சமூகத்தை நோக்கிக் கேள்வி எழுப்பும் ‘பட்டாங்கில் உள்ளபடி’!

ஒரு படைப்பு – சமூகத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கேட்டால், எல்லாவிதமான மாற்றங்களையும் நிகழ்த்தும் என்பார்கள் படைப்பாளர்கள். அப்படி ஒரு படைப்பாக வெளிவந்துள்ளது சென்னை கலைக்குழுவின் ‘பட்டாங்கில் உள்ளபடி’ நாடகம்.

நாடக உலகின் ஜாம்பவான் பிரளயன் கருத்தாக்கத்தில் உருவாகியுள்ள இந்த நாடகத்தின் தலைப்பு அவ்வைப் பாட்டியின் சிந்தனையில் இருந்து உதித்தவை.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ‘மேடை’ அரங்கில் கடந்த சனிக்கிழமை மாலை அரங்கேற்றப்பட்ட இந்த நாடகம், காலம் காலமாக சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் சாதிய ஏற்றத்தாழ்வை, தீண்டாமைக் கொடுமையை, அதனால் பாதிக்கப்படும் மக்களின் வலியை, அவர்களுக்கு மறுக்கப்படும் நீதியைப் பற்றி உரத்துப் பேசியது.

நாடகத்தின் துவக்கத்தின் பேசிய பிரளயன், சராசரியாக நூறு தீண்டாமை வன்கொடுமைகள் நடக்கிறதென்றால் அதில் பத்து குற்றங்கள் மட்டுமே வழக்காகப் பதியப்படுகிறது என்றும், அதிலும் ஒரு வழக்கில் கூட, குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதில்லை என்ற புள்ளிவிவரத்தைக் கூறி அரங்கை மௌனமாக அதிர வைத்தார்.

இந்த நாடகம் – தீண்டாமை வன்கொடுமையால் பாதிக்கப்படும் மக்கள் காவல் நிலையம் சென்று எளிதாக புகார் கொடுக்க முடிவதில்லை என்பதில் துவங்கி, அதன்பிறகு, ஆதிக்க சாதிகளால் அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகள், சமாதானம் என்கிற பெயரில் அவர்கள் எதிர்கொள்ளும் மிரட்டல்கள், வாழ்வாதாரத்தை இழப்பது, மன உளைச்சலுக்கு ஆளாவது என நாடகம் முழுக்க ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலியையும் வேதனையையும் முழுமையாக வெளிப்படுத்தியது.

இதில் நடித்த அத்தனைப் பேரும் அந்தக் கதாப்பாத்திரங்களாகவே வாழ்ந்தார்கள் என்றே சொல்லலாம். வந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் இதையே தான் பிரதிபலித்தனர்.

நிறைவாக, தீண்டாமைக் கொடுமைகளைக் களைவதற்கு அரசு இயந்திரம் மட்டுமல்ல, சாதி ஆதிக்க மனோபாவம் கொண்டவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள்,

இந்த சமூகத்தின் பிரதிநிதிகளாக இருக்கும் தனி நபர் என எல்லோரும் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும் என்பதையே இந்த நாடகம் உணர்த்தியது.

குறிப்பாக, எஸ்.சி & எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் இன்றைய நிலைப்பாடு என்ன, அதை முழுமையாக அமல்படுத்த முடியாமல் போவதற்கு யார் காரணம் என்பதையெல்லாம் நாடகம் மையப் பொருளாகப் பேசியது.

புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் ஒருசில அதிகாரிகளையும் தோலுரித்துக் காட்டியது.

இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக, மூத்த பத்திரிகையாளர் மணா, வழக்கறிஞர் அருள்மொழி, த.மு.எ.ச முன்னாள் தலைவர் செந்தில்நாதன், தி இந்து ஆங்கில நாளிதழின் தேசிய துணை ஆசிரியர் சீனிவாசன் ரமணி, நவீன நாடக ஆசிரியர் குமணன் உள்ளிட்டோர் பங்கேற்று நாடகத்தின் மையப் பொருளான தீண்டாமைக் கொடுமைகளைக் களைய வேண்டியது யார் பொறுப்பு என்பது குறித்துப் பேசினர்.

ஒரு பத்திரிகையாளனாக களத்தில் தான் சந்தித்த தீண்டாமைக் கொடுமைகள் பற்றிய நேரடி அனுபவங்களைப் பட்டியலிட்டுக் காட்டினார் பத்திரிகையாளர் மணா.

மற்ற சிறப்பு விருந்தினர்களும் சமூக மாற்றத்திற்கு காரணமாக இருக்கும் இந்த நாடகத்தை தமிழகம் முழுவதும் எல்லா அதிகார மையங்களிலும் திரையிட்டுக் காட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.

பிரளயனின் ‘பட்டாங்கில் உள்ளபடி’ என்ற இந்த நாடகம் மனசாட்சி உள்ளவர்கள் எவரையும் நிச்சயம் உலுக்கி இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

– ஆதிமித்ரன்

 

 

 

 

 

 

You might also like