தமிழை உலகறியச் செய்த கால்டுவெல்லை அறிவோம்!

நூல் அறிமுகம்: 

* இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்தில் இருந்து தான் தோன்றின என்றும், இந்திய மொழிகளுக்கு சமஸ்கிருத மொழியே தாய் என்றும் புனைகதை பேசி, பல நூற்றாண்டுகளாக மக்களை மடையர்களாக்கி நம்ப வைத்து அதிகாரம் செய்தார்கள் ஆதிக்க சாதியினர்!

* இந்தப் பொய்க் கருத்தை அறிவு பூர்வமாகவும் பல மொழிகளை ஆய்வு செய்து ஒப்பிட்டும் அந்த புனைவை மறுத்து, உண்மையை உலகிற்கு உரக்கச் சொன்ன வெள்ளையரின் பெயர் – ராபர்ட் கால்டுவெல் (1814 – 1891). அவரின் வாழ்க்கையை அறிந்து கொள்ள உதவும் நூல் இது !

* இந்த நூலை எழுதியவர் புகழ்பெற்ற தமிழறிஞர், சொல்லின் செல்வர், பல கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களைப் படைத்த ரா.பி. சேதுப் பிள்ளை (1896 – 1961). இவர் எழுதிய ‘தமிழினம்’ நூலுக்கு 1955ம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. அதுவே தமிழ் மொழி நூலுக்கு கிடைத்த முதல் சாகித்திய அகாதமி விருது !

* தமிழுக்கு பெருமை சேர்த்த கால்டுவெல்லின் வரலாற்றை எழுதுவதற்கு தமிழுக்கு பெரும் சிறப்பு சேர்த்த சேதுப் பிள்ளையைவிட சரியான ஒருவர் இருந்துவிட முடியாது என்பதற்கு இந்த நூலின் நடையழகே ஒரு சிறப்பான சான்று !

* அயர்லாந்து நாட்டில் 1814ம் ஆண்டு ராபர்ட் கால்டுவெல் பிறந்தார். ஸ்காட்லாந்தில் வளர்ந்தார். மொழியார்வம் மிக்கவராக இருந்தார்.

ஆங்கில நூல்களை ஆழ்ந்து படித்தார். கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஐரோப்பிய தொன் மொழிகளைப் பற்றி கற்றார். கிரேக்க மொழியின் சிறப்பு பற்றி ஒப்பிலக்கணம் வாயிலாக கற்றார். மொழித் திறனாய்வு முறையையும் கற்றுத் தேர்ந்தார் !

* அக்காலத்தில் தென் தமிழ் நாட்டில் பணி செய்வதற்கு ஒருவரை தேடியது லண்டன் மாநகர தொண்டர் சங்கம். இறைப் பணியில் இள வயதிலேயே ஈடுபாடு கொண்டவரும், கல்வியில் சிறந்து விளங்கிப் பட்டம் பெற்றவரும், தமிழகத்தின் பழமையையும் பெருமையையும் நூல்கள் வாயிலாக முன்னமே அறிந்த வருமான கால்டுவெல்லுக்கு அந்த வாய்ப்பு தரப்பட்டது. கால்டுவெல் அந்த தொண்டை ஆற்றுவதற்கு முழு மனதோடு தயாரானார் !

* கால்டுவெல் ஆங்கில கப்பலில் சென்னைக்கு பயணமானார். கடுமையான கடல் பயணம். பல இன்னல்கள். கடலில் விபத்து.இப்படியாக நான்கு மாத கால நெடும் பயணம். கப்பல் பயணத்தின் போதும் நேரத்தை வீணாக்காமல், ஆங்கில மொழியறிஞரிடம் சமஸ்கிருதம் கற்றுக் கொண்டார். தனது 24வது வயதில் 1838ம் ஆண்டு சென்னையை வந்தடைந்தார் !

* சென்னையில் மூன்றாண்டுகள் தங்கியிருந்தார். தமிழ் அகராதியை தொகுத்து வழங்கிய வின்சுவோ, திருவாசகத்தை மொழிபெயர்த்த போப் ஐயர், பைபிளை தமிழில் மொழி பெயர்த்த பவர் மற்றும் சென்னையில் ஆங்கிலக் கல்வியை நிறுவிய ஆண்டர்சன் ஆகியோரின் நட்பின் மூலம் தமிழ் மொழியை சிறப்பாக கற்றறிந்தார்! பின்னர் பாண்டிய நாட்டில் தனது இறைப் பணியை துவக்கப் பயணம் மேற் கொண்டார் !

* சென்னையிலிருந்து 400 மைல் தொலைவிலிருந்த திருநெல்வேலிக்கு நடைபயணமாக சென்றார் என்ற செய்தி கால்டுவெல்லின் சாதனைகளிலேயே மிகப்பெரியதாக எண்ணுகிறேன்!

சென்னையிலிருந்து சோழ நாட்டின் வழியாக பயணித்து நீலகிரிக்கு சென்று பின்னர் கொங்கு நாட்டிற்கு பயணித்து பின்னர் மதுரையை சென்றடைந்தாராம் !

* மதுரையைக் கண்ட கால்டுவெல் பற்றி ரா. பி. சேதுப்பிள்ளை வருணித்தது :
“பாண்டி நாட்டின் தலைநகராய மதுரையை வந்தடைந்த பொழுது தாயைக் கண்ட சேய் போல் ஐயர் அகமலர்ந்து இன்புற்றார்!”

மதுரையிலிருந்து நெல்லை, பின்னர் பாளையங்கோட்டை, பின்னர் நாசரேத், இறுதியாக இடையன்குடியை அடைந்தார் !

* திருநெல்வேலி நகருக்கு தென் கிழக்கே நாற்பது மைல் தூரத்தில் இருந்தது இடையன்குடி! அங்கே தனது இறைப் பணியைத் துவக்கினார். அருகிலிருந்த நிலங்களை விலைக்கு வாங்கி குடியிருப்பையும் கோயிலையும் கட்டினார். பெண் பிள்ளைகள் படிப்பதற்கு பாடசாலைகள் அமைத்தார்.

* புதிதாக ஒரு கிறிஸ்துவ ஆலயத்தை 1847ம் ஆண்டு கட்டத் துவங்கினார். ஆலயம் கட்டி முடிக்க 33 ஆண்டுகள் ஆனதையும் அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் அறியும்போது கால்டுவெல்லின் மன உறுதியை பாராட்டாமல் கடந்து செல்ல முடியாது! அந்த தேவாலயம் 1880ம் ஆண்டு திறக்கப்பட்டது !

* கால்டுவெல் தனது ஓய்வு நேரங்களில் பழந்தமிழ் நூல்களை ஆய்வதில் நேரத்தை செலவிட்டார். திருக்குறள், சீவக சிந்தாமணி, நன்னூல் ஆகியவற்றை பலமுறை படித்தாராம்.

கர்த்தரை வழிபடுவதற்கான பிரார்த்தனை நூலை திருத்தியமைக்கும் பணியில் இவரையும் சேர்த்துக் கொண்டார்கள். பைபிளின் புதிய ஏற்பாடு பகுதியை தமிழில் சிறப்பாக மொழி பெயர்த்த குழுவினரில் கால்டுவெல்லும் ஒருவர்!

* கால்டுவெல் தனது மொழியறிவின் ஆர்வம் மிகுதியால் தென்னிந்திய மொழிகளைத் துருவி ஆராயத் தொடங்கினார். திராவிட மொழிகளின் இலக்கணக் கூறுகளும் சொல்லாக்க முறைகளும் அடிப்படையாக ஒற்றுமையுடனாக இருப்பதை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

* திராவிட மொழிகள் எல்லாம் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை என்றும் அவைகள் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியவைகள் கிடையாது என்றும் தனித்து உருவாகி இயங்கி வரும் மொழிகள் என்ற உண்மையை கண்டறிந்தார்!

* பதினான்கு ஆண்டுகள் அந்த துறையில் ஆராய்ந்து ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு நூலை 1856ம் ஆண்டு வெளியிட்டார் ! சமஸ்கிருதத்தின் போலி பிம்பத்தை உடைத்து நொறுக்கி என்றென்றும் சனாதன சக்திகளின் எதிரியானார் !

* தமிழின் சிறப்பு பற்றி கால்டுவெல் கூறியதை நூலாசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளையின் அருந்தமிழ் வரிகளில் இதோ :

“தமிழ்ப் புலவர்கள் தொன்று தொட்டு இயன்றவரை இயற்றமிழில் சொற்களையே நூல்களிற் போற்றியமைத்தமையாலும், இன்றியமையாத வடசொற்களை ஏற்கும்போது அவற்றை தமிழின் நீர்மைக்கேற்றவாறு வண்ணமுறக் குழைத்து வழங்கி வந்தமையாலும், இன்றளவும் பண்டைத் திறம் குன்றாது தமிழ் மொழி சிறந்தோங்கி வளர்கிறதென்றும், தமிழ் மொழியில் இன்று வழங்கும் ஆரியச் சொற்கள் அகற்றிவிடினும் அம்மொழி வளங்குன்றாது செழித்தோங்கித் தழைத்தியங்க வல்ல தென்றும் செப்பமாக அறிவித்துள்ளார்!” 

* மேலும் இந்த காரணங்களுக்காக ராபர்ட் கால்டுவெல் அவர்களை ‘திராவிட மொழி நூலின் தந்தை’ என்று அழைக்கிறார்கள் என ரா.பி. சேதுப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். இன்றைய இளைய சமுதாயம் இதை நினைவில் கொள்ள வேண்டும் !

* இவ்வாறாக மொழி நூல் உலகிற்கு புதுநெறி காட்டிய கால்டுவெல்லுக்கு கிளாஸ்கோ பல்கலைக்கழகம் ‘டாக்டர்’ பட்டம் வழங்கி சிறப்பித்தது! கால்டுவெல் எலிசா என்ற நங்கையை காதலித்து மணந்தார். அவர்களுக்கு மூன்று செல்வங்கள்.

* இறுதிக் காலத்தில் ஓய்வெடுக்க இடையன் குடியை விட்டு கொடைக்கானலுக்கு மாற்றிக் கொண்டு சென்றார். அங்கு உடல்நலம் குன்றி மரணத்தை தழுவினார்.

* கால்டுவெல் தனது 77 வது வயதில் 1891ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் நாளில் மறைந்தார். அவரது உடலை பேழையில் வைத்து கொடைக்கானல் மலையிலிருந்து கீழே மிகச் சிரமத்துடன் கொண்டு வந்து பின்னர் நீண்ட பயணப்பட்டு இறுதியில் இடையன்குடியில் அவர் கட்டிய ஆலயத்தில் அடக்கம் செய்தார்களாம் !

* அருந்தமிழின் சிறப்பை உலகுக்குச் சொன்ன கால்டுவெல்லின் சரிதத்தை அருந்தமிழின் சிறப்பான நடையில் வழங்கிய தமிழறிஞர் ரா. பி. சேதுப்பிள்ளையின் அரிய கொடை இந்த நூல். ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட நூலை இன்றைய தலைமுறையை மனதில் வைத்து அதை மறு பதிப்பு செய்துள்ள கருஞ்சட்டை பதிப்பகத்தாருக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

* சனாதன சமஸ்கிருத மேகங்கள் சூழப்பட்டுள்ள இன்றைய சூழலில், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த கால்டுவெல்லின் தன்னலமற்ற சரிதத்தைச் சொல்லும் இந்த நூல், பகலவனாக அந்த மேகங்களையெல்லாம் சுட்டெரித்து விடும்! படித்தறியுங்கள்! பரப்புரை செய்யுங்கள்! 

பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்.

*******

நூல் : கால்டுவெல் ஐயர் சரிதம்!
ஆசிரியர்: ரா.பி. சேதுப் பிள்ளை
கருஞ்சட்டைப் பதிப்பகம்
பக்கங்கள்: 125
விலை: ரூ.140/-

You might also like