சில திரைப்படங்களின் டைட்டிலே நம்மைத் திரும்பிப் பார்க்க வைப்பதாக இருக்கும். சிலவற்றின் போஸ்டர் டிசைன், நாளிதழ் விளம்பரங்கள், டீசர், ட்ரெய்லர் என்று படம் குறித்த அறிமுகத்தைச் சொல்வதற்கான உத்திகள் ஈர்க்கும் வகையில் இருக்கும். அவை ஒவ்வொன்றின் வழியாகவும் கொஞ்சம் கொஞ்சமாகக் கவனத்தைக் குவித்த படம் ‘எமகாதகி’.
புதுமுகம் பெபின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ள இப்படத்தில் நரேந்திர பிரசாத், ரூபா கொடுவாயூர், கீதா கைலாசம், ராஜு ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜெசின் ஜார்ஜ் இசையமைப்பில், சுஜித் சாரங்க் ஒளிப்பதிவில் தயாரான இப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
‘எமகாதகி’ தரும் திரையனுபவம் எத்தகையது?
’எமகாதகி’ கதை!
ஒரு கிராமம். அங்குள்ள தீப்பாஞ்சி அம்மன் கோயிலில் ஆண்டு திருவிழாவை நடத்த முடிவாகிறது. அதற்கான தேதியை அறிவிக்கிறார் ஊர் தலைவர் (ராஜு ராஜப்பன்).
அதனைக் கேட்டதும், அவரது மகன் (சுபாஷ் ராமசாமி) பதைபதைக்கிறார். காரணம், கோயிலில் உள்ள நகையைத் திருடி அடகு வைத்துப் பணம் பெற்று ஒரு வணிகத்தில் அவரும் அவரது நண்பர்களும் முதலீடு செய்திருக்கின்றனர்.
அந்த வணிகம் நொடிந்த காரணத்தால், கடன் வாங்கி அந்த நகையை மீட்டு ஊர் மக்களுக்குத் தெரியாமல் அதனைக் கோயிலில் வைத்தாக வேண்டிய சூழல். அதனை உடனடியாகச் செய்ய முடியாமல், அவர் தடுமாறுகிறார்.
ஊர் தலைவரின் மகளான லீலா (ரூபா கொடுவாயூர்) வீட்டில் மட்டுமல்லாமல் கிராமத்தினருக்கும் செல்லக்குழந்தையாகவே திகழ்பவர். அவரது குணாதிசயம் அனைவரும் கொண்டாடும் வகையில் இருப்பது அதற்கான அடிப்படைக் காரணம். அவர் தீவிர ஆஸ்துமா நோயாளி என்பதும் அதன் பின்னே இருக்கிறது.
இந்த நிலையில், ஒருநாள் இரவு வயலுக்குச் சென்ற ஊர் தலைவர் கோபத்துடன் வீடு திரும்புகிறார். மனைவி (கீதா கைலாசம்) என்னவென்று கேட்டும் பதில் சொல்வதில்லை. மாறாக, அவரைத் தாக்க முயற்சிக்கிறார்.
சத்தம் கேட்டும் வரும் மகள் லீலா, தந்தையை எதிர்த்துக் கேள்வி கேட்கிறார். உடனே, அவர் கன்னத்தில் பளாரென்று அறைகிறார்.
அந்த நொடி, லீலா துவண்டு போகிறார். தந்தை ஒருபோதும் தன்னைத் திட்டியதோ, அடித்ததோ இல்லை என்பதே அதற்கான காரணம்.
அன்றிரவு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தூங்கச் செல்கிறார் லீலாவின் தாய். அறையில் மகள் தூக்கிலிட்டுத் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டதும் அலறுகிறார்.
தான் திட்டியது பொறுக்காமல் மகள் தற்கொலை செய்துகொண்டதாக அழுகிறார் ஊர் தலைவர். அவ்வூரில் இருக்கும் மருத்துவர் அழைத்து வரப்பட, அவரும் லீலாவின் மரணத்தை உறுதிப்படுத்துகிறார்.
அடுத்த நாள் காலையில், ஆஸ்துமா தீவிரமாகி லீலா இறந்ததாகத் தகவல் சொல்லப்படுகிறது. கிராமத்தினர் அனைவரும் அவரது வீட்டின் முன்னே கூடியிருக்கின்றனர்.
அழுது ஒப்பாரி வைத்தபிறகு, இறுதிச் சடங்குகள் நிகழ்த்துவதற்காக லீலாவின் சடலத்தைத் தூக்க முயற்சிக்கின்றனர் சிலர். அவர்களால் அப்பிணத்தை அசைக்கக் கூட முடிவதில்லை.
’அது உண்மையா பொய்யா’ என்றறிய மேலும் சிலர் வீட்டினுள் நுழைய, பிணம் எழுந்து உட்கார்கிறது. அதனைக் கண்டு மிரள்கின்றனர்.
பிறகு, கயிறு கட்டி இழுக்க முயலப் பின்னால் நகர்ந்து கட்டிலோடு சேர்ந்து சுவரில் சாய்த்துவைத்தாற் போல் நிற்கிறது பிணம்.
அந்த தகவல் ஊரில் இருப்பவர்களைப் பதற்றப்பட வைக்கிறது. ’இந்த பொண்ணு பொணமான பிறகும் எதை நினைச்சிட்டு போக மாட்டேங்குது’ என்று பேச வைக்கிறது.
அதையும் மீறிச் சடங்குகளை நிகழ்த்த முற்படும்போது, சில அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன. அதன் வழியே, கடந்த சில நாட்களில் லீலா எதிர்கொண்ட அனுபவங்கள் எத்தகையது என்பது நமக்குத் தெரிய வருகிறது.
பிணமானபின்னும் வீட்டை விட்டு நகர மறுக்கும் அந்த பெண்ணின் மனதில் என்ன இருக்கிறதென்று புரியும்போது படம் முடிவடைகிறது.
முழுக்கதையையும் கேட்டாலும் கூட, இப்படத்தை நம்மால் ரசிக்க முடியும். ஏனென்றால், வெறுமனே ‘சூப்பர்நேச்சுரல் ஹாரர் த்ரில்லர்’ ஆக இல்லாமல் வேறு சில அம்சங்களையும் கொண்டிருக்கிறது ‘எமகாதகி’.
இக்கதையில் காதல் எபிசோடும் உண்டு. அதுவே, இப்படத்தின் ஆதாரமாகவும் இருக்கிறது. அந்த வகையில், ஒரு சடலம் ஊர் மக்களுடன் நிகழ்த்துகிற ‘மௌன உரையாடல்’ ஆக இருக்கிறது இப்படம்.
வித்தியாசமான அனுபவம்!
மரணங்கள் குறித்துக் கிராமப்புறங்களில் செவி வழியாகச் சொல்லப்படுகிற ‘அமானுஷ்ய கதைகள்’ பாணியில் இப்படத்தின் கதை, திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன்.
’வீட்டை விட்டு பொணத்தை வெளியே கொண்டுவர்றதுக்குள்ள ஒரு வழி ஆகிட்டோம்’ என்பது போன்ற உரையாடல்களைச் சில துக்க வீடுகளில் அரிதாகக் கேட்க நேரிடலாம். அதுபோன்ற பேச்சுகள் முடிவில் ‘எமகாதகி’ கதையைப் போன்றதொரு சம்பவத்தைப் பகிர்வதில் போய் நிற்கும்.
அதையே பலமாகக் கொண்டு, ஒரு வித்தியாசமான காட்சியனுபவத்தைத் திரையில் தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.
வழக்கமான கதை, காட்சிகள் என்றபோதும், திரைக்கதை ட்ரீட்மெண்டில் வேறுபாட்டைப் புகுத்திக் கவனம் ஈர்க்கிறார்.
’இறந்த பெண்ணின் மனதில் என்ன இருக்கிறது’ என்று அறிவதுதான் இக்கதையின் மையம். அதற்காகச் சிலரைக் குறி சொல்ல அழைப்பது என்றில்லாமல், அந்த கிராமத்தினரைக் கொண்டே தீர்வு காண முயற்சிக்கிறது திரைக்கதை. அது சிலருக்குக் குறையாகப் படலாம்.
இதே கதையைக் கொண்டு, பதைபதைக்க வைக்கும் ‘ஹாரர்’ அனுபவத்தைத் தந்திருக்கலாம். ஆனால், ‘ட்ராமா’ வகைமையில் தரவே இயக்குனர் முயன்றிருக்கிறார்.
கோயில் நகை திருட்டு, ஊர் தலைவரின் ஆத்திரம், திருவிழா பாதிப்புக்குள்ளாகுமோ எனும் அச்சம் போன்ற விஷயங்களை தாண்டி, நாயகியின் மூதாட்டியாக வருபவர் ஒரு அறையை வெறித்துப் பார்த்தவாறே பொழுதைக் கழிப்பதும் இக்கதையில் ஒரு அம்சமாக இடம்பெற்றுள்ளது. ஆனால், அதனை பூதாகரமாகக் காட்ட இயக்குனர் விரும்பவில்லை.
மாறாக, கதையில் இருக்கும் அமானுஷ்ய அம்சங்களைக் கொண்டு சமூகப் பிரச்சனைகளை உரத்த குரலில் பேச விழைந்திருக்கிறார். அது பாராட்டப்பட வேண்டிய அம்சம்.
அதேநேரத்தில், அதுவே இப்படத்தின் பலவீனமாகவும் தெரிகிறது. ஏனென்றால், ‘எமகாதகி’ ட்ரெய்லர் பார்க்கும் எவரும் ’இதுவொரு வித்தியாசமான ஹாரர் படம்’ என்றே யோசிப்பார்கள். படத்தைப் பார்த்துவிட்டு ஏமாறவும் வாய்ப்பிருக்கிறது. அதனைக் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் இப்படத்தை ‘கிளாசிக் பட’ பாணியில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு பிரேமையும் செறிவாகக் காட்டுகிற ‘டிஐ’ பணியை செவ்வனே மேற்கொண்டிருக்கிறார் ஸ்ரீஜித் சாரங். அவரது படத்தொகுப்பு, திரையில் கதை குழப்பமின்றி நகர உதவியிருக்கிறது.
கிராமத்து வாழ்க்கை, நாட்டார் தெய்வங்களின் கதையை நினைவூட்டுகிற நாயகி பாத்திரம், ஊர் மக்களின் இயல்புக்குள் மறைந்திருக்கிற முரண்கள், அவற்றுக்கான காரணங்கள் என்று ஒவ்வொன்றையும் விளக்கிச் சொல்கிற வகையில் கலை வடிவமைப்பைக் கையாண்டிருக்கிறார் ஜோசப் பாபின்.
அமானுஷ்யத்தை நிரப்பியதில் கவனம் ஈர்க்கிறது ஜெசின் ஜார்ஜின் பின்னணி இசை. அதே தீவிரத்தைக் கதாபாத்திரங்களின் மனவோட்டத்தைக் கடத்துவதில் தவறவிட்டிருக்கிறார்.
ஒப்பாரிப் பாடலில் பின்னணிப் பாடகியை அழுதவாறே பாட வைத்திருப்பது சட்டென்று தாக்கம் ஏற்படுத்துகிறது. இது போன்ற உத்திகள் அவரது இசையமைப்பு மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அதற்கான பலனை அடுத்தடுத்த படங்களில் ரசிகர்களுக்கு அவர் தர வேண்டும்.
வட்டார வழக்கை வெளிப்படுத்துகிற ராஜேந்திரனின் வசனங்கள், கதை நிகழும் களம் குறித்த எண்ணவோட்டத்தைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்காற்றியிருக்கின்றன.
’எமகாதகி’யின் மையமாகத் திகழ்கிறார் லீலாவாக நடித்துள்ள ரூபா கொடுவாயூர்.
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘மாடர்ன்’னாக போஸ் கொடுத்தாலும், ‘நல்ல கிராமிய முகம்’ என்று சொல்லும் வகையிலேயே அவரது அழகு அமைந்திருக்கிறது. இந்த படத்திற்கு அதுவே ‘ப்ளஸ்’ ஆக அமைந்திருக்கிறது. நன்றாக மூச்சைப் பிடித்து பிணமாக நடிப்பதோடு, திரைக்கதை முழுக்கவே தனது இருப்பு நிறைந்திருப்பதை ரூபா உணர வைத்திருப்பது சிறப்பு.
நரேந்திர பிரசாத் இக்கதையில் நாயகனாக வருகிறார். அவர் வருமிடங்கள் குறைவென்றபோதும், நிறைவான அனுபவத்தைத் தந்திருக்கிறார்.
இவர்கள் தவிர்த்து, இந்தக் கதையின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் கீதா கைலாசம், ராஜு ராஜப்பன், பாட்டியாக வருபவர்களின் நடிப்பு அமைந்திருக்கிறது.
இது போக ராஜு ராஜப்பனின் மகனாக வரும் சுபாஷ் ராமசாமி, அவரது நண்பர்களாக வருபவர்கள், மனைவியாக வருபவர், அவரது உறவினர்களாக வருபவர்கள், கிராமத்து மக்கள், போலீசார் என்று பலர் இப்படத்தில் தலைகாட்டியிருக்கின்றனர். அவர்களது நடிப்பு செயற்கையாகத் தெரியாத அளவுக்கு காட்சியாக்கத்தில் மெனக்கெட்டிருக்கிறது தொழில்நுட்பக் கலைஞர்கள் குழு.
முழுக்க எண்டர்டெயின்மெண்ட்டை வழங்குகிற ஒரு கமர்ஷியல் படமாக ’எமகாதகி’ அமையாதது வருத்தம் தான். அதேநேரத்தில், ‘அரைத்த மாவை அரைக்க விரும்பாமல்’ வேறுபட்ட திரையனுபவத்தைப் பெற விரும்புபவர்களைத் திருப்திப்படுத்துகிறது ‘எமகாதகி’. ‘அது போதுமே’ என்பவர்களுக்கு இது குறிப்பிடத்தக்க படமாகத் தெரியும்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்