அன்றைய விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை அறிவோம்!

நூல் அறிமுகம்: அக்கரைச் சீமையில்

இது சுந்தர ராமசாமியின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு என்று சொல்லப்படுகிறது. முதலாவதாக 1959-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. காலச்சுவடு ‘முதல் சிறுகதை வரிசை’யில் முதல் பதிப்பாக 2007-ம் ஆண்டு வெளிவந்துள்ளது.

ஆசிரியர் சுந்தர ராமசாமி மிகவும் பிரபலமான ஒரு மூத்த எழுத்தாளர். 2005-ம் ஆண்டில் காலமாகி விட்டார். பிரபல எழுத்தாளர் என்பதால் அவரைப் பற்றி அறிமுகம் கொடுக்கத் தேவையில்லை.

இத்தொகுப்பில் பத்துச் சிறுகதைகள் உள்ளன. அனைத்துக் கதைகளும் ஐம்பதுகளில் இதழ்களில் வெளியான கதைகள்.

முதலாவது கதையான அக்கரைச் சீமையில் புத்தகத்தின் தலைப்புக்கான கதை. ஆப்ரிக்காவில் தென் ரொடீஷியாவில் நடைபெறும் கதை. அன்றைய ஆப்ரிக்க வாழ்வினைச் சித்தரிப்பதாக இருக்கிறது இக்கதை.

நிற பேதங்கள் மூலம் யார் எங்கே தங்கலாம் போன்றவை சாதாரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அத்துடன் கதை சொல்லி போய்ச் சேரும் இடத்தில் உள்ள நாயுடு எனும் தமிழரின் வாழ்க்கையும் அவரது அவலங்கள், அதே நேரத்தில் வசதியாக வாழும் வேறு இந்தியர்களைப் பற்றிய குறிப்பு என்று கதை செல்கிறது.

கடல் கடந்து சென்றால் வாழ்க்கையில் நிறைய சம்பாதிக்கலாம், நல்ல வாழ்க்கைத் தரத்தை அடையலாம் என்று வந்த நாயுடுவின் எதிர்பார்ப்புகள் நிறைவேறியதா? கல்வியறிவற்ற ஆப்ரிக்க மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் போன்றவற்றை இக்கதை சொல்கிறது.

அடைக்கலம் கதை ஒரு பாட்டி பேருந்து நிலையத்தில் பேருந்திற்காகக் காத்திருக்கிறாள். அங்கிருக்கும் நவீன உடை அணிந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணைக் காண்கிறாள் பாட்டியின் மன ஓட்டங்களைச் சொல்லும் கதையின் முடிவு பாட்டியின் குணாதிசயத்தை உணர்த்துகிறது.

முதலும் முடிவும் கதை அழகு எனப்படும் ஏழைச் சிறுமி தன் வீட்டுக்கு முன்னாலிருக்கும் மாளிகை போன்ற வீட்டில் வாழ ஆசைப்படுவதில் ஆரம்பிக்கிறது. அவள் அந்த வீட்டை அடைந்தாளா? என்பதைச் சொல்லும் கதை. இது கொஞ்சம் சினிமாக் கதை போலத்தான் இருக்கிறது. ஆனாலும் அக்காலத்து யதார்த்தம் அதுதான் என்பதும் தெரிகிறது. இக்காலத்திலும் இப்படியான நிகழ்வுகள் சாத்தியம் என்றுதான் நினைக்கிறேன்.

பொறுக்கி வர்க்கம் உணவகங்களில் வெளியே தொட்டியில் போடப்படும் இலைகளில் மீதமிருக்கும் உணவுக்காகக் கஷ்டப்படும் பையனைப் பற்றியது. வாசிப்பதற்கு மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும் அதுதான் அவர்களது வாழ்க்கை.

தண்ணீர் கதை செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஓர் இலக்கியப் பத்திரிகையில் வெளிவந்ததாக அட்டைக் குறிப்பில் போட்டிருந்தார்கள். வறண்டு போய் இருக்கும் கிராமத்து மக்கள் குடி தண்ணீருக்கும் பயிர்களுக்குத் தேவையான தண்ணீருக்கும் அங்கலாய்க்கும் கதையே இது.

அகம் எனும் கதை ஒரு பிச்சைக்காரி தனது குழந்தைக்கு உணவு தேடும் உருக்கமான கதை.

பத்துக் கதைகளுமே அன்றைய விளிம்பு நிலை மக்களது வாழ்வைச் சித்தரிப்பவையாகவே அமைந்திருக்கின்றன. கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்பட்ட கதைகளாக இருந்தாலும் அவற்றை இப்போதும் வாசித்து அன்றைய மக்களின் வாழ்வியல் போராட்டங்களை உணரக் கூடியதாக இக்கதைகள் இருக்கின்றன.

ந. ஜெயரூபலிங்கம்

*****

புத்தகம்: அக்கரைச் சீமையில்
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள்: 151

You might also like