சங்கப் புலவர்கள் பொன்னுரை – 3
******
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே!
– புறநானூறு 165
– திணை : பாடாண் திணை
– துறை : பரிசில் விடை
– பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
– பாடப்பட்டோன் : குமணன்.
15 அடிகள் கொண்ட புறநானூறு 165 பாடலின் முதலிரு அடிகளே இவை.
இவ்வுலகம் நிலையில்லாதது. நிலையில்லா உலகில் நிலைபெற வேண்டின் புகழை நிலைநிறுத்த வேண்டும் என்கிறார் பெருந்தலைச் சாத்தனார்.
சாதலைக் காட்டிலும் துன்பமானது எதுவுமே இல்லை; ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தால் அச் சாதலும் இனியதே ஆகும் என்கிறார் திருவள்ளுவர்.
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை. (திருக்குறள் – 230)
என்பதே அக்குறள்.
இதற்கு எடுத்துக்காட்டானவன் குமணன். காட்டில் தன்னை நாடி வந்த புலவர்க்குக் கொடுக்க ஒன்றுமே இல்லை என்ற நிலை வந்த பொழுது தன் உயிரையே கொடுக்கத் துணிந்தான்.
தன் தம்பி, தன் தலைக்கு விலை பேசியிருந்தமையால் தன் வாளைப் புலவரிடம் நீட்டித் தலையை வெட்டி எடுத்துச் சென்று அவன் தரும் பொருளைப் பெற்றுக்கொள்ளட்டும் என்றான்.
நிலையான வாழ்விற்கான வழியைக் கூறும் இப்பாடல் இவ்வாறு வரலாற்றுச் செய்தியைக் கூறுகிறது.
குறுநில மன்னனான குமணன் முதிர நாட்டை ஆண்டு வந்தவன். பாரி, ஓரி, காரி, எழினி, பேகன், ஆய், நள்ளி யென்ற வள்ளல்கள் எழுவருக்கு அடுத்து வாழ்ந்து புகழ் பெற்றவர் குமணன்.
அவன் நாட்டை அவன் தம்பி இளங்குமணன் கவர்ந்து கொண்டதால் அவன் காட்டில் தஞ்சம் புகுந்தான். புலவர் பெருந்தலைச்சாத்தனார் காட்டிற்குச் சென்று அவனைப் பாடினார்.
புலவருக்குத் தரக் குமணனுக்குத் தன்னைத் தவிர வேறொன்றும் இல்லை. ஆதலின் மகிழ்வுடன் குமணன் தன் வாளைப் புலவர்க்குக் கொடுத்தான். அந்த வாளை எடுத்துச் சென்று இளங்குமணனைப் புலவர் சந்தித்தார்.
“பரிசில் பெறாமல் பரிசிலன் வாடிச் செல்லுதல், தான் நாடு இழந்ததினும் மிகவும் இன்னாதது என எண்ணித், தன் தலையை எனக்குத் தரும் வகையில், அவன் வாளை என்னிடத்தே தந்தனன்.” என்றார் புலவர்.
உடனே இளங்குமணனுக்குத் தமையன் மீதான பாசம் பீறிட்டு வந்தது. அதனைக் கண்டு நெகிழ்ந்த புலவர், குமணன் உயிருடன் இருக்கும் உண்மையைக் கூறி இருவரையும் சேர்த்து வைத்தார்.
புகழ்மிகு செயலால் நிலையான வாழ்வு வாழும் குமணனைப்போல் நாமும் புகழால் நம்மை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுவே, இப்பொன்னுரை தரும் செய்தி.
– இலக்குவனார் திருவள்ளுவன்