அண்மையில் கோவையில் லேசாக மழை பெய்து கொண்டிருந்தபொழுது, ஒரு இடத்திற்கு செல்வதற்காக கால் டாக்ஸி ஒன்றை ஏற்பாடு செய்துகொண்டு புறப்பட்டேன்.
அந்த இடத்திற்கு போய்ச் சேர்ந்ததும், சார்ஜ் எவ்வளவு என்று ஓட்டுநரிடம் கேட்டேன். அவர் தன்னுடைய செல்போனைக் காட்டி 177 ரூபாய் என்று சொன்னார். எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.
“என்ன டிரைவர், வழக்கமா நான் இந்த இடத்திற்கு வந்தா 150 ரூபாய் தானே ஆகும். இன்னிக்கு ஏன் 177 ரூபாய் வருது” என்று கேட்டேன்.
அதற்கு அவர் “ஸார் இது ஹேப்பி ஹவர்ஸ்” (Happy Hours) என்று சொன்னார்.
“அது என்ன ஹேப்பி ஹவர்ஸ்?”
“ஸார் மழை பெய்ஞ்சிட்டிருந்தாலோ, இல்லேன்னா, சிட்டியில் ட்ராஃபிக் நெரிசல் அதிகமா இருந்தாலோ, பயணிகளிடமிருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் அதிக கட்டணம் வசூலித்து நிர்வாகம் எங்களுக்கு கொடுப்பாங்க.
ஏன்னா மழை பெய்ஞ்சா, டிராஃபிக் அதிகமா இருந்தா ட்ரைவர்கள் அந்த ட்ரிப்பை கேன்சல் பண்ணிட்டு வீட்டுக்குப் போயிடுவாங்க.
அப்படி அவங்க போயிடக் கூடாதுங்கிறதுக்காகத்தான் டாக்ஸி நிர்வாகம் இந்த ஹேப்பி ஹவர்ஸ் சிஸ்டத்தை ஏற்படுத்தியிருக்காங்க.
உங்களுக்கு விருப்பம் இருந்தா கொடுங்க ஸார். இல்லேன்னா வழக்கமா தர்ற 150 ரூபாயையே கொடுங்க” என்று சொன்னார்.
“உங்க நிர்வாகம் அப்படியொரு ஏற்பாட்டைச் செஞ்சுட்டதால நான் அவங்க சொன்னபடியே கொடுத்துறேன்” என்று சொல்லி மூன்று ரூபாயைச் சேர்த்து 180 ரூபாயாக கொடுத்தேன்.
இந்த ஹேப்பி ஹவர்ஸ் இனி வருங்காலத்தில் வெரி வெரி ஹேப்பி ஹவர்ஸாக மாறிவிடக்கூடாது என்பது தான் என்னுடைய கவலை.
பின்குறிப்பு:
நான் டாக்ஸியை விட்டு இறங்கும் பொழுது அவர் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டே, “ஸார் அசப்புல பார்த்தா நீங்க எழுத்தாளர் ராஜேஷ் குமார் மாதிரி இருக்கீங்க. ஆனா அவரெல்லாம் டாக்ஸியில் வரமாட்டார்” என்று சொல்லிக் கொண்டே விருட்டென்று நகர்த்திக் கொண்டு போய்விட்டதுதான் ஹைலைட். காலம் போட்ட மேக்கப்பை நான் கலைக்கவா முடியும்?