உலக தண்ணீர்த்
திருநாளான இன்று
மனிதகுலம்
மூளையைச் சூடாக்கிச்
சிந்திக்க வேண்டும்
உலகத் தண்ணீரை
அதிகம் உறிஞ்சுவது
மனிதனும் விலங்கும்
தாவரங்களும் பறவைகளும் அல்ல;
தொழிற்சாலைகளும்
வேளாண்மையும்தாம்
ஒரு கார் உற்பத்தி
4 லட்சம் லிட்டர்
நன்னீர் குடிக்கிறது
ஒரு கோப்பையின்
காஃபித் தூள்
140 லிட்டர் தண்ணீர் பருகுகிறது
ஒரு ரொட்டித் துண்டின்
உற்பத்தியில் உள்ளிருக்கிறது
430 லிட்டர் தண்ணீர்
ஒரு மெட்ரிக் டன் இரும்பு
270 மெட்ரிக் டன்
தண்ணீரில் தயாராகிறது
தொழில் – வேளாண்மை
இரண்டிலும்
தண்ணீர் நுகர்வைக்
கட்டுப்படுத்தாது போனால்
மனித குலம்
தாகத்தில் மூழ்கிவிடும்
விஞ்ஞானம் அவசரமாகச்
சிந்திக்க வேண்டும்
தண்ணீரே!
எங்கள் சமூகத்தின் ரத்தமே!
நீ உள்ளவரைதான்
உலகின் இயக்கம்
உன்னைத்
தங்கமாய் மதிப்போம்;
தண்ணீரை வீணாக்கமாட்டோம்!
– கவிப்பேரரசு வைரமுத்து