மக்கள் மனதின் குரல்:
சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சனிக்கிழமைகளிலும் சமயங்களில் ஞாயிற்றுக் கிழமைகளிலும் அதிவேக பைக் ரேஸ்கள் வாடிக்கையாக நடந்து வந்தன.
ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து முப்பதுக்கு மேற்பட்ட பைக்குகள் சுமார் 30 கிலோமீட்டர் தள்ளியுள்ள இன்னொரு பகுதிக்கு கூடியவரைக்கும் விரைந்து செல்ல வேண்டும்.
அப்படிச் செல்கிறவர்களுக்கு ஜாக்பாட்டாக ஒரு பெரிய தொகை கிடைக்கும். அந்தத் தொகையின் ஒரு பகுதியை வைத்து அன்றைய ரேஸில் கலந்து கொண்டவர்களுக்கு வெற்றி பெற்றவர் உற்சாக விருந்தளிப்பார்.
இதேபாணியில் சென்னையில் மட்டும் ஏகப்பட்ட பைக் ரேஸ்களும் சமயங்களில் கார் ரேஸ்களும் நடந்திருக்கின்றன. இந்தவிதமான பைக் ரேஸ்கள் எங்கோ தொலைதூரத்தில் பொதுமக்களுக்குத் தொந்தரவுக் கொடுக்காத தூரத்தில் நடந்தால்கூடப் பொறுத்துக் கொள்ளலாம்.
ஆனால், சென்னையில் நடக்கும் ரேஸ்கள் அப்படிப்பட்டவை அல்ல. சாதாரணமாக பொதுமக்கள் படு நிதானமாக தங்கள் வாகனத்தில் குறைவான வேகத்தில் போய்க் கொண்டிருக்கும்போது, அதிக குதிரை சக்தி கொண்ட பைக்குகளில் கூடுதல் இரைச்சலோடு இந்த பைக் ஓட்டிகள் விரைந்து வரும்போது, பலர் வௌவௌத்துப் போயிருக்கிறார்கள்.
சென்னை கடற்கரை சாலையில், நிதானமான வேகத்தில்போன வயதான தம்பதிகள் தவறி விழுந்து காயமடைந்திருக்கிறார்கள். ஒருசிலர் உயிரிழக்கவும் செய்திருக்கிறார்கள்.
அப்போதைய மீடியாக்கள் இதில் ஓரளாவவது அக்கறை காட்டியதன் விளைவு காவல்துறை காட்டிய திடீர் சுறுசுறுப்பில் ரேஸில் கலந்து கொண்ட பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் கலந்துகொண்ட இளைஞர்கள் கைது செய்து விடுவிக்கப்பட்டார்கள்.
அப்போதைக்கு அது ஓரிரு நாட்களுக்கான செய்தி மட்டுமே.
இப்போது மறுபடியும் அதே சனிக்கிழமை ரேஸ்கள் சென்னையின் பல பகுதிகளில் நடந்து கொண்டிருக்கின்றன. அதிக சக்தி கொண்ட பைக்குகளை அதிக இரைச்சலோடு அளவுக்கு அதிகமான வேகத்துடன் தாறுமாறாக ஓட்டிச் செல்கிறார்கள். மறுபடியும் பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்துகிறார்கள்.
ஏற்கனவே சென்னை நகர் முழுக்க மெட்ரோ ரயில் வேலை நடந்து ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு, சென்னை நகர சாலைகளே அவ்வளவு மோசமான நிலையில் இருக்கும்போது அதற்கிடையில், இவ்வளவு வேகமாக ரேஸ்கள் நடந்தால், அது எவ்வளவு பேரை சிக்கலுக்கு உள்ளாக்கும்.
சும்மா போகிற வாகன ஓட்டிகளை ஹெல்மெட் இல்லை, காதில் ஹெட்செட் என்று வெவ்வேறு காரணங்களைக் காட்டி உடனடி அபராதம் விதிக்கிற இதே போக்குவரத்துக் காவல்துறை இந்த பைக் ரேஸ்கார்களிடம் மட்டும் ஏன் பம்முகிறது?
பல லட்சம் மதிப்புள்ள பைக்குகளை அலட்சியமாக கையாளும் இளைஞர்கள் விசயத்தில் ஏன் பாராமுகமாக நடந்து கொள்கிறது?
சென்னை மாநகர போக்குவரத்தை ஒழுங்குபடுத்தத் தவறுகிற இம்மாதிரியான இளைஞர்களுக்கு ஏன் தொடர்ந்து கரிசனம் காட்டப்படுகிறது. இதற்கு காரணம் அவர்களது பின்புலமா?
இனிமேலாவது இத்தகைய சனிக்கிழமை பீதிகளை தடுத்துத் தொடர்ந்து கண்காணித்து ரேஸ்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றுதான் இதே பெருநகரில், வாகனங்களை நிதானமாக ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் எதிர்பார்க்கிறார்கள்.
– நா. அப்துல் ஹமீது