புற்றுநோயுடன் போராடும் ஷிஹான் ஹுசைனி!

கடைசி கோரிக்கையை நிறைவேற்றுவாரா உதயநிதி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை தன் ரத்தத்தாலேயே வடித்தவர் ஷிஹான் ஹுசைனி. அதோடு அவரது ஓவியத்தையும் தன் ரத்தத்தால் வரைந்தார்.

இப்படி தன் ரத்தத்தாலேயே பல சாதனைகளைப் படைத்த ஷிஹான் ஹுசைனிக்கு இன்று அந்த ரத்ததிலேயே பிரச்சினை வந்திருக்கிறது.

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஹுசைனி.

பொதுவாக நமக்கு ஒரு வாரம் ஜுரம் வந்தாலே என்னவோ ஏதோ என்று பயந்துவிடுவோம். நம்பிக்கையை இழந்துவிடுவோம்.

ஆனால், ஹுசைனியோ தனக்கு ரத்தப் புற்றுநோய் என்று டாக்டர்கள் சொன்ன பிறகும் கலங்கவில்லை. மாறாக தனக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்துச் சொன்ன மருத்துவருக்கு நன்றி சொல்லி இருக்கிறார்.

”ஹார்ட் அட்டாக் போன்ற நோய்கள் வந்தால் நாம் சுதாரிப்பதற்கு உரிய நேரம் கிடைப்பதில்லை. நொடிப் பொழுதில் மரணம் வந்துவிடும்.

ஆனால் புற்றுநோய் அப்படியல்ல. மரணத்தை நெருங்க நமக்கு போதுமான கால அவகாசத்தை புற்றுநோய் அளிக்கிறது.

எனக்கு புற்று நோய் இருப்பதாக டாக்டர்கள் சொன்ன பிறகு, உயில் எழுதுவது போன்ற முக்கிய விஷயங்களைச் செய்ய எனக்கு நேரம் கிடைத்திருக்கிறது.

எஞ்சியிருக்கும் நாட்களை ரத்தப் புற்றுநோயுடன் போராடிக் கொண்டே அனுபவித்து வாழப் போகிறேன்” என்று ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் சொல்லி இருக்கிறார் ஷிஹான் ஹுசைனி.

நடிகர், ஓவியர், சிற்பி, வில் வித்தைப் பயிற்சியாளர், தமிழ்நாடு வில்வித்தை சங்கத்தின் பொதுச் செயலாளர், கராத்தே பயிற்சியாளர் என பன்முகம் கொண்ட ஷிஹான் ஹுசைனி தனது முகநூல் பக்கத்தில், தனக்கு வழங்கப்படும் சிகிச்சையைப் பற்றி அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

அத்துடன் துணை முதலமைச்சர் உதயநிதி, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், நடிகர் விஜய் ஆகியோருக்கும் தன் கடைசி கோரிக்கையை முகநூல் வழியாக பகிர்ந்திருக்கிறார்.

அந்த கோரிக்கைகள் எதுவும் அவருக்கானவை அல்ல. மாறாக வில் வித்தை வீரர்களின் நலனுக்கான கோரிக்கையையே அவர் வைத்துள்ளார்.

“தமிழக வில்வித்தை வீரர்கள் பயிற்சி பெற சொந்தமாக ஒரு மைதானம் இல்லை. கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில்தான் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

ஆனால், இப்போது அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. சாலை போடுவதற்காக அந்த மைதானத்தை எடுக்கப் போவதாக தமிழக அரசு அதிகாரிகள் சொல்கிறார்கள்.

அப்படி நடக்காமல் அங்கு வில்வித்தை வீரர்கள் தொடர்ந்து பயிற்சி பெற துணை முதலமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது உதயநிதி ஸ்டாலினுக்கு நான் விடுக்கும் கடைசி கோரிக்கை” என்று தன் முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார் ஷிஹான் ஹுசைனி.

கூடவே தமிழக வில்வித்தை வீரர்களுக்கு உதவ வேண்டும் என, தன் முன்னாள் சீடர்களான ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கும், நடிகர் விஜய்க்கும் கோரிக்கை விடுத்திருந்தார்.

மற்றவர்களுக்கு கோரிக்கை வைத்ததுடன் நிற்காமல், தன் சொத்துகளையும் வில்வித்தை வீரர்களுக்காக உயில் எழுதி வைத்துள்ளார் ஷிஹான் ஹுசைனி.

அந்த உயிலை நடைமுறைப்படுத்துவதற்கான குழுவையும் அமைத்துள்ளார்.

ஷிஹான் ஹுசைனியின் சிகிச்சைக்காக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட 5 லட்ச ரூபாய் நிதியையும், தனது பிரிய சிஷ்யைகளான காம்னா மற்றும் மஹிமாவின் பயிற்சி செலவுகளுக்காக வழங்கியுள்ளார்.

இப்படி மரணத்துடன் போராடும் கடைசி நேரத்திலும் வில்வித்தை வீரர்களுக்காகப் போராடும் ஷிஹான் ஹுச்சைனியின் மன உறுதி நம்மை அதிர வைக்கிறது.

ரத்தப் புற்றுநோயுடன் போராடும்போதும் அவரது இதயம் வில்வித்தைக்காகவே துடிப்பது மனதை கலங்க வைக்கிறது.

வில் வித்தைp போட்டியில் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வெல்ல வேண்டும் என்ற தனது லட்சியம் நிறைவேறவாவது ஷிஹான் ஹுசைனி புற்றுநோயை வென்று மீண்டு வரவேண்டும் என்று பிரார்த்திப்போம்.

– பிரணதி

You might also like