பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் குறித்த புரிதல் அவசியம் தேவை!
முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு பேச்சு
சென்னையில் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஆசியாவின் பெரிய குடியிருப்புப் பகுதியான கண்ணகி நகரில் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில் ‘முதல் தலைமுறை’ கற்றல் மையத்தில் பெண்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
கண்ணகி நகர் பகுதியில் வசிக்கும் மகளிரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் முதல் தலைமுறை அறக்கட்டளை மற்றும் ஆகாஷ் மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் பல பரிசோதனைகள், ஆலோசனைகள் மற்றும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
குறிப்பாக பெண்களிடம் ரத்தசோகை, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.
வழக்கமாக பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்சி பிரச்சனைகள், மார்பகப் புற்றுநோய், கர்ப்பப் பை தொடர்பான உடல்நலக் குறைபாடுகளுக்கு சிறப்பான ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.
இந்த மருத்துவ முகாமை முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தொடங்கிவைத்தார்.
மருத்துவ பரிசோதனைகள் நிறைவு பெற்ற பின் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் 100க்கும் அதிகமாக பெண்கள் கலந்துகொண்டனர்.
விழிப்புணர்வு நிகழ்வில் இறையன்பு பேசும்போது, பெண்களின் உடல்நலம், அவர்களின் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கினார்.
மேலும், கண்ணகி நகர் பகுதியில் வசிக்கும் வளரிளம் பெண்களிடம் காணப்படும் ரத்தசோகை பிரச்சனைக்கு தொடர் சிகிச்சை அளிக்கவும், அவர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் மாதந்தோறும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார்.
உணவுப் பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி மற்றும் மனநலம் ஆகியவை பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதையும் வலியுறுத்தினார்.
பெண்களுக்கும், வளரிளம் பெண்களுக்கும் மனநல ஆலோசனைகளும் முகாமில் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் டாக்டர் ஜெயராணி காமராஜ், டாக்டர் பிரேமலதா மற்றும் இளைஞர் சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.