இலக்கியத்தில் அப்டேட் ஆகுமா அரசு?

எழுத்தாளர் அபிலாஷ் சந்திரன் கேள்வி

அண்மையில் நடந்த, நான் பங்கேற்ற கூட்டமொன்றில் எழுத்தாளர்களை முன்னிலைப்படுத்தி அவர்களுடன் உரையாடி, மாணவர்களைக் கொண்டு அவர்களைப் பற்றிப் பேச வைத்து, எழுத்தாளர்கள் குறித்து வினாடி வினாப் போட்டியும் வைத்தோம். எல்லாமே எழுத்தாளரை மையமிட்டுத்தான்.

அடுத்த மாதம் நடக்கவிருக்கும் (தனியார் அறக்கட்டளை நடத்தும்) ஊட்டி இலக்கிய விழாவில் மாலை நேர அரங்கில் என்னுடைய நாவல் “நிழல் பொம்மையை” முன்னிட்டு எழுத்தாளர் திலீப் குமாருடன் உரையாடுகிறேன்.

இப்படி எழுத்தாளரை, அவரது நூலை முன்னிலைப்படுத்தி இலக்கியத்தை புரொமோட் செய்யும் போக்கு அனேகமாக எல்லா இடங்களிலும் வந்துவிட்டது.

ஆனால், தமிழ்நாடு அரசு மட்டும் எழுத்தாளர்களை ஊர் ஊராகக் கூட்டிப் போய் பொதுவான இலக்கியத் தலைப்புகளில் பேச வைக்கிறது.

எழுத்தாளரை பேச்சாளராக முன்வைக்க வேண்டும் எனப் பிடிவாதமாக இருக்கிறார்கள் நமது அரசு நியமிக்கும் இலக்கிய விழா ஒருங்கிணைப்பாளர்கள்.

எழுத்தாளர் நன்றாகப் பேசினால் மக்கள் பேச்சுடன் திருப்திப்படுவார்கள். அவரைப் படிக்க மாட்டார்கள். ஏனென்றால் காதுவழி பெறும் அறிவு வேறு, வாசிப்பறிவு வேறு. ஒன்று இன்னொன்றைத் தூண்டுவது மிகமிக அபூர்வம்.

ஏற்கனவே நல்ல வாசகராய் இருந்தால் ஒழிய நடக்காது..பேச்சு இலக்கியத்தை அழிக்குமே அன்றி வாழவைக்காது, அதிக நூல்கள் விற்க உதவாது.

உலகில் அப்படி ஒரு விசயம் நடந்ததே இல்லை. நீங்கள் மார்க்வெஸ்ஸையும் முராகாமியையும் எடுத்துக்கொள்ளுங்கள். பேசிப்பேசியா அவர்களது புத்தகங்கள் மக்களிடம் போயின? இல்லை.

பேச்சு வாசிப்பை அழிக்கும் என்பதே வரலாறு, அதுவே அறிவியலும். ஒரு புலன் மூடினாலே இன்னொன்று திறக்கும்.

தமிழ்நாடு அரசும் ஒருங்கிணைப்பாளர்களும் இலக்கிய விசயத்தில் என்று அப்டேட் ஆகி தனியார் அமைப்புகளின் தரத்துக்காவது வருவார்களா?

நன்றி: பேஸ்புக் பதிவு

You might also like