1958 ல் ‘நாடோடி மன்னன்’ படத்திற்கு நான் மக்கள் தொடர்பாளராக ஆனேன். அதற்கு முன்பு பி.ஆர்.ஓ. என்ற ஒன்றில்லை. நான் தான் முதல் நபர்.
அப்படி வந்தது ஓர் சுவாரசியமான கதை.
நடிகர் சங்கம் ‘நடிகன் குரல்’ என்ற பத்திரிகையை நடத்தி வந்தது. யார் நடிகர் சங்கத்தின் தலைவரோ, அவர் தான் அந்த இதழின் வெளியீட்டாளராக இருக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர் தான் அப்போது நடிகர் சங்கத் தலைவர். அவர் தான் பப்ளிஷரும். அந்தப் பத்திரிகைக்கு வித்வான் வே.லெட்சுமணன் ஆசிரியர். அப்போது அவர் ஜோசியர் அல்ல.
செய்திகளைச் சேர்த்துக் கொடுத்துப் பத்திரிகை கொண்டு வரும் வேலை. அதை எம்.ஜி.ஆரிடம் வெளியீட்டாளர் என்ற முறையில் காட்ட வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருந்தது.
அப்போது லெட்சுமணன் அடிக்கடி என் வீட்டுக்கு வருவார்.
ஒருமுறை நானும், அவரும் எம்.ஜி.ஆர் வீட்டுக்குப் போனோம். எம்.ஜி.ஆரின் அலுவலக மேலாளராக ஆர்.எம்.வீரப்பன் அப்போது இருந்தார்.
வித்வான் வே.லெட்சுமணன் உள்ளே எம்.ஜி.ஆரிடம் பேசிக் கொண்டிருந்தார். நான், நாடோடி மன்னன் பட ஸ்டில்ஸைப் பார்த்து “இதைப் பத்திரிகைகளுக்குக் கொடுக்கிறேன்” என்று ஆர்.எம்.வீ.யிடம் தெரிவித்தேன்.
ஆர்.எம்.வீ ‘தாராளமாக’ என்றார்.
எம்.ஜி.ஆர் நடித்தப் படங்களின் புகைப்படங்கள் பத்திரிகைகளுக்குக் கிடைப்பது அப்போது கஷ்டம். நான் எல்லாப் பத்திரிகைகளுக்கும் கொடுத்துப் படத்திற்கு மிகப் பெரிய விளம்பரத்தைச் செய்து கொடுத்தேன்.
அது எம்.ஜிஆருக்கு ரொம்பச் சந்தோஷத்தைக் கொடுத்தது.
அடுத்து அவர் நடித்த படங்கள் அனைத்திற்கும் பத்திரிகையாளருக்கான சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்து அதனை முடித்துத் தர என்னைக் கேட்டுக் கொண்டார்.
அதோடு படம் முடிந்து பத்திரிகையாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை என்னிடம் கேட்டும் அறிந்து கொள்வார்.
இப்படி எனது மக்கள் தொடர்புப் பணி தொடங்கியது”
– தமிழ் சினிமாவின் முதல் பி.ஆர்.ஓ.,வான பிலிம் நியூஸ் ஆனந்தன் 2006 ஜனவரியில் கொடுத்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.
#வேலட்சுமணன் #நடிகன்குரல் #எம்ஜிஆர் #ஆர்எம்வீரப்பன் #நாடோடிமன்னன் #VLakshmanan #MGR #RMVeerappan #nadodimannan #ஆர்எம்வீ #rmv #பிலிம்நியூஸ்ஆனந்தன் #filmnewsanandan