சங்கப் புலவர்கள் பொன்னுரை – 1
******
பல் சான்றீரே! பல் சான்றீரே!
கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள்,
பயன் இல் மூப்பின், பல் சான்றீரே!
கணிச்சிக் கூர்ம் படைக் கடுந் திறல் ஒருவன்
பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ; 5
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்,
நல் ஆற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே!
– புறநானூறு 195
– திணை : பொதுவியல்;
– துறை: பொருண் மொழிக் காஞ்சி.
– நரிவெரூஉத்தலையார்
பொருள்:
பல்வைக் குணங்களை உடையோரே! பல்வைக் குணங்களை உடையோரே! எனப் புலவர் நரிவெரூஉத்தலையார் பயனின்றி வாழ்ந்து மூப்பு அடைந்தவர்களைப் பார்த்துக் கூறுகிறார்.
மீன்முள் போன்ற வெண்முடி கொண்ட தாடியைச் சுருங்கிய கன்னத்தில் உடைய மூப்படைந்தவர்களிடம் கூறுகிறார்.
கன்னத்திலுள்ள நரைத்த தாடியை மீன்முள் போன்றதாக உவமைச் சிறப்புடன் குறிப்பிடுகிறார். கவுள் என்றால் கன்னம். திரை என்றால் அலை. இங்கே அலைபோல் மடிந்து, சுருங்கி அமைந்துள்ள கன்னத்தைக் குறிப்பிடுகிறார்.
யாருக்கும் பயன்படாமல் வாழ்ந்து மூப்படைந்துள்ளமையால் பயனில் மூப்பு என்கிறார்.
பாசக்கயிற்றைக் கொண்டு வந்து கட்டி இழுத்துச் செல்ல காலன் வரும்பொழுது “இதுவரை எந்த நன்மையும் செய்யவில்லையே” என அஞ்சுவீர்களோ என்கிறார்.
வாழுங் காலத்திற்கு முடிவு கட்டுபவனைக் காலன் என்றனர் பழந்தமிழ் மக்கள்.
நன்மை செய்யாததால் நரகுலகு செல்ல நேரிடும் என்று அச்சம் வருகின்றது. எனவே, இறப்புக் காலம் வரும்பொழுது அஞ்சாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? நல்லன ஆற்ற வேண்டும்.
அவ்வாறு நல்லன செய்யாவிட்டாலும் கேடில்லை. யாருக்கும் தீமை செய்யாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.
இது உவகை தருவது மட்டுமல்ல. வாழ்க்கையை நல்வழிக்கண் அழைத்துச் செல்லும் நன்னெறியுமாகும்.
“தீயவை தீய பயத்தலால், தீயவை
தீயினும் அஞ்சப்படும்”
என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.
அத்தகைய தீயதை வாயால் சொல்வதற்கும் விரும்பாது “அல்லது” என்று கூறியுள்ளதாக உரைவேந்தர் ஒளவை துரைசாமி விளக்குகிறார்.
நன்மை செய்ய முடியாமற் போகலாம். ஆனால், தீயது செய்யாமல் இருக்க முடியுமல்லவா? எனவேதான் குறைந்தது “தீயவற்றைத் தவிர்க்கவாவது செய்யுங்கள்” என எளிய வழியைக் கூறுகிறார் புலவர்.
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்
என்பது எந்நாட்டவர்க்கும் எக்காலத்திற்கும் ஏற்ற பொன்னுரை ஆகும்.
– இலக்குவனார் திருவள்ளுவன்