உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களைவிட, தன்னை அப்படியே வெளிப்படுத்திப் பழக்கப்பட்டவர்களிடமே இந்த சமூகம் அதீத உரிமையுடன் கேள்விகள் எழுப்பும். அவர்கள் பேசுவதைச் சர்ச்சைகளாக்கி விவாதம் செய்யும். ஆனால், அதைப்பற்றி அவர்கள் என்றுமே கவலைப்படுவதில்லை. அவர்கள் அவர்களாகவே இருப்பார்கள். அதிலொருவர், இசைஞானி இளையராஜா.
அவரிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்துப் பதில்களை வாங்கிப் பரபரப்பூட்டும் வகையில் வெளியிடுவது ஊடக உலகின் வழக்கம். ’தன்னியல்பு அதற்கு உதவினால் உதவட்டுமே’ என்று எப்போதும், எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் குறிப்பிட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துவிடுவது அவரது வழக்கம்.
அப்படித்தான் ‘இளம் இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் சிம்பொனி இசையமைக்க இளையராஜா உதவியதாக’ வெளியான செய்திகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் பேசியிருப்பதும் பரபரப்பூட்டும் வகையில் செய்தியாகி வருகிறது.
மிகப்பெரியது..!
இளையராஜாவின் சாதனை மிகப்பெரியது. தான் அமைத்த சிம்பொனி இசையை முதன்முறையாக லண்டனில் மக்களின் பார்வைக்கு முன்வைத்துவிட்டு வந்திருக்கும் இந்த நேரத்தில், இதனைச் சொல்வது ‘க்ளிஷே’வாக தெரியலாம்.
ஆனால், ஞானதேசிகன் என்று பெயரிடப்பட்டு ராஜைய்யாவாகப் பள்ளிச் சேர்க்கையில் பதிவு செய்யப்பட்ட ஒருவர் திரையாளுமை பஞ்சு அருணாசலத்தினால் இளையராஜாவாக மீண்டுமொருமுறை பிறந்து, திரையிசையில் பல ஆண்டுகள் மக்களின் மனதில் அமைதியைப் பெருக்கெடுக்கும் வகையில் பணியாற்றி, தள்ளாடும் வயதில் தளராத மனதுடன் இந்த சாதனையைப் படைத்திருக்கிறார் எனும்போது, ‘மிகப்பெரியது’ என்ற வார்த்தையே மிகச்சாதாரணமாகத் தோன்றும்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, எதையும் எளிதாகக் கற்றுக்கொள்கிற வாய்ப்புகள் இல்லாத சூழலில் வளர்ந்து, தனிப்பட்ட ஆர்வம் மற்றும் பயிற்சியின் மூலமாகத் தனது உயரத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் வளர்த்துக்கொண்டது அவரது வாழ்க்கை வரலாற்றில் இன்னொரு கிளைக்கதை.
இது போகச் சில தகவல்களைத் தான் அளித்த பதிலில் சுருக்கமாகவும் தெளிவாகவும் தெரிவித்திருக்கிறார் இளையராஜா.
லண்டன் அப்போலோ அரங்கில் சிம்பொனியை அரங்கேற்றிவிட்டு சென்னை திரும்பியவரிடம் விமானநிலையத்தில் பத்திரிகையாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். ‘இளையராஜா போலவே இளம் இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரமும் சிம்பொனி அமைக்கப் போகிறார்’ என்று வெளியான செய்திகள் பற்றியும் அப்போது கேட்கப்பட்டது.
லிடியனுக்கு இளையராஜா சிம்பொனி அமைப்பதில் உதவினாரா என்ற தொனியில் அமைந்த கேள்விக்கு, ‘அவர் எனது மாணவர். என்னிடம் இசை கற்றவர். தான் இசையமைத்ததை எனக்கு ‘பிளே’ செய்து காட்டினார். தொடக்கத்தில் வந்த 20 நொடி இசைத்துணுக்கைக் கேட்டதுமே, இது சினிமா பின்னணி இசை மாதிரியாக உள்ளது. சிம்பொனி என்றால் என்னவென்று தெரிந்துகொண்டு கம்போஸ் செய்’ என்று தான் லிடியனுக்குச் சொன்னதாகப் பதில் தெரிவித்தார்.
’தன்னுடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அதனைக் காட்டியபோது, நல்ல வழியை அவருக்குக் காட்டும் வகையில் அவ்வாறு தெரிவித்ததாக’க் கூறினார் இளையராஜா.
அதேபோல, அன்றைய தினம் ‘தான் கடந்து வந்த பாதையை இளைய தலைமுறை பின்பற்றி வாழ்வில் முன்னேற வேண்டும்’ என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த இடத்தில், ’இளையராஜாவை முன்மாதிரியாகக் கொண்டு முன்னேற வேண்டும்’ என்று அவரே சொன்னது போன்று அக்கருத்து தோற்றம் தரும்.
அது தொடர்பாக, யாரோ ஒருவருக்கு அளித்த காணொலிப் பதிவில் தனது விளக்கத்தைத் தந்திருக்கிறார் இளையராஜா. அது தற்போது சமூகவலைதளங்களில் வலம் வருகிறது.
கடந்து வந்த பாதை!
அந்தக் கேள்விக்கு இளையராஜா அளித்த பதில் இதுதான்..!
“என்னை ரோல்மாடலா வைக்க வேண்டாம். நான் வேறு ஒருவருடைய காலிலும் நடக்காமல், என்னுடைய காலிலேயே நடந்து, இருந்த இடத்தில் இருந்து படிப்படியாக கச்சேரிகளுக்கு வாசித்து, நாடகங்களுக்கு வாசித்து, சினிமாவிலும் அசிஸ்டெண்டாக வொர்க் பண்ணி, அப்படி வொர்க் பண்ண நேரத்துல கற்றுக்கொண்டு, அதனை ஆர்கெஸ்ட்ராவை வைத்து எக்ஸ்பிரிமெண்டலாக வாசிக்க வைத்து, என்னுடைய காலிலேயே நடந்து, அந்த கால் ’வெறும் கால்’ என்று வைத்துக்கொள்ளுங்கள்.
பாதணிகள் ஏதும் இல்லாமல் நடந்து வந்து, சினிமாவில் ஒரு இடத்தில் உட்கார்ந்துவிட்டு, அதற்கப்புறம் சினிமாவை விட்டு விலகி உலகில் இருக்கும் மற்ற உயர்ந்த இசைகள் அத்தனையையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் பண்ணியது இது.
அது வெறும் காலில் நான் நடந்து வந்து அடைந்த இடம் என்றுதான் விமானநிலையச் சந்திப்பில் தெரிவித்தேன்’ எனச் சொல்லியிருக்கிறார் இளையராஜா.
‘நீங்கள் முன்மாதிரியா’ எனும் இக்கேள்வியை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகக் கேட்கக்கூடும். அதனை முன்னுணர்ந்தே, ‘தான் கடந்து வந்த பாதையை முன்மாதிரியாகக் கொள்ளட்டும்’ என்று கவனமாகப் பதிலளித்திருக்கிறார்.
எது அவர் கடந்து வந்த பாதை? பண்ணைபுரத்தில் பிறந்து வளர்ந்து இசையின் அடிப்படையை உணர்ந்து சகோதரர்களுடன் பொதுவுடைமை இயக்க நிகழ்ச்சிகளில் இசைக்கருவிகளை வாசித்து, பின்னொரு நாளில் சென்னைக்கு இடம்பெயர்ந்து இசைக்கலைஞராக, இசையமைப்பாளராக உயர வேண்டும் என்று முடிவு செய்த காலகட்டத்தை மட்டும் அவர் குறிப்பிடவில்லை.
அதன்பிறகு தான் இசையமைப்பாளர் ஆனது எப்படி என்ற கேள்விக்கான பதிலை இளம் இசையமைப்பாளர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்ற நோக்கில் பேசியிருக்கிறார்.
’இசைக்கலைஞராகப் பல கருவிகளை இசைப்பதற்கோ, இசையமைப்பாளர் ஆவதற்கான முன்முயற்சிகளில் ஈடுபடுவதற்கோ, தனக்கு யாரும் உதவவில்லை.
தானே கையூன்றிக் கரணம் போடுவதைப் போல, இசை தொடர்பான அனைத்தையும் தானே கற்றுக்கொண்டிருக்கிறார்.
தான் பிறந்த ஊர், அதன் பின்னணி, பின்னர் கட்சி நிகழ்ச்சிகளில், நாடகங்களில், கச்சேரிகளில் வாசித்தது, சென்னை வந்தபிறகும் இங்கிருக்கும் நாடகக் குழுக்களோடு சேர்ந்தியங்கியது என்றிருந்தபோதே, அதனூடே திரைப்பட இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
திரையிசைப் பணியில் முழுமையாக ஈடுபட்ட காலகட்டத்தில், ஓய்வின்றி உழைத்த நாட்களிலும் கூட இடைவிடாது கர்நாடக, மேற்கத்திய இசையின் அடிப்படை முதல் அடுத்தகட்ட நகர்வுகள் வரை கற்றுத் தெளிந்திருக்கிறார்.
வெறுமனே கற்பதோடு நின்றுவிடாமல், தன்னோடு பழகிய இசைக்கலைஞர்களைக் கொண்டு தான் உருவாக்கிய இசைக்கோர்வைகளை வாசிக்கச் செய்து, அந்த பரிசோதனை முயற்சிகளின் பலன்களை நேரில் கண்டிருக்கிறார்.
அதன்பிறகு சினிமாவில் அறிமுகமாகி, பல உயரங்களைக் கண்டு, அதில் கிடைத்த பெயரும் புகழும் திகட்டத் தொடங்கிய காலகட்டத்தில் உலகின் இதர இசைகள் மீது பார்வையைத் திருப்பியிருக்கிறார்’.
இவையனைத்தும் இளையராஜா சொன்ன பதிலில் ஒளிந்திருக்கின்றன.
இசையால் கிடைக்கும் புகழிலும் செல்வத்திலும் திளைப்பதைவிட, இசையமைக்கும் கணத்தில் தன் மனம் அடையும் உத்வேகத்தையே இளையராஜா பெரிதும் விரும்பியிருக்கிறார். கலை, விளையாட்டு, விஞ்ஞானம் உட்பட எந்தத் துறையைச் சேர்ந்த சாதனையாளரும் ஒப்புக்கொள்கிற விஷயம் அது.
ஏதேனும் ஒரு செயலில் ஈடுபடும்போது கிடைக்கிற இன்பம், அது நிகழ்ந்து முடிந்தபின்னர் பிறர் பாராட்டுகையில் நிச்சயம் கிடைக்காது. வார்த்தைகளில் வரையறைகளுக்கு உட்படாத இன்பம் அது.
ஒவ்வொரு கணமும் அந்த இன்பத்தைத் தான் அடைந்தபோது கிடைத்த மகிழ்ச்சியை இனிவரும் தலைமுறையும் அனுபவிக்க வேண்டும் என்று இளையராஜா ஆசைப்படுகிறார்.
‘எனக்கெதுவும் கிடைக்கலையே’ என்ற ஆதங்கத்துடன் அதனை மேற்கொள்ளக் கூடாது எனச் சொல்கிறார். அதற்காகவே, ‘வெறும் காலுடன் நடந்து வந்து இந்த இடத்தை அடைந்திருக்கிறேன்’ என்கிறார்.
துன்பங்களில் இன்பத்தை எப்படிச் சுகிக்க முடியும்? வாதையை ரசிக்கும் மனோபாவம் இயல்பானதா? இது போன்ற கேள்விகளும் கூட அவரை நோக்கி வீசப்படக் கூடும். ‘நான் ஏன் இப்படி கஷ்டப்படுறேன்’ என்று நொந்து சாவதைவிட, அதனை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு அடுத்த கட்டம் செல்வதுதானே இயல்பாக இருக்க வேண்டும்.
எப்போதும்போல், அவரது இந்த வார்த்தைகள் ‘அகங்காரமாக’க் கொள்ளப்படலாம். அதனால், அவருக்கு ஒன்றும் பாதகமில்லை. அவரது ரசிகர்களுக்குத்தான் மன வருத்தம் அதிகம்.
கல்லும் முள்ளும் புல்லும் புதரும் மண்டிக்கிடக்கும் அடர்ந்த காட்டில் நடந்து நடந்து பாதையை உருவாக்குகிற மனிதன், அதன் முடிவில் தரிசிக்கும் வானத்தைக் கண்டு மகிழ்ச்சியுறுவதே இயல்பு. அதே போன்ற வானத்தைக் காண விரும்புபவர்கள் இளையராஜா போல வெறும் காலுடன் நடந்து செல்ல வேண்டுமென்பதில்லை; அவர் உருவாக்கிய பாதையில், ‘பயணம் செய்யும் சுகத்தை அனுபவித்தவாறே’ வேகமாகவோ, மெல்லவோ நடப்பது நல்லது.
தனக்குச் சிலை வடித்து போற்றுவதை விட, தான் கடந்து வந்த பாதையை அறிந்து, தெளிந்து, அதன் வழியே சென்று சிகரத்தைப் பிறர் அடைய வேண்டுமென்பதுவே இந்த பூமிப்பந்தைத் தன்னால் முயன்ற அளவுக்குச் செதுக்க விரும்பும் சிற்பிகளின் நோக்கமாக இருக்கும். எப்போதும் திரையிசை கொண்டு நம் மனதைப் பண்படுத்தும் இளையராஜா, இப்போது வார்த்தைகளால் அதனை நிகழ்த்தப் பார்க்கிறார்.
ஆலமர விதைகளாக, அவர் நம்மிடம் உதிர்க்கும் எளிய வார்த்தைகளைப் பதியமிட்டு வைத்தால், அவை பெரும் விருட்சங்களாக வளர்ந்து நமக்குப் பலன் தரக்கூடும்.
அதற்குப் பதிலாக, அவரது உருவத்தையும் அவர் படைத்தவற்றையும் போற்றி ‘மனிதப் புனிதர்’ ஆக்கி, அவர் காட்டிய வழியை மறந்துவிடலாம்.
சரி, இளையராஜாவை அடையாளமாக்கி அவர் கடந்து வந்த பாதையை நாம் மறக்கப் போகிறோமா அல்லது அந்த பாதையில் இன்னும் எத்தனையோ கலைஞர்கள் பயணம் செய்ய உதவப் போகிறோமா? நம் நெஞ்சில் விளையும் கருத்துகளை ஒன்றாகச் சேர்த்தால் இதற்கான பதில் கிடைக்கும்..!
- உதயசங்கரன் பாடகலிங்கம்
#இசையமைப்பாளர்_இளையராஜா #லிடியன்_நாதஸ்வரம் #சிம்பொனி #இசைஞானி_இளையராஜா #பஞ்சு_அருணாசலம் #isaignani_ilayaraja #ilayaraja #symphony #music #panchu_arunachalam #இளையராஜா