ஆதித்தனார் பெரியாரிடம் கேட்டாராம். அதற்கு இரண்டரை லட்சம் ரூபாய் தருவதாக கூறினாராம். பெரியாரும் இடத்தைக் கொடுத்துவிட ஆசைப்பட்டாராம்.

ஆனால், அன்னை மணியம்மையாரோ அதற்கு சம்மதிக்காமல், “விற்றுப் பணத்தை என்ன தான் பண்ணப் போகிறாய்?” எனக் கூறித் தடுத்து விட்டாராம் !

* இதன் காரணமாக பெரியார் திடல் – அவரால் காப்பாற்றப்பட்ட திராவிடர் கழகத்தின் மிகப்பெரிய சொத்தாகவும், பெரியார், மணியம்மையாரின் நினைவிடங்களைக் கொண்ட வரலாற்று சின்னமாகவும் அமைந்து விட்டது!

அன்னை மணியம்மையாரின் தொலை நோக்கு சிந்தனை வெற்றியும் பெற்றது!

* எமெர்ஜென்சி காலத்தில் மணியம்மையாரும் விடுதலை நாளிதழும் சந்தித்த சவால்களும் சோதனைகளும் இன்றைய தலைமுறையினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பாடங்கள் ஆகும்!

பார்ப்பனர்களின் கையில் அதிகாரம் வந்து விட்டால் அவர்களின் ஆட்டம் எப்படியெல்லாம் இருக்கும் என்பதின் வரலாற்று சான்றுகள்!

* நாள்தோறும் ‘விடுதலை’ நாளிதழை வெளியிடுவதற்கு முன்பாக சென்னை சாஸ்திரி பவனிலிருந்த தணிக்கை அதிகாரிகளின் பார்வைக்கு வைக்க வேண்டும்! அதில் அவர்கள் தங்கள் மனம் போல அத்துமீறல்களை அரங்கேற்றுவார்கள். நியாயத்திற்கு இடமிருக்காது !

* விடுதலையில் – ‘கடவுளர்கள் திருட்டு’ என்று செய்தி வெளியிட்டால், ‘கடவுள் சிலைகள் திருட்டு’ என்று மாற்றுவார்கள்! கவர்னர் ‘கடவுள் சிலையை கும்பிட்டார்’ என்று எழுதியதை ‘கடவுளைக் கும்பிட்டார்’ என்று திருத்துவார்கள்!

தந்தை பெரியார் அவர்கள் என்று குறிப்பிட்டால் ‘அவர்கள்’ என்பதை நீக்கி விடுவார்களாம். சங்கராச்சாரி என்று எழுதினால் ‘சங்கராச்சாரியார்’ என்று திருத்துவார்களாம்! இவைகள் – பார்ப்பனியத்தின் திருவிளையாடல்களை அறிந்து கொள்ள உதவும் தகவல்கள்!

* தந்தை பெரியாரின் மறைவுக்குப் பின்னர் அன்னை மணியம்மையார் திராவிடர் கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகத்திலேயே ஒரு நாத்திக இயக்கத்திற்கு தலைமையேற்ற முதல் பெண்மணி என்ற பெருமை மணியம்மையாரையே சேரும்!

* இது போன்ற பல பெருமைகளை அவர் பெற்றிருந்தாலும் பல அவமானங்களையும் துரோகங்களையும் சந்திக்கும்படி ஆனது. இவைகளையெல்லாம் இயக்கத்தின் தோழர்களின் ஆதரவோடு எதிர்த்து நின்று வெற்றி கண்டார்! இது சம்பந்தமாக அவர் பேசியும் எழுதியும் வந்தார். அவர் எழுதிய பல கடிதங்களை நூலில் காண முடிகிறது !

* அதில் குறிப்பாக அவர் தனது மனதைத் திறந்து இயக்கத் தோழர்களுக்காக எழுதியதை விடுதலை இதழ் 05.10.1975ல் வெளியிட்டுள்ளார்கள். அதில் ஒரு பகுதி அந்த அன்னையின் துயரத்தையும் அவர்களின் தொண்டறத்தையும் நம் கண் முன்னே ஒருசேர கொண்டு வருகிறது!
இதோ:

* “என்னைப் பொறுத்தவரை எனக்கு எல்லாமே அய்யாவைப் பின்பற்றுவது தான்! இங்கு துரோகத்திற்கு இடமளித்தால் அய்யா நம் மீது வைத்த நம்பிக்கையை நான் சிதறடித்து விட்டதாகி விடுமே என்பதால் தான் துணிந்து சில நடவடிக்கைகளில் இறங்கி விட்டேன் !

இயக்கத்தில் அசிங்கம், அவமானம், பழி, தூற்றல், ஏச்சுப்பேச்சு, விஷமம் இவைகளை நான் அனுபவித்துள்ள அளவுக்கு வேறு எந்தப் பெண்ணும் அனுபவித்து இருக்க முடியாது! பெருமைக்காக சொல்லவில்லை! இந்த உண்மையை நாடே ஒப்புக்கொள்ளும்! அவை எல்லாம் எனது பொது வாழ்க்கைக்கு நான் பெற்ற தரமான உரம் !”

* தந்தை பெரியாரின் நிழலாக வாழ்ந்தவர் பெரியாரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு முன்பாகவே – ஆறு மாத காலத்திற்கு முன்பாக அன்னை மணியம்மையார் தனது 58வது வயதில் 16.03.1978 அன்று இயற்கை எய்தினார்!

அம்மையாரின் வாழ்க்கைப் பற்றியும் அவரது தொண்டறம் பற்றியும் ஒரே நூலில் அறிந்து கொள்வதற்கு இதைவிட சிறந்த வேறு நூல் எதுவுமில்லை! நூலாசிரியர் நமது ஆசிரியர் அய்யாவுக்கு நன்றியும் பாராட்டுக்களும்!

பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்.

**********

நூல்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் தொண்டறம்!
ஆசிரியர்: கி. வீரமணி
திராவிடர் கழக வெளியீடு
முதல் பதிப்பு: 2024
பக்கங்கள்: 320
விலை: நன்கொடை ரூ.350/-

#அன்னை_ஈ_வெ_ரா_மணியம்மையார்_தொண்டறம் #கி_வீரமணி #திராவிடர்_கழக_வெளியீடு #dravidar_kazhagam #annai_e_ve_ra_maniyammaiar_thondaram_book #ki_veeramani

You might also like