உலகம் முழுவதும் 2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20-ம் நாளன்று, ‘உலக சமூக நீதி நாள்’ (World Day of Social Justice) கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாக, வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது.
சமூக நீதி (Social Justice) என்ற கருத்தாக்கமானது தனிநபருக்கும் சமூகத்திற்கும் இடையேயுள்ள சமமான நியாயமான உறவைக் குறிக்கிறது. சமூக வேறுபாடுகளை பொதுவாக, பொருளாதாரப் பரவல், தனிப்பட்ட வாய்ப்புகள் மற்றும் சமூக செல்வாக்கின் மூலம் கணிக்கலாம்.
மேற்கத்திய நாடுகள் மற்றும் பழமையான ஆசிய நாடுகளில் சமூக நீதி என்ற கருத்தாக்கமானது தனி நபர்களின் சமூக செயல்பாடுகளுக்குத் தேவையானவற்றைப் பூர்த்தி செய்து, பாகுபாடற்ற நீதியையும் நியாயத்தையும் நிலைநிறுத்துவதாகும்.
தற்காலத்தில் உலகளாவிய பல சமூக அமைப்புகள் சமூகப் பெயர்ச்சிக்கான தடைகளை உடைத்து, சமூகப் பாதுகாப்பை உண்டாக்கி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கலைக்கிறது.
சமூக நீதி மூலம் ஒரு சமூகத்தில் உள்ள அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களின் உரிமையையும் கடமையையும் உறுதி செய்து, சமுதாயத்தின் ஆதாயங்கள் மற்றும் சுமைகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
வரி, சமூகக் காப்பீடு, பொது உடல்நலவியல், பொதுக்கல்வி, பொதுப்பணி, தொழிலாளர் சட்டம், சந்தை ஒழுங்காணையம் போன்ற நிறுவனங்களில் வளங்களையும், வாய்ப்புகளையும் பகிர்ந்து கொள்ளமுடிகிறது.
இந்தியாவில், சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் பட்டியல் பழங்குடி அமைச்சகம் போன்ற அமைச்சகங்கள் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் உட்படச் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கு சமூகநீதியையும் நலத்திட்டங்களையும் செயல்படுத்துகிறது.
சாதி, மொழி, மதம், பால், வசிப்பிடம், பொருளாதார சூழல், உடல் ஊனம் போன்ற முறைகளில் வேலைவாய்ப்பு மற்றும் கல்விவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு, கல்விக்கு உதவித் தொகை போன்ற பல திட்டங்கள் செயற்பாட்டில் உள்ளன.
உலக சமூக நீதி நாளின் முக்கியத்துவம் என்பது, அனைத்து தேசிய மற்றும் பன்னாட்டு கொள்கைகளில் சமூக நீதியை மேம்படுத்துவதை முதன்மைக் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதே.
இந்தக் கோட்பாட்டின் ஆதரவாளர்கள், சமூக நீதியை முதன்மைப்படுத்தி, பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்கள் மிகவும் இணைந்து செயல்பட உதவுகிறது என்று வாதிடுவதன் மூலம் ஆதரவைப் பெற்றுள்ளனர்.
சமூக நீதியை மையத்தில் வைப்பதற்கு, கண்ணியமான வேலை மற்றும் வேலை வாய்ப்புகள், சமூக பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நியாயமான உலகமயமாக்கல் நிகழ்ச்சி நிரலை ஊக்குவிப்பது, அத்துடன் நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் நேர்மறையான சமூக உரையாடல்கள் தேவை என்று தெரிவிக்கின்றனர்.
2025-ம் ஆண்டுக்கான உலக சமூக நீதி நாள், “உள்ளடக்கத்தை மேம்படுத்துதல்: சமூக நீதிக்கான இடைவெளிகளைக் குறைத்தல்” (Empowering Inclusion: Bridging Gaps for Social Justice) என்பதைக் கருப்பொருளாக கொண்டுள்ளது.
சமூக மேம்பாட்டுக்கான இரண்டாவது உலக உச்சி மாநாட்டிற்கு (WSSD2) உலகம் தயாராகி வரும் நிலையில், இந்த ஆண்டு நிகழ்வு சிறப்பான முக்கியத்துவம் பெறுகிறது.
- தேனி மு.சுப்பிரமணி
– நன்றி: கல்கி