பாலி நதி எனும் பாலாறு!

பாலி நதி என்னும் பெயருடன் திகழ்ந்த நதி பாலாறு. பால் உடலுக்குள் ஊறும். அதுபோல் தான் பூமிக்குள் ஊறிக்கொண்டிருக்கும் நதி பாலாறு.

பாலாற்றுக்கு ஒரு சிறப்பு உண்டு. மற்ற நதிகள் எல்லாம் மணல் பரப்புக்கு மேலோடும். பாலாறு மணற்பரப்புக்கு கீழேயும் ஓடும். எனவே வற்றாத நதிகளில் பாலாறும் ஒன்று.

பாலாற்றுடன் நான் என் அம்மாவின் வயிற்றிலிருக்கும் போதே எனக்கு உறவு உண்டு. ஆம், என் அம்மா ஓர் ஆசிரியை. அவர்கள் பணியாற்றும் பள்ளி பாலாற்றைத் தாண்டிச் செல்ல வேண்டிய வடச்சேரியில் இருக்கும்.

ஆற்றில் தண்ணீர் வரும்போதெல்லாம் நடந்துதான் ஆற்றைக் கடக்கவேண்டும். ஆற்றில் அம்மா இறங்கும்போதெல்லாம் வயிற்றுக்குள் இருக்கும் என்னை செவிலித்தாயின் கைகளாய் பாலாற்றின் நீர் அணைத்துக்கொள்ளும். அப்போது நீரைத் தொட்டால் ஏற்பட்ட சிலிர்ப்புதான் இன்றுவரை நீள்கிறது.

பாலாறு என்னுடலில் ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளை ரத்தம். ஆரம்பப் பள்ளிக் காலங்களில் ஆற்றில் நீர் வரும்போதெல்லாம் கிளாரன்ஸ் பாபு வீட்டிற்கு சென்றுவிடுவோம். அவன் வீடு பாலாற்றங்கரையில் இருக்கும். ஆற்றில் தெள்ளிய நீரோடும். நீருக்கடியில் இருக்கும் மணற்துகள்களைப் பார்ப்பதில் எனக்கு ஒரு தனி இன்பம். எல்லோரும் குளித்துக் கொண்டிருக்கும் இடத்தைவிட்டு அகன்று அமைதியாக நதி நடக்கும் இடத்தில் நீரில் அமர்ந்துக்கொள்வேன்.

நீரில் பிரதிபலிக்கும் மணற்துகள்களின் தரிசனம் அவ்வளவு மகிழ்ச்சி தரும். கருவண்ணத்தில் மீன்கள் அக்காட்சியில் குறுக்கிட்டால் அதன் அழகு இன்னும் கூடும். மேல்நிலைக் கல்வி காலங்களில் பாலாறு எனக்கு வேறொரு பரிமாணத்தைத் தந்தது.

வாசிப்பு என்னில் துளிர்விட்ட காலம் அது. நதிகள் பற்றி நான் படித்தவற்றில் இருந்து என் பாலாறு பற்றிய செய்திகளைத் தேட ஆரம்பித்தேன். சங்க இலக்கியத்தில் ஔவையார் பாடல் ஒன்று பாலாற்றைப் பற்றி இருப்பதாக என்னுடைய தமிழாசிரியர் ஏசுடையான் சொன்னார். இன்னும் நினைவிருக்கிறது அப்பாடலின் சில வரிகள்:

ஆற்றுப் பெருக்கெடுத்து அடி சுடும் அந்நாளில்
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்

ஆறு வறண்டு இருக்கும். ஆனால் ஊற்று உள்ளே இருக்கும். உண்மைதானா எனத் தேடி போனோம். நான் சொன்னதைக் கேட்டு சிரித்தார்கள் நண்பர்கள். ஆற்றுக்குப் போய் கைகளால் பாலாற்று மணலை விலக்க விலக்க தண்ணீர் தளும்பியது. கைவைத்துக் குடித்தால் அழுக்காகி விடும் என்பதால் தலையை கீழே சாய்த்து வாயில் உறிஞ்சி பாலாற்றுப் பாலைப் பருகினோம்.

அதற்குப் பிறகு நீண்டகாலம் பாலாற்றில் தண்ணீர் வரவில்லை. ஆனால், ஆற்றோடு என் உறவு தொடர்ந்து இருந்தது. பாலாற்றின்மீது ஆம்பூரில் மேம்பாலம் கட்டப்பட்ட பிறகு அந்த உறவு இன்னும் வலிமையானது. முள்செடிகளும் குப்பைகளும் நிறைந்துவிட்ட பாலாற்றை மாலை நேரத்தில் அந்தப் பாலத்தின்மீதிருந்து பார்த்துக்கொண்டே இருப்பேன். மஞ்சள் ஒளி வீசும் மாலை நேரத்தில், கொஞ்சம் கொஞ்சமாய் செம்மஞ்சள் பூசும் மேற்கு வானின் ஊடே பாலாற்றைப் பார்ப்பதில் அத்தனை ஆர்வம். பாலாற்றைப் பற்றி நிறைய எழுதினேன்.

ஒவ்வொருமுறை பாலாற்றில் தண்ணீர் வரும்போதும் குளிப்பது எங்கள் வாடிக்கை. யாருமற்ற அழிஞ்சிகுப்பம் பகுதிக்கு செல்வோம். அங்கே பாலாறு பரந்து விரிந்திருக்கும். பேர்ணாம்பட்டு பகுதியிலிருந்து வரும் துணையாறு மலட்டாறு அங்குதான் கலக்கும். பொன்னிற மணற்பரப்பில் பாலாற்று நீரில் குளிக்கும் அந்தப் பொழுதுகள் இனிமையானவை. இப்படி வாழ்வோடு கலந்திருக்கும் எங்கள் தாயைக் கொன்று போட்டவர்களும் நாங்கள் தான். தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீரையும், நகரத்துக் குப்பைகளையும் கொண்டு ஆற்றை விஷம் வைத்துக் கொன்றோம். மணல் திருடி வீடுகட்டி குடிக்கத் தண்ணீர் இழந்தோம். தங்கத்திரவம் ஓடிவருவதைப் போன்ற மணலிருந்த ஆற்றில் கோழி இறக்கைகளைக் கொட்டி வைத்திருக்கின்றோம். இந்தக் காலத்தில் நான் ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பாலாறு என எழுதச் சொல்ல ஒரு மாணவன் ‘பாழாறு’ என எழுத எனக்கு ஒரு பொறி தட்டியது. அது ஒரு கவிதையாய் மாறியது.

சரியாய்த்தான் எழுதினான்
மாணவன்
பாழாறு

ஐக்கூ வடிவத்திலான அக்கவிதை பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டது என்பது வேறு கதை.

ஆனால் இன்றுவரை தண்ணீரற்றவர்களாய்த்தான் நாங்கள் இருக்கிறோம். காவிரித்தாயின் கால்களில் விழுந்து இரவல் பெற்ற தண்ணீர் தான் இப்போது எங்களுக்கு.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலாற்றில் தண்ணீர் வந்தபோது நானும் நண்பர்களும் சேர்ந்து, ‘நடந்தாய் வாழி பாலாறு’ என்னும் தலைப்பில் ஓடும் நீரில் கவியரங்கம் நடத்தினோம்.

கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து மழை வருகிறபோதெல்லாம் பாலாற்றில் தண்ணீர் வரும். 2023 இல் பெரும் வெள்ளம் வந்தது. இருகரையும் தொட்டுச்சென்றது. பழைய நினைவுகளையும் அந்த வெள்ளம் அடித்து வந்தது. ஆற்றைச் சுற்றியுள்ள அனைத்து கிணறுகளையும் நிறைத்தது. கரும்பும் தென்னையும் வாழையும் விளைந்த எங்கள் ஊரின் வளத்தைக் காத்த பாலாறு என் தனிப்பட்ட வாழ்வின் ஒரு பகுதிதான்.

பாலிநதி
கரையின் ஓரங்களில் விளைந்த
நாணல்பூக்களில் தேன் குடித்த வண்டுகள் பறக்கும்
அலைபரப்பும் மெல்லிய நீரோடுகையில்
பொன்மணற்துகள்கள் மீனுடல் காட்டி புன்னகைக்கும்
செம்மண்நிறப் புதுவெள்ளம் நுரை தள்ளி
கரைதொடும் காலங்களில்
அடித்துச்செல்லும் சத்தைகளில் எங்கள்
அழுக்குகளும் சேரும்
ஆற்றுடலில் ஓடும் உன்னீர் நிறைக்கும்
எங்கள் வீட்டுக்கிணறுகளை
தென்னையும் கரும்பும் கரைநிலங்களில்
விளைந்து ஓட்ட நீ வளைந்து ஓடும்
பேரழகில் எங்கள் உடல் மறக்கும்
குதித்து விளையாடும் ஆரல் மீன்களை
சட்டைகளைக் கழற்றி நாங்கள்
பிடிக்கையில் எகிறி உன்னில் குதிக்கும்
அவற்றோடு
நாங்களும் குதிப்போம்
தாயின் பரிவோடு சால ஊட்டினாய் நீ
உன் மணற்செல்வத்தை வாரி திருடுகிறோம்
உன் மடியில் விஷநீரினைச் சேர்க்கின்றோம்
தாயின் மார்பறுத்து
தற்காலிக பசி நீக்கும்
எங்கள் கைகளைக் கழுவ
இன்னும்
இருப்பதையெல்லாம்
சுரக்கிறாய் நீ.

(கவிதை: யாழன் ஆதி, யாருமற்ற சொல், 2012)

மார்ச் 2025 / அந்திமழை 55

#கரும்பு #தென்னை #வாழை #பாலாறு #பாலிநதி #தண்ணீர் #கிணறு #தாய் #நாணல்பூ #coconut_tree #paalaru #paali_river #water #well #sugar_cane #banana_tree 

You might also like