கவிதை எழுதுவது என்பது வாழ்வனுபவங்களினூடே தோன்றும் மின்னல் ஒளி ஊற்று போன்றது என்பது மனுஷ்யபுத்திரனுடன் பேசும்போது தெரிகிறது.
சக்கர நாற்காலியிலிருந்து, சிறு வயது முதல் அவர் காணும் உலகம், மிக நிதானமாக அவர் பார்வையின் முன் விரிந்திருக்கிறது.
அவரைத் தோளோடு அணைத்து, துவரங்குறிச்சியிலிருந்து மீட்டெடுத்து கவிதைகளோடு உலகிற்கு அளித்திருப்பது அவருடைய அருமையான நண்பர்கள்தான்.
“என் நண்பர்களைப் பற்றி நினைக்கும்போது உண்மையில் அது என்னைப் பற்றியே நினைப்பதாக இருக்கிறது. வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் எனது நண்பர்கள்தான் என்னை இடையறாது நனைக்கும் ஊற்றுகளாக இருந்திருக்கிறார்கள்.
நண்பர்களைப் பற்றிய சந்தோஷம், ஏமாற்றம், பெருமிதம், துயரம் முதலான பல்வேறு வகைப்பட்ட உணர்ச்சிகள் தான் கடந்தகாலம் முழுவதையும் அலைக்கழித்து வந்திருக்கின்றன.
நான் அவர்களைச் சார்ந்திருக்கிறேன். அவர்களையே பின் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறேன். அவர்களது சிறு புறக்கணிப்பும் பெரும் வீழ்ச்சியாக மாறிவிடுகின்றது.” என்கிறார்.
மனுஷ்யபுத்திரன் கவிதை எழுத ஆரம்பிப்பதற்கு முன்னால், ராஜாத்தி என்கிற ஒன்றுவிட்ட சகோதரிதான் தோழி. அவரிடம் சிறு வயது முதல் பொதுவான விருப்பங்களும், பகிர்தல்களும் இருந்திருக்கின்றன.
1983-ல் இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்த பிறகு அவருடைய நட்பு வட்டம் விரிவடையத் தொடங்கியிருக்கிறது. பலர் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அதில் சிலர் மிகவும் நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள்.
“எங்கள் ஊரில் அறிவுச் செல்வன் என்ற ஒரு நண்பர். புத்தகங்கள் படிப்பதில் ஈடுபாடு உள்ளவர். கவிதைகளும் எழுதுவார்.
நான் எழுதக்கூடியவன் எனக் கேள்விப்பட்டு ஒரு நாள் என்னைத் தேடி வந்தார். அவருடனான தொடர்பு எனக்கு சிந்தனையின் பல கதவுகளை முதலில் திறந்தது. அவர் மூலம்தான் எனக்கு பெரியாரியம் அறிமுகமாயிற்று.
எத்தனையோ நாட்கள் பின்னிரவு வரை கூடப் பேசித் தீர்த்திருக்கிறோம். பல்வேறு வகையான புத்தகங்கள் அவர் வழியாக எனக்கு வந்து சேர்ந்தன.
அவர் வழியாக பாண்டியன் என்ற நண்பர் அறிமுகமானார். அவர் ஒரு வாடகை நூலகம் நடத்தி வந்தார். அவர் மூலம் பல இலக்கியப் படைப்புகள் எனக்கு அறிமுகமாயின.
பிறகு செந்தில் என்ற ஒரு நண்பர். அவர் அப்போது மார்க்ஸிய இயக்கத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருந்த சமயம். அவர் என்னை அக்கொள்கையை நோக்கி நகரச் செய்தார். என் மீது மிகுந்த ஈடுபாட்டையும், கனிவையும் கொண்டவர்.”
மனுஷ்யபுத்திரனுக்கு மூன்று வயதில் போலியோ வந்து நடக்க முடியாமற் போயிருக்கிறது. எப்போதும் வீட்டிலேயே இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட நண்பர்கள் எல்லாம் அவர் வீட்டிற்குத் தேடி வந்து நட்பின் இதத்தை ஏற்படுத்தியவர்கள் என்றால், ஜாபரும், காந்தியும் முதன் முதலாக அவரை வெளி உலகிற்கு அழைத்துச் சென்றவர்கள்.
“என்னுடைய கனத்த உடம்பை தோள்களில் தாங்கி அவர்கள் எவ்வளவோ தூரம் நடந்திருக்கிறார்கள்.” என்று நெகிழ்கிறார் மனுஷ்யபுத்திரன்.
1990-களின் ஆரம்பத்தில் மனுஷ்யபுத்திரன் வாழ்வின் மிக மோசமான கடும் மனவீழ்ச்சிக்கு ஆட்பட்டிருந்திருக்கிறார். தற்கொலையின் பால் மனம் சென்றிருக்கிறது.
“அது இலையுதிர் காலத்தின் வறண்ட தனிமை. அப்போது திருச்சியிலிருந்து ‘சுட்டும் விழிச்சுடர்’ என்ற பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. அந்தப் பத்திரிகையுடன் தற்செயலாக ஒரு தொடர்பு ஏற்பட்டது.
எனக்குப் பெரிய இலக்கிய அங்கீகாரம் இல்லாத சமயத்தில் அதன் ஆசிரியர் சுபத்ரா என்னுடைய எழுத்துக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து தன்னுடைய பத்திரிகையில் வெளியிட்டார். அது எனக்குப் பெரிய தன்னம்பிக்கையைக் கொடுத்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய கவிதைத் தொகுப்பிற்கு என்னை முன்னுரை எழுதித் தரும்படி கூறினார். நான் மிகவும் சோர்ந்திருந்த காலகட்டத்தில் இந்த அங்கீகாரம் மனம் நெகிழச் செய்துவிட்டது.
‘சுட்டும் விழிச்சுடர்’ ஆசிரியர் குழுவில் செல்வம் என்ற பெண் இருந்தாள். அவள் மூலம் லல்லி என்ற சிநேகிதி அறிமுகமானாள்.
அவளும் செல்வமும் முதன்முதலாக வீட்டிற்கு வந்தபோது அது என்னுடைய வாழ்க்கையின் மிகப் பெரிய மாற்றமொன்றின் துவக்கமாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.
லல்லி அப்போது என்னுடைய எழுத்துகளின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தாள். அவள் திருநெல்வேலியில் மகளிர் தொழிலாளர் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாள்.
தொடர்ந்த சந்திப்புகள் மூலம் எங்கள் நட்பு வலுவடைந்தது. அவள் என்னை வீடு என்ற சிறையிலிருந்து எப்படியாவது விடுவித்துவிட வேண்டும் என்று மிகவும் பிரயத்தனப்பட்டாள்.
அவள் திருநெல்வேலிக்கு என்னை அழைத்துச் சென்றாள். நான், லல்லி காந்தி மூவரும் கன்னியாகுமரிக்குச் சென்றோம். முதல் கடல் அனுபவம். கடலின் பிரம்மாண்டம் என்னை மனமுடைய வைத்துவிட்டது.
மூன்று நாட்கள் நாளெல்லாம் கடலில் குளித்தோம். திருநெல்வேலி வாழ்க்கைதான் என்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான காலகட்டம். லல்லி, எனக்கு ஒரு ‘வீல் சேர்’ வாங்கினாள். அது அவள் என்னை பல இடங்களுக்குச் சுலபமாக அழைத்துச் செல்ல உதவியாயிற்று. நாங்கள் கடல்களையும் மலைகளையும் நோக்கித் தொடர்ந்து பயணம் செய்தோம்….”
மனுஷ்யபுத்திரன் இதைச் சொல்லும்போது அவர் கண்களில் கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கும் பரவசம் படர்கிறது.
திருநெல்வேலியில் அவர் பல நண்பர்களை அடைந்திருக்கிறார். அதில் சிறுகதை எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் நட்பு முக்கியமானது. ஒருமையில் அழைக்கும் ஒரே நண்பர் அவர்தான். அவருடன் இருந்த சந்தர்ப்பங்களில் பெரும் நெகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறார்.
“என்னுடைய இலக்கிய வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டத்தில் முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தியவர்கள் நிறையப் பேர்.
கோவை ஞானி தன்னுடைய ‘நிகழ்’ இதழில் என்னுடைய கவிதைகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டு என் மீது இலக்கிய உலகின் கவனம் விழக் காரணமாயிருந்தார்.
சுஜாதா என் கவிதைகளுக்காக ஒரு பிரச்சார இயக்கத்தையே மேற்கொண்டார் எனலாம். எங்கெல்லாம் சந்தர்ப்பம் கிடைத்ததோ அங்கெல்லாம் என்னைப் பற்றி இடைவிடாமல் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். அது அவரது உள்ளார்ந்த பிரியத்தின் வெளிப்பாடு…”
இலக்கியம் சார்ந்து மனுஷ்யபுத்ரனுக்கு உருவான நட்புகளில் சுந்தர ராமசாமியுடனான உறவு மிகவும் முக்கியமானது.
அவருடைய நேரடியான அணுகுமுறையும் தார்மீக நெறிகளின் மீதான பிடிவாதமும். பெருந்தன்மையும் அவர்மீது பெரும் வசீகரத்தை உருவாக்கியிருக்கிறது.
“இதைப் பற்றியெல்லாம் யோசிக்கும்போது இன்னும் எத்தனையோ நண்பர்களின் பெயர்களும் முகங்களும் அலை மோதுகின்றன. அவற்றை வெறுமெனப் பட்டியலிடுவது அவர்களுக்குச் செய்கிற நியாயமாகாது.
சில உறவுகள் மிகவும் அந்தரங்கமானவை. சிலருடைய ஞாபகங்கள் நெஞ்சில் தீயாய் எரிபவை. சில கசப்புகள் ஜீரணிக்க இயலாதவை. சில ஸ்பரிசங்கள் நீங்கவே நீங்காதவை.
இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற அவசரமான, பதட்டமான அன்றாட வாழ்க்கையானது நட்புகளைக் கொண்டாடுவதற்கான கால அவகாசத்தை மிகவும் சுருக்கி விடுகிறது.
எல்லாவற்றையும் சந்தேகிக்கிற ஒரு காலகட்டத்தில் நண்பர்களையும் சந்தேகிக்கும் சந்தர்ப்பங்கள் நேர்கிறது. அதுதான் இந்த வாழ்வின் கடும் சாபமாக அந்தக் கணத்தில் தோன்றுகிறது.”
மனுஷ்யபுத்திரன் இதைச் சொல்லும்போது ஓர் ஆழ்ந்த வருத்தம் முகத்தில் தென்பட்டாலும் உடனே அது நீங்கி மலர்ச்சி வந்து விடுகிறது. காரணம். வாசலில் அவரைச் சந்திக்க சில நண்பர்கள் வந்து விட்டார்கள்.
– கிருஷ்ணா டாவின்சி
நன்றி: 10.08.2000 – அன்றும் குமுதம் வார இதழில் வெளிவந்த பதிவு.