சங்கப் புலவர்கள் பொன்னுரை – 5
******
“தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா
செய்வது நன்று ஆகுமோ…”
கபிலர், கலித்தொகை 62: 7, 8
– வெண்கலிப்பா
– கலித்தொகை – 62, குறிஞ்சிக் கலி – 26
– தலைவன் கூற்று
– பாடியவர்: கபிலர்
– திணை: குறிஞ்சி
கி.மு. காலத்துப் பாடல்
தமக்கு இனிதாய் இருக்கின்றது என்று கருதிப் பிறருக்கு இன்னாதவற்றை வலிந்து செய்வது நன்றாகுமோ?
தமக்கு ஒன்று இன்பம் பயக்கிறது என்பதால் பிறர்க்கு வலியச் சென்று துன்பம் தருவது நல்லதுதானா? என்று கேட்கிறார் கபிலர்.
ஆனால், இப்படியெல்லாம் கேட்டால் பெரும்பாலோருக்குப் புரிவதில்லை என்று, பின்னாளில் திருவள்ளுவரும்,
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்”
(திருக்குறள், ௩௱௰௯ – 319) என்றார் போலும்.
ஆயினும் எத்தனை எழுதிவைத்தும் பயன் ஒன்றுமில்லையே! இதனை ஏற்போர் சிலராகத்தானே உள்ளனர்.
தாம் ஒரு கண்ணை இழந்தாலும் அடுத்தவருக்கு இரண்டு கண்கள் போகட்டும் என்று மகிழ்வோர்தாம் பலரும். ஆனால், இத்தகைய அறமற்ற செயல்களில் ஈடுபடுவோர்தாம் அறங்காவலர்கள்!
தனி மனித வாழ்வாக இருந்தாலும் குமுகாய வாழ்வாக இருந்தாலும் தம் நன்மை ஒன்றையே கருதி வாழ்வோரே பலராவர்.
போர்களும் பயங்கரவாதச் செயல்களும் தமக்கு இன்பம் தருகிறது என்பதற்காகப் பிறருக்குத் தீங்கிழைக்கவும் அழிக்கவும் தயங்காதவர்களால்தான் நிகழ்கின்றன.
இவ்வாறு தன்னலம் கருதிப் பிறர் நலன் அழிக்கும் இழிசெயல்கள் சரிதானா? முறைதானா? நன்றுதானா? என்றே புலவர் கபிலர் கேட்கிறார்.
எனவே, உனக்கு இன்பம் வருகிறது என்பதற்காகப் பிறருக்குத் துன்பம் செய்யாதே என்னும் சங்கப் பொன்னுரையை நாம் பின்பற்றி அனைவருக்கும் இன்பம் விளைவிப்போம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்.