இந்தியாவின் முன்னுதாரணமான மாநகராட்சியை உருவாக்கியவரின் மறைக்கப்பட்ட தியாகம்!

முனைவர் க.பழனித்துரை

பிப்ரவரி 22ஆம் தேதி கோபிச்செட்டிபாளையத்தில் ஒரு காந்தியவாதியின் 109வது பிறந்த நாள் விழா. அத்துடன் அவரின் குடும்ப உறுப்பினர்களைப் பாராட்டும் விழாவும்.

அந்த காந்தியவாதி நடத்திய விடுதியை நடத்த பல்வேறு நிலைகளில் உதவிகளைச் செய்த பெரியவர்களின் படத்திறப்பும், அந்த விடுதியில் படித்த பழைய மாணவர்களுக்கு பாராட்டு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் பேசுவதற்காக என்னையும் அழைத்திருந்தனர். அந்த மாமனிதரைப் பற்றிய ஒரு புத்தகத்தை வாசித்து, அவர் செய்த தியாகத்தின் உச்சத்தை உணர்ந்து, தமிழ்ச் சமூகம் எவ்வளவு சுயநலச் சமூகமாக மாறிவிட்டது என்பதைப் பார்த்து வெட்க உணர்வுடன் அதில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன்.

மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து காந்தியின் கட்டளையை உள்வாங்கிச் செயல்பட்டதன் விளைவு ஏழு ஆண்டுக்கு மேல் சுதந்திரப் போராட்ட காலத்தில் சிறைவாசம் அனுபவித்தார் என்பதைவிட, தன் மனைவியையும் சிறைக்கு அனுப்பி வைத்தார் என்பதுதான் தியாகத்தின் உச்சம்.

அவர்தான் கோபிச்செட்டிப்பாளையத்தில் தாழ்த்தப்பட்டோருக்காக மாணவர் விடுதி நடத்தி வந்த, எல்லோராலும் அய்யர் என்று அழைக்கப்பட்ட லட்சுமண அய்யர். அவர் காந்தியைப் பார்க்க சிறைத் தவமிருந்து ஓடி காந்தியைச் சந்திக்கிறார்.

காந்தியிடம் எங்கள் குடும்பம் சுதந்திரப் போராட்டக் குடும்பம், என் தந்தை ஒரு போராட்டக்காரர், நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.

உடனே காந்தி “நீ அரிசனங்களுக்கான பணி செய்” என்று கூறுகிறார். அது அவருக்கு குரு இட்ட கட்டளை. அது அவரின் இதயத்தில் பாய்ந்தது.

அந்த கட்டளையின் வெளிப்பாடுதான் லட்சுமண அய்யரின் அரிசன மாணவர்களுக்கான விடுதி. அது தான் இறக்கின்றவரை மூச்சாகவே இருந்தது.

இந்த தியாகத்தின் மகிமையை இன்று உள்ள மக்களின் மனப்போக்கை பார்க்கும்போது எப்படி விளக்குவது என்பதே தெரியவில்லை.

இன்று ஒரு மன ஓட்டம் அனைவரிடமும் இருக்கிறது. அந்த மன ஓட்டம் என்பது எதைப் பற்றியும் யோசிக்காமல் தன்னைப் பற்றியே சர்வகாலமும் சிந்திக்கும் மனநிலைதான் அது.

அது எங்கிருந்து வந்தது? இன்று நாம் வாழும் காலம் என்பது நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து நான்காவது தலைமுறை வாழும் காலம். முதல் தலைமுறை தியாகம் செய்தது.

தன் வாழ்வை, தன் சுகத்தை, தன் குடும்பத்தை, தன் சொத்துக்களை, தியாகம் செய்து நாட்டை விடுதலை செய்தது.

அது மட்டுமல்ல அந்தத் தலைமுறை சொல்லொணா துயரங்களை அனுபவித்தது. அவைகள் அத்தனையும் தன் நாடு பெரிது என கண்ணோட்டம் கொண்டிருந்ததால், தான் அனுபவித்த சோதனைகள் அத்தனையும் அவர்களுக்கு வலியாக, வேதனையாகத் தெரியவில்லை.

அந்தத் தலைமுறை இரண்டாவது தலைமுறை உருவானபோது, குறைந்தபட்சம் மரியாதையைப் பெற்றது. தியாகம் செய்தவர்களைப் போற்றியது பாராட்டியது. அந்த தியாகம் அளவுக்கு இரண்டாவது தலைமுறை நாட்டுக்காக பணி செய்ததா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால் தியாகத்தை மதித்தது, போற்றியது.

மூன்றாவது தலைமுறை வந்தது. முழுக்க முழுக்க வணிகத் தலைமுறையாக வந்துவிட்டது. எதையும் வணிகமாகவே பார்த்து செயல்பட ஆரம்பித்தது.

அது தியாகம் பற்றியோ, நாடு பற்றியோ, சமூகம் பற்றியோ எதைப் பற்றியும் அதற்குக் கவலை இல்லை. அனைத்திலும் எனக்கு என்ன கிடைக்கும் என்பதுதான் பிரதானமாக இருந்தது அந்தத் தலைமுறைக்கு.

நான்காவது தலைமுறை வந்தது. அது எந்த அச்ச, கூச்ச உணர்வின்றி மற்றவர்களைச் சுரண்டி வாழக் கற்றுக் கொண்டுவிட்டது.

சுரண்டி வாழ்வது ஒரு இழி செயல் என்பதுகூடத் தெரியாமல் அதைச் செய்து கொண்டுள்ளது.

அந்தத் தலைமுறை வாழும் காலத்தில் இந்த தியாகத்தை நாம் நினைவு கூறுகின்றோம்.

நான் எதையும் செய்து பணம், புகழ், பதவி, பட்டம், சுகம் அனைத்தும் சேர்த்து சுகபோக வாழ்க்கை வாழ வேண்டும். நீதி, நியாயம், அறம், சட்டம், ஒழுக்கம் என்பதெல்லாம் என் செயல்பாடுகளுக்கு இல்லை.

நான் சேர்க்கும் பணம் நான் செய்யும் தவறுகளுக்கு எதிர்வினையாற்றி என்னை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற பொதுப் புரிதலோடு செயல்படும் கூட்டம் தொடர்ந்து வலுத்துக் கொண்டு வருகிறது.

இந்தப் பின்னணியில் நாம் லட்சுமண அய்யர், அவர் குடும்பம் சமூகத்தால் எப்படிப் பார்க்கப்பட்டது.

அந்தக் குடும்பம் அனுபவித்த சாவல்கள், வேதனைகள், வலிகள் அனைத்தையும் நாம் இன்று அசைபோட்டுப் பார்க்கையில் அவர் எவ்வளவு உயரத்தில் மானுடராக இருந்து மானுடத்திற்குத் தொண்டாற்றினார் என்பது தெரிய வருகிறது.

அவர் பிறந்தது ஒரு நிகழ்வுதான். ஆனால், அவர் வாழ்ந்தது ஒரு வரலாறு. கடைக்கோடி மனிதர்களின் மேம்பாட்டுககாக தன்னையே கரைத்துக்கொண்டு செயல்பட்டதுதான் அவர் செய்த சாகசம். அது மானுட வாழ்வை தெய்வீக வாழ்வாக மாற்றிக் கொண்டு வாழ்ந்தது.

காந்தியிடம் அவர் உள்வாங்கிக் கொண்டது, வாழ்க்கைச் சமூகத்திற்கானது என்பதைத்தான். தீண்டாமை ஒழிப்பு. சுகாதாரம். அதிலும் தூய்மைப் பணி இவைகள்தான் காந்தியின் அடிப்படை என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டார். அதை செயல்படுத்த திட்டம் தீட்டினார்.

இந்த மூன்றும் கடந்து ஓர் அற அரசியலுக்கு வழிகாட்டியது, மேலும் ஓர் சிறப்பு அம்சம். ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்து சிறுவனை தன் வீட்டில் வைத்திருந்ததாலும் தாழ்த்தப்பட்டவர்களை தன் இல்லத்திற்குள் அனுமதித்து தண்ணீர் எடுக்க அனுமதித்தாலும்,

அந்த நீரை அவரே பருகியதாலும் அவர் குடும்பம் சாதி அந்தணர்களால் சாதியை விட்டு விலக்கி வைத்தபோது, அந்தக் குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலம் என்ன என்று சிந்தித்த அந்த குடும்ப உறுப்பினர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை இன்று நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.

இவ்வளவு பெரிய பணக்காரர் குடும்பத்தில் பிறந்த குடும்ப உறுப்பினர்களை தங்க நகை அணியக் கூடாது, காதிதான் உடுத்த வேண்டும் என்று கட்டளை போட்டபோது அவர்களின் மன உணர்வு என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.

தான் சிறையில் இருந்தபோது, சிறைப்பட்டு விட்டோமே என்று பயந்து வாழவில்லை. அங்கும்கூட கழிப்பறை சுத்தம் செய்யும் பணியைக் கேட்டு வாங்கிச் செய்தது, அவரின் திருவுருவ மாற்றத்திற்கான செயல் திட்டம் என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்.

கோபிச்செட்டிப்பாளையத்தில் இருக்கம் பள்ளி, கல்லூரி என பலவற்றுக்கு தங்கள் நிலம் அளிக்கப்பட்டு தன் வீடு ஏலம் போன வரலாற்றில், ஏலம் எடுத்தவர் அவர் வீட்டை லட்சுமண அய்யர் செய்ய சேவையைப் பாராட்டி அவரிடமே கொடுத்து விட்டார்.

இன்று கோபிச்செட்டிபாளையத்தில் அவர் குடும்பம் இழந்த 640 ஏக்கர் நிலத்தின் மதிப்பு என்ன என்பதைக் கணக்கிட்டால் எவ்வளவு பெரிய கோடீஸ்வர வாழ்க்கையை அந்தக் குடும்பம் வாழ்ந்திருக்க முடியும்.

இன்றும் தன் தந்தையின் குறிக்கோள் நிறைவேற இன்முகத்துடன் அந்த விடுதியை நடத்த பணி செய்யும் லட்சுமண அய்யரின் மகனின் தியாகத்திற்கு எது ஈடு இணை என்பதை நம் சமூகம் யோசிக்கிறதா?

பதிமூன்று சேரிகள் (தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் இடங்கள்) அடகு வைக்கப்பட்டிருந்தன. அவைகளை பணம் தந்து மீட்டெடுத்து சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்கியது.

அடுத்து ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை உருவாக்கி ஏழைகளுக்கு மரியாதையுடைய வாழ்க்கையை வாழ வழிவகை செய்ததை எப்படி விவரிப்பது என்பதே நமக்குப் புலப்படவில்லை.

அரிசன மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதை தன் கடமையாகச் செய்வது என்பதுதான் தியாகத்தின் பொருள் என்று எண்ணத் தோன்றுகிறது.

மக்களின் நன்மதிப்பைப் பெற்ற காரணத்தால், அந்த நகர சபையின் தலைவரானார்.

இவர் பிறந்த சாதி இவரைத் தள்ளியது, மற்ற சாதிகள் இவரை அணைத்துக் கொண்டது. ஆகையால் தான் இவரால் அந்த நகராட்சிக்குத் தலைவராக முடிந்தது.

அதில் காந்தியின் முதல் கனவான தூய்மையான வாழ்விடத்தை உருவாக்க பெருமுயற்சி செய்து இந்தியாவிலேயே முழுமையான சுகாதாரம் பேணும் உள்ளாட்சியாக்கி சாதனை படைத்தவர்.

கையால் மலம் அள்ளுவதை முற்றிலுமாக ஒழித்த மாநகராட்சி என்பது கோபிச்செட்டிபாளையம் என்ற பெருமைக்கு காரணமாக இருந்தவர் லட்சுமண அய்யர்.

இந்த கோபியை இந்தியாவுக்கே வழிகாட்டும் ஒரு உள்ளாட்சியாக மாற்றியமைத்தது ஒரு வரலாற்றுச் சாதனை.

தீண்டாமை ஒழியாமல் சுயராஜ்யம் கிடையாது, தீண்டாமை ஒழியாமல் இந்துமதம் தழைக்காது என்பதை உணர்வுடன் உள்வாங்கியதால்தான் அரிஜனங்களுக்காக இந்த விடுதியை ஏற்படுத்தி இதுவரை ஒரு 4500 மாணவர்களை உயர்ந்த வாழ்க்கை வாழ வழிவகை செய்துள்ளார் லெட்சுமண அய்யர்.

காந்தியின் உச்சபட்ச தியாகத்திற்கு ஒரு சில அடையாளங்கள் அடிப்படை. ஒன்று துப்புரவுப் பணி செய்தல். அதுவும் மலஜலக் கூடம் கழுவுதல். இரண்டு தீண்டாமைக்கு எதிராகச் செயல்படுதல். மூன்று பெண்களை இணைத்துக் கொண்டு செயல்படல். இவை மூன்றும் லட்சுமண அய்யரிடம் இருந்தது.

பகவான் அரவிந்தர் கூறியதுபோல், மனித வாழ்வை தெய்வ வாழ்வாக மாற்ற முடியும் தன் செயல்களாலே என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்தவர் லட்சுமண அய்யர். இந்தப் பணியைத்தான் விவேகானந்தரும் வேண்டினார், தாகூரும் வேண்டினார்.

அந்த விழாவில் லட்சுமண அய்யர் வாழ்வை ஆவணமாக்கித் தந்த சுபி.தளபதியும், லட்சுமண அய்யருக்கு பாரதி விருதை தர ஆவண செய்த மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரனும் லட்சுமண அய்யரின் தியாக வரலாற்றை ஒரு சித்திரம்போல் உணர்வுடன் படம்பிடித்துக் காண்பித்தனர்.

குறிப்பாக ஸ்டாலின் குணசேரகன் உரையாற்றியபோது, இன்றைய அறமற்ற அரசியலுக்கும் லட்சுமண அய்யர் செய்த அற அரசியலுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கி, அவர் தியாகத்தின் உச்சியில் நின்றதை படம்பிடித்துக் காண்பித்தார்.

சுபி.தளபதி பேசும்போது, ஒவ்வொரு நிகழ்வாக லட்சுமண அய்யரின் வாழ்வை எடுத்து விளக்கியது.

அவர் மட்டும் கண்ணீர் விடவில்லை, அவர் குடும்பத்திலிருந்து வந்த அனைவரும் கண்கலங்கி இருந்தனர். அவர்களுடன் அங்கு படித்த மாணவர்களும் மௌனத்தில் ஆழ்ந்திருந்தனர்.

அவர் லட்சுமண அய்யரின் புத்தகத்திற்கு தரவுகளைத் திரட்டும்போது, ஒவ்வொரு நிகழ்வும் ஒரு காவியமாக இருந்ததை அவர் விளக்கியது பலரது மனதுக்குள் எதோ ஒரு வகை குற்ற உணர்வை ஏற்படுத்தியது.

இன்னும் லட்சுமண அய்யரின் தியாக வாழ்வுக்குச் செய்ய வேண்டிய மரியாதையைச் செய்யவில்லையோ என்றுதான் எண்ணி அனைவரும் மௌனத்தில் அமர்ந்திருந்தனர்.

அவரின் உரையில் தமிழ்ச் சமுதாயம் எவ்வளவு எளிதாய், எவ்வளவு சீக்கிரம் இந்த தியாகத்தின் மதிப்பை போற்றத் தெரியாத சமூகமாக மாறிவிட்டது என்பதை எடுத்துக்காட்டிய விதம் வித்தியாசமானது. சில தருணங்களில் அவர் பேச்சில் ரௌத்ரிம் பொங்கியதைப் பார்க்க முடிந்தது.

என்னையும் அந்த நிகழ்வில் பங்குகொள்ள வேண்டியதால், நான் ஒரு கருத்தை முன்வைத்தேன். ஒரு சமுதாயம் எந்த அளவுக்கு தியாகத்தை மதிக்கிறதோ, எந்த அளவுக்கு தியாகத்தைப் பாராட்டுகிறதோ அந்த அளவுக்கு அந்த சமூகத்தில் பொது வாழ்வு என்பது சேவைக்கானதாக இருக்கும், மதிக்கத்தக்கதாக இருக்கும். நாம் இன்று நாலாம் தலைமுறையுடன் வாழ்கிறோம்.

இந்தத் தலைமுறைக்கு சுதந்திரமும் தெரியாது, தியாகமும் தெரியாது, சேவையும் தெரியாது. எனவே அது ஒரு போதை மயக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

எந்த ஒரு சமூகம் தலைமுறை தலைமுறையாய் இந்த தியாக வரலாற்றைக் கொண்டு செல்கிறதோ அங்கு ஒரு வாழ்வியல் ஒழுங்கு இருக்கும்.

இன்று நாம் நம் சமூகத்தில் அப்படிச் செய்யாததன் விளைவை நாம் நடத்தும் வணிக அரசியலில் பார்க்கிறோம். நம் சமூகத்தில் நடக்கும் பொறுப்பற்ற செயல்பாடுகளைப் பார்க்கிறோம்.

இதிலிருந்து நாம் மேம்பட லட்சுமண அய்யரை நினைவுபடுத்தும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும்போது ஒட்டுமொத்த சமூகமும் பங்கேற்று நடத்த வேண்டும் என்று கூறி முடித்துக் கொண்டேன்.

அதனைத் தொடர்ந்து நல்லோர் வட்டம் பாலசுப்ரமணியம், இங்கு படிக்கும் மாணவர்கள் தாங்கள் வாழ்க்கையை பொருளுள்ளதாக மாற்றிக்கொள்ளத் தேவையான வாழ்வியல் கல்வியை எப்படிக் கற்றுத்தருவது என்பதை விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து அந்த விடுதியில் தங்கிப் படித்து இன்று அக்னி ஸ்டீல்ஸ் தலைமைப் பொறுப்பில் இருக்கும் திரு.தங்கவேலு தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டு, அந்த விடுதியை புணரமைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது மிகவும் சிறப்பாய் இருந்தது.

அந்த நிகழ்வில் லட்சுமண அய்யர் குடும்பத்தார்களையும், அந்த விடுதியை சிறப்பாக நடத்தி வழிகாட்டியவர்களையும் பாராட்டி மகிழ்ந்தது கப்பலோட்டிய தமிழன் படம் பார்த்த ஓர் உணர்வில் ஊர் திரும்பினேன்.

இந்த நிகழ்வை அந்த விடுதியில் படித்த மாணவர்களே ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தியது ஒரு வரலாற்று நிகழ்வாகத் தோன்றியது.

 

You might also like