நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் கூரை வீட்டில் தட்டியை முட்டுக்கொடுத்துக் கொண்டு எப்போதும் படித்துக்கொண்டே இருக்கும் சித்திரம் மனதில் இருக்கிறது. சில நேரங்களில் செய்திகள் எழுதுவார். இரவில் விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் புத்தகங்களில் இருந்து குறிப்புகள் எழுதிக்கொண்டிருப்பார்.
கருக்கலில் எழுந்து முக்கூட்டு கடைத்தெருவுக்குப் போய்வந்து குளத்திற்கு காலாற நடந்துசென்று குளித்துவிட்டுத் தயாராக இருப்பார். எட்டு மணிக்குள் சைக்கிள் புறப்பட்டுவிடும். சில நாள் கட்சி வேலை. சில நாள் செய்தி சேகரிப்பு. சில நாள் போலீஸ் ஸ்டேசன்.
வீட்டிலிருந்து துண்டை கட்டிக்கொண்டு மேலகுளத்திற்கு குளிக்கப் புறப்படும் அப்பாவுடன் சென்ற நாள்கள் நினைவுகளில் தளும்புகின்றன. லைஃப் பாய் சோப், பயோரியா பல்பொடி, மைதீன் புகையிலை, லெஷ்மி சீவல், டோபாஸ் ப்ளேடு என சில பொருட்கள் அவரது அன்றாடப் பயன்பாட்டில் இருந்து எப்போதும் மாறாது.
அப்பாவின் கையில் காசிருந்தால் கோழிகூவ ஒரு பாட்டு வராது. அவரது பையைத் திறந்தால் காய்கறிகள், புதிய பேனா, புத்தகங்கள் இருக்கும். அவரிடம் காசு புழங்குகிறது என்பதை அதிலிருந்தே நாம் தெரிந்துகொள்ளலாம்.
நெடுநாள் நண்பர் பரமசிவத்திடமே அவர் முடிவெட்டுவார். ஒடிசலாக இருப்பார். சிரித்த முகம். எனக்கும் பரமசிவம்தான். கையில் பிடித்தால் முடி நிற்கக்கூடாது. இதுதான் கட்டளை. கல்லூரி செல்லும் வரை அவரிடம்தான் முடிவெட்டினேன். பிறகு பாலு.
ஊரெல்லாம் நடவு நட்ட பிறகுதான் நடவு போட காசு தேடி அலைவார். பணம் கிடைத்ததும் வேலைகள் தொடரும். மற்ற வயல்களில் பயிர் நன்றாக செழித்து வளர்ந்திருக்கும். எங்கள் வயல்கள் மட்டும் பருவமழையில் சிக்கி வெள்ளக்காடாய் மிதக்கும். அவருக்குப் பழக்கமானது பருவம் தப்பிய விவசாயம்.
தினமும் அவர் எழுதும் பேனாவை எடுத்தால் கண்டுபிடித்துவிடுவார். பள்ளி விட்டு வந்ததும் உதை கிடைக்கும். “என் பேனாவை யாரு எடுத்தது தமிழரசி” என்று அம்மாவிடம் கேட்பார். நான் வசமாக மாட்டிக்கொள்வேன். இனிமேல் எடுத்தால் அடி கிடைக்கும் என்று மிரட்டுவார்.
திராவிடர் கழகக் கூட்டங்கள் ஊரில் நடந்தால், கடைசி நபராக நின்றுகொண்டு குறிப்புகள் எடுத்துக்கொண்டிருப்பார். சிறப்புரையாற்ற வந்திருக்கும் தலைவர்கள் “எங்கய்யா ஒளிச்செங்கோ” என்று விசாரிப்பார்கள். பிறகு ஓடிப்போய் அவர்களை சந்தித்துவிட்டு வருவார்.
எவ்வளவு அவசர செய்தி என்றாலும் சைக்கிள்தான். வீட்டில் ஃபோன் கிடையாது. கொரடாச்சேரி சென்று போனில் மாலை முரசு அலுவலகத்திற்கு தகவல் சொல்வார். தீபாவளி, பொங்கல் மலர்களில் கட்டுரைகள் எழுத பல நாள்களைச் செலவழிப்பார். கடைசியில் 9 பாயிண்டில் அவரது பெயர் வரும்.
திருச்சி பத்திரிகை அலுவலகம் செல்லும்போதெல்லாம் ஹோட்டல்களில் சாப்பிட்ட உணவின் ருசியைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பார்.
“அந்த ரசமும், காரக்குழம்பும் அத்தனை ருசி. இன்னொரு முறை கேட்டு வாங்கி சாப்பிட்டேன்” என்று சிலாகித்துப் பேசுவார்.
எப்போதாவது சாப்பிடும்போது தன் தந்தை, சுந்தரம் பற்றிப் பேசுவார். அவரது உதவும் குணம் பற்றிப் பேசுவார். சமையல் ருசி பற்றிப் பேசுவார். பண்ணை வேலை பறிபோய் கூலி வேலை பார்த்தது பற்றி நினைவுகூர்வார். அவரது நினைவாகத்தான் எனக்கு சுந்தரபுத்தன் என்று பெயர் வைத்தார்.
கள் இறக்குவது நடைமுறையில் இருந்த கோடைகாலங்களில் குறிச்சிமேட்டில் பனங்கள் கிடைக்கும். அதிகாலையில் நண்பர் திருஞானத்துடன் செல்வார். ஆற அமர பேசிவிட்டு இருவரும் எட்டு மணி வாக்கில் வீடு திரும்புவார்கள். வேறு வேலை இல்லையென்றால், பத்து மணிகூட ஆகிவிடும்.
இஸ்லாமிய அறிஞர் இமாம் கஸ்ஸாலியின் புகைப்படத்தை பிரேம் செய்து வீட்டில் மாட்டிவைத்திருப்பார். வீட்டுக்கு வருபவர்களுக்கு அவர் யாரென்று சொல்லித் தெரியவைப்பார். அடுத்து பெட்ரண்ட் ரஸ்ஸலின் புகைப்படமும் இருக்கும்.
நான் பள்ளியில் படிக்கும்போது, அவர் எழுதிய செய்திகளை என்னிடம் காப்பி செய்ய கொடுப்பார். அவரே எழுதி அனுப்பிவிடமுடியும். என்னை ஏன் செய்திகளை எழுதவைத்தார் என்பதை, நான் செய்திக்கட்டுரைகள் எழுதத் தொடங்கிய நாளில் புரிந்துகொண்டேன்.
நான் தொலைபேசியில் பேசும்போதெல்லாம் “எப்பய்யா ஊருக்கு வர்ற” என்று கேட்பார். ஊருக்கு வரும் நாளுக்காக காத்திருப்பார். அய்யா வந்துட்டானா என்று அம்மாவிடம் கேட்டுக்கொண்டே இருப்பார். என்னைப் பார்த்ததும் சைக்கிளில் அத்திக்கடைக்குப் போய் பரோட்டாவும் ஆட்டுக்கறியும் வாங்கிவருவார்.
என் 24 வயது வரையில் அப்பாவுடன் ஊரில் இருந்திருக்கிறேன். வீட்டுக்கு எப்போது வருவார் என காத்திருந்திருக்கிறேன். சென்னைக்கு வந்த பிறகு அவருடன் பேசும் நேரம் குறைந்துபோனது. ஊருக்கு வருவது தெரிந்தால், ஏதாவது புதிய புத்தகத்தின் பெயரைச் சொல்லி வாங்கிவரச் சொல்வார்.
அப்பா என்றதுமே வெள்ளையாற்றின் கரையில் இருந்து பாண்டவை ஆற்றின் கரைக்கு நடுவே மெல்லிய கோடாக நீளும் வயல்வழிச் சாலையில் அவர் சைக்கிளில் வரும் காட்சியே மனதில் நிறைகிறது. மறைவதற்கு ஒருசில ஆண்டுகளுக்கு முன்புவரை சைக்கிளில் வெளியே சென்றுகொண்டிருந்தார்.
திருமணமாகி மூன்று மாதங்களில் வேலையிழந்தேன். அந்த காலகட்டத்தில் என்னைப் பார்க்க வந்தவர், ஓர் அறிஞர் சொல்லியதாகக் கூறிய வாசகங்கள் காதில் ஒலிக்கின்றன: “வாழ்க்கை முழுதும் மனிதர்களுக்கு ஏதாவது ஓர் இடர் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் இயங்கிக்கொண்டே இருப்பான்”.
அப்பாவை நினைவுகளில் தேடுகிறேன்.
ஓவியம்: மனோகர்