மொழிப்போர் மறவர்களுக்கு என்ன செய்யப்போகிறோம்?!

தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் எப்போதெல்லாம் இடையூறுகள் வருகிறதோ அப்போதெல்லாம் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஒன்றிணைவது இயல்பாகவே நிகழ்ந்து விடுகிறது.

தமிழ் மீதும், தமிழினத்தின் மீதும் எந்த வடிவத்தில், எந்தச் சூழலில் இடையூறுகள் வந்தாலும், அல்லது திணிப்போ, அழுத்தமோ வந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழினம் ஒன்று திரண்டு உரத்துக் குரல் கொடுத்திருக்கிறது என்பதற்கு பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் நம்மிடம் உள்ளன.

மொழித் திணிப்பின் போது உருவான எதிர்ப்பலையை இதன் உதாரணமாகக் கூறலாம். தமிழகத்தில் 1930கள் துவங்கி, 60, 70-கள் வரை பல்வேறு கட்டங்களில் தமிழர்கள் மீது இந்தி மொழித் திணிப்பு நிகழ்ந்திருக்கிறது.

அதற்கு பல்வேறு வடிவங்களில் கடுமையான எதிர்ப்பைத்  தெரிவித்திருக்கிறார்கள். 

மொழிக்கு மட்டுமல்ல இனத்தின் மீது அழுத்தம் கொடுக்கப்பட்ட போதும், தமிழர் பண்பாட்டின் மீது அழுத்தம் கொடுக்கப்பட்ட போதும் அதற்கும் வீறுகொண்டு எழுந்து எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள் தமிழர்கள்.

இவற்றையெல்லாம் வெறும் எதிர்ப்பு என்று மட்டும் சொல்லிவிட முடியாது. வேறெந்த மாநிலத்திற்கும் இல்லாத மொழிப் பற்றும் இனப் பற்றும்  தமிழர்களுக்கு உண்டு என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

அதற்கு அண்மைக் காலத்திய உதாரணம் ஜல்லிக்கட்டுப் போராட்டம். எந்த அரசியல் சார்பும், கட்சிப் பின்புலமும் இல்லாமல் தன்னெழுச்சியாக லட்சக்கணக்கான தமிழர்கள் மெரினாவில் ஒன்று திரண்டனர்.

இப்படி, வரலாறுகள் நெடுக நிறைந்திருக்கும் தமிழினத்தின் எழுச்சியைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

1960களில் நிகழ்ந்த இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடி, இனவுணர்வுள்ள ஏராளமானோர் தங்களது இன்னுயிரைக் கொடுத்து மொழியைக் காத்தனர் என்பதை இங்கு மீண்டும் நினைவு கூர வைத்துள்ளது தற்போதைய சூழல்.

அப்படி உயிர்த் தியாகம் செய்த மொழிப் போர் மறவர்களின் வீரத்தையும் அவர்களது இன உணர்வையும் வெளிப்படுத்தும் விதமாக, பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மணாவின் கருத்தாக்கத்தில் உருவான ‘உயிருக்கு நேர்’ என்கிற ஆவணப்படம் கடந்த சனிக்கிழமை திரையிடப்பட்டது. அதோடு, உயிருக்கு நேர்’ என்ற ஆவணப் புத்தகமும் வெளியிடப்பட்டது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ‘படைப்பு’ அரங்கில் தமிழறிஞர்கள் முன்னிலையில் திரையிடப்பட்ட இந்த ஆவணப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

எழுத்தாளரும் கலை விமர்சகர்மான இந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆவணப்படத் திரையிடல் நிகழ்ச்சியில், கவிஞர் ஜின்ன அஸ்மி வரவேற்புரை ஆற்றினார். கவிஞர் நா.வே. அருள் வாழ்த்துரை வழங்க, புதுவை முத்தமிழ் சங்கப் பொறுப்பாளர் சுவாமி நன்றியுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய தமிழறிஞர்கள் எல்லோரும், இந்த ஆவணப்படத்தை தமிழகம் முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும் என  கோரிக்கை வைத்தனர்.

நிறைவுறையாற்றிய ஆவணப்பட இயக்குனர் மணா, இந்த ஆவணப்படத்தை எல்லா தமிழ் அமைப்புகளிடமும், தமிழர்களிடமும் கொண்டுசேர்க்க வேண்டும் என்றும், இதன்மூலம் இளைஞர்களிடையே இன எழுச்சியை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதோடு இந்த மொழிப்போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் குடும்பங்களை தமிழக அரசும் தமிழ் அறிஞர்களும் நினைவுக்கு கூர்ந்து, அவர்களை கௌரவிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஆவணப்படத்திற்காக, படப்பிடிப்புக்காக சென்றபோது அங்கே மொழிப்போர் தியாகிகளின் கல்லறை இருந்த இடத்தைப் பார்வையிட்டு, மனம் வெதும்பிப் போனதாக ஆதங்கப்பட்டார் மணா.

அதன் வெளிப்பாடாகவே, மொழிப்போர் தியாகிகளின் குடும்பங்களைப் பாதுகாக்க தமிழக அரசும் தமிழறிஞர்களும் முன்வர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

“உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” என்கிற எழுச்சியான முழக்கம், இந்த மொழிப் போராட்டத்தின் போதுதான், ஒரு சாமானியனின் குரலாக எழுந்தது என்ற தகவலையும் மணா அப்போது கூறினார்.

இந்த ஆவணப்படத் திரையிடல் நிகழ்ச்சியின்போது நாட்டுப்புறக் கலைஞரும், பாடகரும், நடிகருமான சித்திர சேனன், தமிழின் தனித் தன்மையைப் பாடலைப் பாடி அரங்கை தன்னெழுச்சியாக உணர்வூட்டினார்.

அவர் பாடிய “தமிழே அமுதே” என்ற பாடலும், தேனிசை செல்லப்பாவின் “தமிழா, நீ பேசுவது தமிழா” என்ற பாடலும் அரங்கத்தை கட்டிப் போட்டது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு உணர்வு எழுச்சியோடு பாடினார் சித்திர சேனன்.

சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, அன்றைய மாலைப் பொழுதை தமிழோடு இனிமையாக்கியது எனலாம்.

– ஆதிமித்ரன்

You might also like