பாரதிராஜாவுக்கு தைரியம் கொடுத்த எம்.ஜி.ஆர்.!

தமிழ் சினிமாவில் புதிய அலையை உருவாக்கியவர் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா. கிராமத்து தெருக்களையும், பசும் வெளிகளையும், படப்பிடிப்பு தளமாக்கியவர்.

காதல், சமூகப் பிரச்சினை, குடும்ப உறவுகள் உள்ளிட்ட பல்வேறு களங்களில் கதை சொன்ன பாரதிராஜா, கிரைம் திரில்லர் படங்களையும் தந்துள்ளார்.

‘முதல் மரியாதை’ படத்தில் சத்யராஜுக்கு கவுரவ வேடம் கொடுத்த பாரதிராஜா, தனது அடுத்த படமான ‘கடலோரக் கவிதைகள்’ படத்தில் அவரை கதாநாயகனாக்கினார். கடற்கரை கிராமமான முட்டம்தான், அதன் களம்.

பெரும் வெற்றி பெற்ற இந்தப் படத்தை தொடர்ந்து பாரதிராஜா – சத்யராஜ் கூட்டணி இணைந்த மற்றுமோர் படம் – ‘வேதம்புதிது’. கண்ணன் எழுதிய நாடகத்தைக் கருவாகக் கொண்டு உருவான திரைப்படம்.

1987-ம் ஆண்டு வெளியான ‘வேதம் புதிது’ படம், ஜாதிகள் ஒழிய வேண்டும் என்ற புரட்சிக்கருத்தை மையமாக கொண்டிருந்தது. வழக்கமாக பாரதிராஜா, திரைப்படத்துக்கு இளையராஜாதான் இசை அமைப்பார்.

அவருடன் பாரதிராஜாவுக்கு சின்ன பிணக்கு. இதனால் இளையராஜாவிடம் இருந்து விலகி, இசை அமைப்பாளர் தேவேந்திரனுடன் இணைந்தார், பாரதிராஜா. தேவேந்திரனும் அற்புதமான பாடல்களைக் கொடுத்தார்.

இந்தப் படத்தில் பாலுத்தேவர் என்ற கேரக்டரில் நடித்த சத்யராஜ், ஒரு சிறுவனை தனது தோளில் தூக்கிக்கொண்டு ஒரு காட்சியில் ஆற்றில் நடந்து செல்வார்.

அப்போது இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் தீப்பொறி ரகம். அந்த சிறுவன், “பாலு உங்க பெயர். அது என்ன தேவர்? தேவர்ங்கிறது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா?” என்று சத்யராஜிடம் கேட்பான்.

தனது கன்னத்தில் யாரோ ஒருவர் அறைந்த உணர்வு, சத்யராஜுக்கு ஏற்படும். இந்தக் காட்சிக்கு தியேட்டர்களில் கைத்தட்டல் காதை பிளக்கும்.

இன்னும் சில பிரச்சினைக்கு உரிய காட்சிகளும் படத்தில் உண்டு. இதனால் ‘வேதம் புதிது’ திரைப்படத்திற்கு பல தடைகள் வந்தன.

இந்த படத்திற்கு ‘சர்டிபிகேட்’ கொடுக்க முடியாது என்று சென்சார் போர்டு கை விரித்துவிட்டது.

இதனால் கொந்தளித்த பாரதிராஜா, ‘சர்டிபிகேட் தராவிட்டால், இந்தப் படத்தின் ஃபிலிம் ரோல்களை சாஸ்திரி பவன் முன்பு எரிப்பேன் – அப்போது நீங்கள், தமிழ்நாடு முழுவதற்கும் பதில் சொல்லணும்’ என எச்சரித்தார்.

அப்படியும் சென்சார் போர்டு வளையவில்லை. அப்போது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். அவர் தலையிட்ட பின்னரே சர்ச்சைகள் அடங்கின. சர்டிபிகேட் கிடைத்தது.

இந்த நிகழ்வை நடிகர் சத்யராஜ், ஒரு விழாவில் நினைவு கூர்ந்தார். அவர் சொன்னது:

“நான் நடித்த ‘வேதம்புதிது’ படத்தை, தடை செய்யவேண்டும் என்று போராட்டங்கள் வெடித்தன. தலைவர் எம்.ஜி.ஆர் படம் பார்த்தார். பாரதிராஜாவுக்கு நம்பிக்கை அளித்தார்.

‘படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யுங்கள் – எந்தப் பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என தைரியமூட்டினார். அப்படி வெளிவந்த படம்தான் வேதம்புதிது” என்றார் புரட்சித்தமிழன் சத்யராஜ்.

– பாப்பாங்குளம் பாரதி.

You might also like