சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள மிகப்பெரிய குடியிருப்பு கண்ணகி நகர். இங்கு செயல்படும் முதல் தலைமுறை அறக்கட்டளை பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் பெண்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது.
ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழும் பகுதியான இங்கே 23,704 சிறு வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன.
ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் பெருங்கடலாக வாழும் கண்ணகி நகரில் ஒரு நம்பிக்கை தீபமாக வெளிச்சம் தருகிறது முதல் தலைமுறை அறக்கட்டளை.
இந்த அறக்கட்டளை சார்பில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு, கண்ணகி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்றுவரும் மாணவர்களை அவர்களுடைய வீட்டிற்கே சென்று சந்தித்தார்.
அப்போது பொதுத்தேர்வு குறித்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை நீக்கி, தேர்வில் கவனச் சிதறல் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், 20 மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும், பணிகளையும், தேவைகளையும் கேட்டறிந்தார்.
தேர்ச்சி பெற்ற பின் மாணவர்கள் விரும்பும் பட்டப்படிப்பைத் தொடர தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதருவதாக தெரிவித்தார்.
முன்னதாக, இறையன்பு கடந்த ஜனவரி 30-ம் தேதியன்று 12 மாணவர்களின் இல்லங்களுக்குச் சென்று சந்தித்தார். மாணவர்களுடனான இரு சந்திப்புகளின் போதும் ஆலோசனைகளுடன் இனிப்புகளையும் வழங்கினார்.
இறையன்புவின் சந்திப்பும் ஊக்கமூட்டிய பேச்சும் மாணவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் வழங்கியதாக மகிழ்வுடன் தெரிவித்தனர்.