இயலாதபோது இந்த வாழ்விலிருந்து வெளியேறி பறப்போம்!

இனி வாழ்ந்து என்ன செய்யப்போகிறோம்? எனும் கணம் எல்லோருடைய வாழ்விலும் வரும். அப்போது, ஒருவர் தற்கொலையின் விளிம்பில் நிற்பதாக உணரலாம்.

நம் ஒவ்வொருவருக்கும் இவ்வாழ்விலிருந்து வெளியேறும் நியதியை இயற்கை வகுத்திருக்கிறது. ஆனாலும், மனிதகுலம் வாழ்தலின் பொருட்டு தொடர்ந்து இயற்கையோடு போராடி வருகிறது.

பயணத்தின் இடையே, சிலவேளை கடினமான பாதையில் நாம் நிற்கலாம். ஆனாலும் அது உங்களை ஓர் அழகான இடத்துக்கு அழைத்துச் செல்லக்கூடும்.

மனம் பலவீனமாக உணந்த தருணமது.

சில விசயங்கள் இயல்பாக நிகழ்கின்றன. இதை சமய நம்பிக்கை உள்ளவர்கள் ‘முகூர்த்தம்’ என்கிறார்கள்.

இதெல்லாம் எதற்காக என்கிறீர்களா?. நான் சொல்ல வந்தது ஷூஜித் சிர்கார் இயக்கிய ‘ஐ வாண்ட் டு டாக்’ (அமேசான் பிரைம்) எனும் இந்தித் திரைப்படம் பற்றியது.

அர்ஜூன் சென். அவர் ஓர் அமெரிக்க வாழ் இந்தியர். வாழ்வின் பிரகாசமான பக்கங்களில் இருப்பவர். மார்க்கெட்டிங் துறையில் பணி.

வீக் எண்டை கொண்டாட ஒரு குடும்பம் அவருக்கு இருக்கிறது. அழகான மனைவி, அன்பான ஒரு பெண் குழந்தை.

ஒரு நொடி. சீட்டுக்கட்டு கலைவதுபோல் இவ்வழகிய வாழ்வு சரிகிறது.

அர்ஜூன் சென்னுக்கு குரல்வளைப் புற்றுநோய். குடல்வரை பரவுகிறது. வேலை போகிறது. மனைவி விலகுகிறார். அதிகபட்சம் இன்னும் நூறு நாட்கள் வாழலாம் என்கிறார். கடவுளின் விருப்பம் அதுவாக இருந்தால் அவரோடு போரிடலாம்! முடிவுசெய்கிறார் சென்.

அவருக்கு உள்ளே இருக்கும் உறுப்புகளை மருத்துவர்கள் வெட்டியபடி இருக்கிறார்கள். வாழ்வில் நமக்கு என்ன நடக்கிறது என்பது 10% தான். அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் 90%.

நோய் பீடிக்கப்பட்டவர் என்பதற்காக அவரிடம் யாரும் அனுதாபம் காட்டவில்லை. அவர் சிங்கிள் பேரண்ட். மகள் கூட இருக்கிறாள். ஆனால் தன் தாயை அவள் விட்டுக் கொடுப்பதில்லை. அம்மாவுக்கு அடுத்துதான் அப்பா என்கிறாள். அவருக்கு கிடைத்த டாக்டரும் இப்படிதான்.

வழக்கமான புற்றுநோய் க்ளிஷே இல்லாத படம். அர்ஜூன் சென்னாக அபிஷேக் பச்சன் நடித்திருக்கிறார். அவரது கேரியரின் சிறந்த படங்களுள் I Want To Talk ஒன்றாக இருக்கும்.

புற்றுநோய் என்பது தடுமாறித் தள்ளாடுவது போன்றது. சில நேரங்களில் மேலே செல்ல வேண்டும். சில வேளை மீண்டும் கீழே செல்ல வேண்டும்” என்கிறார் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து தப்பியவரான ஜான் கென்னடி. 

சென்னிடம் இப்போது குடலில் முக்கால் பகுதி இல்லை. குரல் நாண், உணவுக் குழல் இவையில்லாம் பெயருக்கு கொஞ்சம் இருக்கின்றன. தண்ணீரைப்போல் அனஸ்தீஷாயாவைப் பருகுகிறார்.

20-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள். உறுப்புகளை வெட்ட முடிந்த மருத்துவர்களால், அவரது நம்பிக்கையை வாழ்வின் மீதான விழைவை, கனவை, வெட்டியெடுக்க முடியவில்லை.

கேன்ஸர் என்றாலே ரத்த வாந்தி, அனுதாபப்படும் காதலி, க்ளைமேக்ஸில் மரணம், இப்படி நம்பிக்கையையும், மருத்துவத் துறையையும் குலைக்கும் அபத்த சினிமாக்களை கேலி செய்கிறது சென்னின் வாழ்வு.

வாழ்தலின் மீதான பற்றுருதிதான், ராகேஷ் ரோஷன், ராபர்ட் டி நீரோ, லிஸா ராய், மனீஷா கொய்ராலா, சோனாலி பிந்ரே, அனுராக் பாசு, சஞ்சய் தத் போன்ற பிரபலங்களை கேன்ஸர் பாதிப்பிலிருந்து மீளச் செய்தது.

‘காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்’

நம்பிக்கையோடு இவர்கள் வாழ்வைக் கொண்டாடுகிறார்கள்.

‘நூறே நாட்கள்தாம் வாழ்வாய்’ என்ற மருத்துவர்களின் கூற்றை, சென்னின் ஆழ் மனதில் புதைந்து கிடந்த வாழும் வேட்கை பொய்யாக்கி காட்டியது. 10,000 நாட்களைக் கடந்து உயிரோடு இருக்கிறார். இது வெறும் fiction இல்லை. ஒருவரது biography.

ஒரு முறை கலைஞரிடம் உங்களுக்கு புற்றுநோய் என்கிறார்களே? பத்திரிகையாளர் கேட்டனர். தனக்கே உரிய நகையுணர்வோடு,

ஆம், எனக்கு தமிழ்மொழி மீதான பற்று நோய் என்றார்.

புற்றுநோயை உளவுறுதியால் சென்னும் பற்று நோயாக்குகிறார். சிறு வயதில் மகள், ‘என் கல்யாணத்தில் நீ நடனம் ஆடுவாயா?’ சென்னிடம் கேட்பாள். இப்போது அவளுக்குத் திருமண வயது. ஒரு நகரமே திரண்டு ஓடுகிற மாரத்தானில் மூச்சு வாங்க சென்னும் மகளோடு ஓடுகிறார்கள்.

இந்த உலகம் மிகப் பெரிய ஓடுகளம். நம்முடைய கால்கள் களைப்படையும்வரை, கண்கள் மங்கும்வரை, இதயம் துடிக்க மறந்து நிற்கும்வரை ஓடிக்கொண்டிருப்போம். இயலாதபோது இந்த வாழ்விலிருந்து வெளியேறி விண்ணில் அமைதியாக பறந்து செல்வோம்.

– நன்றி: கரிகாலன் முகநூல் பதிவு

You might also like