தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, சாதியை மையப்படுத்தும் சங்கங்களை, சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா? எனவும், பள்ளி, கல்லூரிகளின் பெயரில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா? எனவும் விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் சாதியை தூக்கிப் பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள் என்றும் நிலவுக்கே சென்றாலும் சாதியைத் தூக்கிச் செல்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.
அதோடு, படிப்படியாகவே சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்றும் அதற்கான நேரம் இது என்றும் அவர் தெரிவித்தார். கை ரிக்ஷாவை ஒழித்தது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்ட நிலையில், இந்த விஷயத்தில் அரசு ஒரு முடிவு எடுத்தால் நாளைய வரலாறு அதனை நினைவு கொள்ளும் எனக் கூறிய நீதிபதி, சாதி சங்க விவகாரத்தில் நிலைபாட்டை தெரிவிக்க அரசுக்கு கடைசி வாய்ப்பாக மார்ச் 14-ம் தேதி வரை அவகாசம் வழங்கினார்.
அதோடு, அன்றைய தினம் அரசு விளக்கம் அளித்தாலும் இல்லாவிட்டாலும் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.