எழுத்தாளர் திருமூலர் முருகனுக்கு பஞ்சு பரிசில் விருது

சென்னை அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றும் எழுத்தாளர் திருமூலர் முருகனுக்கு புதுச்சேரியில் இருந்து வழங்கப்படும் பஞ்சு பரிசில் விருது வழங்கப்படுகிறது.

திருமந்திரத்தில் முனைவர் பட்டம் பெற்ற முருகன், கடந்த 13 ஆண்டுகளாக திருமந்திரம் தொடர்பாக பல நூல்களை எழுதியுள்ளார். சந்தியா பதிப்பக வெளியீடான அவரது திருமூலரியம் நூலுக்குத்தான் பரிசு கிடைத்திருக்கிறது.

முருகனின் தொடர் எழுத்துப் பயணத்துக்கு பஞ்சு பரிசில் விருது ஓர் அங்கீகாரம். இந்த தீப்பந்தத்தைப் பிடித்துக்கொண்டு அவர் தமிழ் ஆய்வுவெளியில் நெடுந்தூரம் பயணிப்பார் என்று சக இலக்கிய நண்பர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

விருதுக்குத் தேர்வான நூலிலிருந்து…

1. முச்சுப் பயிற்சி – உலகம் தழுவிய அளவில் விவாதித்து, ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை விளக்குகிறார்.

2. ஐம்பொறி ஆட்சி – ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்தி வைத்தால், தவறான வழிக்குச் செல்ல வழி வகுத்துவிடும். அதனால் ஐம்பொறிகளையும் அடக்காமல், அதனை நெறிப்படித் துய்க்க வேண்டும் என்கிறார்.

3. உயர் விழிப்புநிலை – மனிதன்தான் அறிவு வடிவினன். அத்தன்மையை உணர்ந்தவன் பல அரிய கண்டுபிடிப்புகளையும், துறை சார்ந்த உயர்நிலைகளையும் அடைய இந்நிலை உதவும் என்கிறார்.

4. மடைமாற்றம் – இறை வழிபாட்டாளர்களின் நம்பிக்கையைச் சிதைக்காமல் ஊக்கமூட்டும் வகையில் திருமூலர் புத்தொளிப் பாய்ச்சுவதே இதன் நோக்கம் என்கிறார்.

5. திருமூலரின் உண்மையான வாழ்க்கை வரலாற்றை சிறப்பாக எழுதியுள்ளார். வாசிப்பதற்கு ஏற்ற வகையில் எளிமையாகவும், அதே நேரம் திருமந்திரத்தின் மூலக்கருத்து சிதையாமலும், நூலாக்கம் செய்துள்ளார்.

திருமந்திரம் காலத்தால் முந்தியது. அத்தகைய பழமையான நூலை இன்றைய சூழலுக்கு ஏற்ப சுவைபட எழுதியுள்ளார்.

திருமந்திரம் பக்தி நூல் மட்டுமல்ல, ஞான நூல் மட்டுமல்ல, அறிவியல் நூல் மட்டுமல்ல, வாழ்வியல் நூல் என்கிற தளத்தில் ஆய்வு செய்து நிறுவியுள்ளார் திருமூலர் முருகன்.

You might also like