பட்டுக்கோட்டையார் மனைவி கௌரவம்மாள் பகிர்ந்த நினைவுகள்:
எனக்கு பட்டுக்கோட்டை பக்கத்துல ஆத்திக்கோட்டைதான் சொந்த ஊர். எங்க அண்ணன் சின்னையனும் அவுகளோட அண்ணனும் சிங்கப்பூர்ல வேலை பார்க்கும்போது சிநேகிதமானவங்க.
‘எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவளுக்கு கல்யாணம் பண்ணணும்’னு எங்க அண்ணன்தான் சொல்லிருக்காக. அப்ப அவுக அண்ணன் ஒண்ணும் சொல்லலையாம்.
சிங்கப்பூர்லேர்ந்து லீவுல ஊருக்கு வரும்போது, தம்பியைக் கூட்டிட்டு என்னைப் பொண்ணு பார்க்க வந்துட்டார். அப்ப அவுக, ’அண்ணனுக்குதான் பொண்ணு பார்க்கப் போறோம்’னு நினைச்சுக்கிட்டு வந்தாகளாம்.
பொண்ணு பார்த்துட்டு ஊருக்குத் திரும்பும்போது, ‘பொண்ணு எப்படிடா இருக்கு’ன்னு அண்ணன் கேட்க, ’அழகாதான் இருக்கு’ன்னு இவுக சொல்லிருக்காக.
‘உனக்குத்தான்டா இந்தப் பொண்ணு’னு அண்ணன் சொன்னதும், இவுகளுக்கு ரொம்ப சந்தோஷமாப் போச்சாம்.
அப்போ வீட்டுல வந்து எழுதுனதுதான், ஆடை கட்டி வந்த நிலவோ, கண்ணில் மேடைகட்டி ஆடும் எழிலோ பாட்டு.
இப்போ தெரிஞ்சுக்கோங்க நாந்தான் “ஆடைகட்டி வந்த நிலவு” என்று மலர்ந்து சிரிக்கிறார் கௌரவம்மாள்.
“ஒரு நாள் அவுக அண்ணன் பொஞ்சாதிக்கு வளைகாப்பு. அப்போ நான் கிண்டலா, ‘அக்காளுக்கு வளைகாப்பு. அத்தான் மொகத்துல பொன் சிரிப்பு’ன்னு சொன்னேன்.
இதை, ‘கல்யாணப் பரிசு’ படத்துல, அவுக பல்லவியா போட்டு, பாட்டா எழுதிட்டாக.
“இது நீ எழுதுன பாட்டு. இந்தா பிடி சன்மானம்”னு அந்தப் பாட்டு எழுதுனதுக்குக் கிடைச்ச பணத்தை என் கையில கொடுத்தாக.”
(படம் :மணக்கோலத்தில் பட்டுக்கோட்டையார்)
– நன்றி சந்திரன் வீராசாமி முகநூல் பதிவு