கலைக்கூடல் விழா:
வேற்றுமையில் ஒற்றுமை ‘கலைக்கூடல்’ விழா உதகை ஒய்எம்சிஏ அரங்கில் பிப்ரவரி 23-ம் தேதி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதற்கு விவசாயிகள், தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் திருV.ராமகிருஷ்ணன் தலைமை வகிக்க, தமிழ்நாடு விவசாயிகள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் திரு K.A. சுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.
விழாவினை தமிழ்நாடு அரசு தலைமைக் கொறடா மாண்புமிகு க.ராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டத்தில் தமிழர்கள், தாயகம் திரும்பிய தமிழர்கள், மலையாளிகள், படுகர்கள், கனனடியர், தெலுங்கர்கள், பாரம்பரிய பழங்குடிகளான பனியர்கள், குரும்பர்கள், இருளர்கள், காட்டுநாயக்கர்கள், முல்லு குரும்பர்கள், கோத்தர்கள், தொதவர்கள், இனக்கமாக வாழ்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் தனித் தனி மொழிப் பண்பாடுகள் உள்ளது.
அனைவரும் நீலகிரியில் சாதி, மதம், இனப் பாகுபாடுகளைக் கடந்து வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.
இதுபோன்ற ஒரு சூழ்நிலை நாடுமுழுவதும் வர வேண்டும் என்பதற்காக தான், அகில இந்திய தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி மக்கள் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டதோடு நீலகிரிவாழ் மக்களை பெரிதும் பாராட்டியுள்ளார்.
இதனை VTMS-ன் மாநில ஒருங்கிணைப்பாளர் M.S.செல்வராஜ் அவர்கள் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
பழங்குடிகளின் பாரம்பரிய நடனம்
கோயம்பத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் முனைவர் அரிச்சந்திரன் தொடங்கி வைத்து பேசும்போது, நீலகிரியின் பழங்குடி மக்களின் நடனம், கலை, பண்பாடு உலகில் மிக முக்கியமானதாகும்.
இயற்கையுடன் இணைந்த இவர்களின் வாழ்க்கை முறை நாகரிகம் பற்றி பேசக்கூடிய பெரும்பான்மை சமூகங்கள் கற்றுக்கொள்ள பல முக்கியமான ஆற்றல்கள் உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.
நீலகிரி பழங்குடிகளின் நடனம், இசை, இசைக்கருவிகள், நடன அசைவுகள் ஆராய்ச்சியாளர்களால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை எடுத்துரைத்ததோடு, பழங்குடிகளின் நடனத்தைத் தொடங்கி வைத்தார்.
பனியர்கள், இருளர்கள் மற்றும் அனைத்து ஆதிவாசிகளின் நடனம் பார்வையாளர்களைக் கவர்ந்து எல்லோரையும் ஆட்டம்போட வைத்தது.
திருமதி வாசமல்லி தொதவர்களின் பண்பாடுகளை விவரித்தார். இதைத் தொடர்ந்து தமிழக கலை அறிவியல் மையத்தின் – செல்வி, பூஜா, ஜனா, ஜனனி மணிகண்டன் குழுவினரின் “கோலாட்டம்” வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் மக்களை சிந்திக்கவைக்கும் எழுச்சிப் பாடல்கள் – இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
நூல் வெளியீடும்- 7 நூல்கள் அறிமுகம்
தமிழ்நாடு, டெல்லி, உத்தரகண்ட் குழுவினருடன் இணைந்து ஆய்வு செய்து திரு M.S. செல்வராஜ் எழுதிய –
1) உழைக்கும் மக்களின் பார்வையில் “சமூக ஊடகங்கள் நம்பத் தகுந்தவையா”?
2) இந்தியாவில் கூட்டு உற்பத்தியும் கூட்டுறவும்
– என்ற இரண்டு நூல்களை தமிழ்நாடு அரசு தலைமைக் கொறடா மாண்புமிகு க. ராமச்சந்திரன் வெளியிட, உதகை மூத்த வழக்கறிஞர் திரு. விஜயன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
நூல்களை வெளியிட்டு க.ராமச்சந்திரன் பேசும்போது, ஒரு நூலினை வெளியிட வேண்டுமென்றால் கடுமையான உழைப்பு தேவை, அதனை திறம்பட திரு. M.S. செல்வராஜ் செய்து இருக்கிறார். இந்த இரண்டு நூல்களும் மிக சிறப்பானவை.
நூல்களை படிப்பதன் மூலம்தான் ஒரு நல்ல சமூகத்தை ஏற்படுத்த முடியும். திராவிட கோட்பாடு என்பதே நல்ல நூல்களை அடிப்படையாகக் கொண்டதே.
நமது பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இன்றைய நமது முதல்வர் எல்லோரது நூல்களே தமிழ்நாட்டை சிறப்பாக வளர்ச்சியடைய செய்து இருக்கின்றது.
பெண்கல்வி ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, இந்த நூலினை எழுதிய M.S.செல்வராஜ் அவர்களை வாழ்த்துகிறேன் என்றார்.
மூத்த வழக்கறிஞர் திரு. விஜயன், மூத்த பத்திரிகையாளர் கோவை, திரு. க.சு. வேலாயுதம் முற்போக்கு எழுத்தாளர் கோவை, இரா. முருகவேல், பேசும்போது இந்த விழாவில் அறிமுகம் செய்த 7 நூல்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.
வன உரிமை அங்கீகார சட்டம், மலையகத் தமிழர்களின் வீரவரலாறு, உள்நாட்டு அகதிகள், வனவிலங்குகள் மனிதர்களை தாக்குவதற்கு யார் காரணம் என்ற நூல்களைப பற்றி பேசியதோடு, இந்த நூல்களை இளைஞர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இவரின் நூல்களில் சில ஆங்கிலத்திலும், இந்தியிலும் வெளியாகியிருப்பது வரலாற்று பதிவாகும். மேலும் விழாவில் இடம்பெற்ற பல்சுவை நிகழ்ச்சிகளை பெரிதும் பாராட்டினர்.
மார்க்சிம் கார்க்கி விருது
சன் டிவி தொடங்கிய காலத்தில் இருந்து பல ஆண்டுகளாக ஊடகவியலாளராக சிறப்பாக செயல்பட்டுவரும் மனித உரிமை, மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல், வன உயிரினங்கள் பாதுகாப்பில் மிக சிறப்பாக கடுமையான உழைப்பை செலுத்தி, செய்திகளை சேகரித்து வெளி உலகத்துக்கு கொண்டுவந்த திரு R.A. தாஸ் மற்றும் பல ஆண்டுகளாக சுயநலம் இன்றி மக்களின் மேம்பாட்டுக்காக செயல்பட்ட திரு. முனியாண்டி, ஆதிவாசி தலைவர்கள் திரு. கரியன், திருமதி. மூக்கி ஆகியோருக்கு உலக புகழ்பெற்ற முற்போக்கு ரஷிய எழுத்தாளர் தோழர் “மார்க்சிம் கார்க்கி” விருதினைப் பெற்றனர்.
இந்த நிகழ்வுக்கு நீலகிரி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் திரு ப.சந்திரபோஸ் வழக்கறிஞர் தலைமையில் நடைபெற்ற தோடு விருதினையும் வழங்கினார்.
அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்பாளர், திரு.கண்ணையன் சமூக மாற்றத்தில் இதுபோன்ற ஒற்றுமையை வலியுறுத்தும் கலை விழாக்கள் மிக முக்கியம் என்றதோடு அனைவரையும் பாராட்டினார்.
குழந்தைகளின் குரல்
“200 ஆண்டுகளுக்கு மேல் எங்கள் பெற்றோர்கள் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்தது போதும்”.
தமிழக முதல்வரே:
“டேன்டீ நிலத்தை எங்களுக்கே பிரித்துக் கொடுத்து 200 ஆண்டுகள் அடிமை முறையை அகற்றவும்”.
இக்கோரிக்கையை ஆங்கிலத்திலும் முழங்கினர் .
Children’s voices
“Enough that our parents worked as slaves for more than 200 years in the tea plantations.”
Chief Minister of Tamil Nadu:
“Distribute TanTea land amongst us and get rid of 200 years of slavery once and for all”.
இந்தக் கலைக்கூடலில் நீலகிரி, கோயம்பத்தூர், ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களும், கிராம தலைவர்களும், பெண்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். VTMSன் மாணவ அணியைச் சேர்ந்த செல்வி பூஜா நன்றியுறையுடன் விழா நிறைவு பெற்றது.