கவுண்டமணி எனக்குப் பிடித்த நடிகராக இருப்பதற்குப் பல காரணங்கள். முதன்மைக் காரணம் எழுதித் தராத வசனங்களை அவராகச் சட்டென்று பேசுவார். அதில், அரிதான வட்டார வழக்குச் சொற்கள் வந்துவிழும். கெட்ட வார்த்தைகளைக்கூட சாதாரணமாகப் பேசிக் கடந்துவிடுவார்.
அவர் வேகமாகவும் சத்தமாகவும் பேசுவதால் என்ன சொல்கிறார் என்று புரிவதில்லை. அதனாலேயே அச்சொற்கள் தணிக்கைக்குத் தப்பிக் காட்சிகளில் இடம்பெற்றுவிடும்.
ஒரு படத்தில் சட்டையில் ரோஜாப்பூவை வைத்துக் கொண்டிருப்பார் செந்தில். ‘என்னடா இது?’ என்பார் கவுண்டமணி. ‘பூ சித்தப்பு’ என்று சொல்வார் செந்தில்.
அப்பூவைப் பிடுங்கி எறிந்துகொண்டே ‘பெரிய நேரு பரம்பர. தாயலி… சட்டையில ரோஜாப்பூ குத்தாத வெளிய வரவே மாட்டாரு’ என்பார். ‘தாயோலி’ என்பதைத் ‘தாயலி’ என்று விரைவாகச் சொல்வார். ‘தாலி’ என்கிற மாதிரியும் கேட்கும்.
‘நீங்களும் ஹீரோதான்’ படத்தில் கவுண்டமணி, செந்தில் இருவரும் கூத்துக் கலைஞர்கள். திரைப்படத்தில் நடிக்க முயல்வார்கள்.
கவுண்டமணி வீட்டு அண்டாவைக் கொண்டுபோய்ச் செந்தில் அடகு வைத்துப் பலவற்றை வாங்கிக் கொண்டு வந்து கவுண்டமணிக்கே கொடுப்பார். அதைக் கண்டுபிடித்ததும் கவுண்டமணி பேசும் வசனம் இது:
‘ஏண்டா என் ஊட்டு அண்டாவ அடகு வெச்சு எனக்கே திப்பிலி கல்கண்டு வாங்கிக் குடுக்கற, ங்கொக்காலி….’
‘ங்கொக்காலி’ என்பது போகிற போக்கில் வந்து விழும்.
சில வசைச் சொற்களை, ‘கெட்ட’ வார்த்தைகளைத் தெளிவாகவே ஒலிப்பார். அவற்றைப் பொருள் புரியாமல் அனுமதித்திருக்கக் கூடும். அப்படி அவர் அடிக்கடி பயன்படுத்தும் சொல் ‘பொச்சு.’
ஒரு படத்தில் காதலியிடம் ‘நாளைக்கு சூசைடு பாயிண்ட் போறமில்ல, அங்க போயி, அந்தப் பாற மேல அவள நிக்க வெச்சு, கீழ பாரு உங்கப்பன் வீடு தெரியுதா பாரும்பன். அவ குனிவா. பொச்சு மேல ஒரே மிதி. பொணமே கண்ணுக்குத் தெரியாது’ என்று சொல்வார். ‘பொச்சு மேல ஒரே மிதி’ என்று சொல்லும்போது காலைத் தூக்கி மிதித்தும் காட்டுவார்.
‘தாலாட்டு’ படத்தில் நாயோடு தன் வீட்டுக்கு வரும் மச்சான் செந்திலை வீட்டில் தங்க வைத்திருப்பார். அதைப் பற்றிக் குள்ளமான ஒருவர் விசாரிப்பார்.
‘நானென்ன உன்ன மாதிரி சொத்துக்காவ மச்சான உக்கார வெச்சுச் சோறு போடற ஆளுன்னு நெனச்சயா’ என்பார் அவர்.
‘ஓடிப் போயிரு, பொச்சு மேல மிதிச்சுப் போடுவன், ஓடிப் போயிரு’ என்று கவுண்டமணி விரட்டுவார்.
இன்னொரு படத்தில் ஜெயராமிடம் ‘பொச்சுக்குப் பின்னால வால ஒட்டிக்கிட்டு அனுமாரு வேசம் போடச் சொல்லவா?’ என்று அவர் பின்பக்கத்தைப் பிடிப்பார். இப்போதைக்கு இவ்வளவுதான் நினைவுக்கு வந்தவை. இன்னும் பல படங்களில் ‘பொச்சு’ என்பதை அவர் பயன்படுத்தியிருப்பார்.
‘பொச்சு’ என்னும் சொல் அனேகமாகத் தமிழ்நாடு முழுவதும் வழக்கில் இருப்பதுதான். ஆனால் வட்டாரத்திற்கு ஏற்பப் பொருள் தருவதால் வட்டார வழக்குச் சொல்லாகிறது.
சில பகுதிகளில் இச்சொல்லுக்கு அல்குல் (பெண்குறி) எனப் பொருள். கொங்கு வட்டாரத்தில் இதற்கு ‘மலத்துவாரம்’ என்று அர்த்தம்.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியில் ‘பொச்சு’ இடம்பெற்றிருக்கிறது. அதற்குப் பல பொருள்களை அகராதி தருகிறது. பெண்குறி மயிர், பெண்குறி, மலத்துவாரம், மயிர்க்கொத்து என்னும் பொருள்களையும் தருகிறது.
இதில் கொங்கு வட்டாரத்தில் வழங்கும் பொருள் ‘மலத்துவாரம்.’ பேச்சு வழக்கில் பலவிதமாக இச்சொல் பயன்படுகிறது.
‘நம்ம பொச்சிருக்கற லச்சணத்துக்கு மத்தியானத்துல பீ கேக்குதா?’ என்பது பழமொழி. விடிந்து வெகுநேரம் தூங்குபவனைப் பார்த்து ‘என்னடா இன்னம் பொச்சடச்சுக்கிட்டுத் தூங்கற?’ என்பார்கள்.
உழவு வேலைக்குக் காட்டுக்குச் செல்பவர் மண்வெட்டி, அரிவாள் முதலிய கருவிகளை வேலை செய்த இடத்திலேயே போட்டு விட்டு வந்து விடுவர். பிறகு போய்ப் பல இடங்களிலும் தேடி எடுக்க வேண்டியிருக்கும்.
அப்படிச் செய்பவரின் மறதியைச் சுட்டிப் ‘பேண்ட பக்கம் பொச்ச வெச்சிட்டு வர்றதே உனக்கு வேலையாப் போச்சு’ என்று திட்டுவர். எடுக்கும் பொருளை அங்கங்கே வைத்து விடும் வழக்கம் உடையவருக்கு வீட்டிலும் இந்தத் திட்டு கிடைக்கும்.
‘பொச்ச மூடிக்கிட்டுப் போடா’, ‘பொச்சுலயே ஒதச்சிருவன்’ என்பதெல்லாம் சாதாரண வழக்கில் இருப்பவை. பிருஷ்டத்தைப் ‘பொச்சுக்குட்டு’ என்பதும் இப்பகுதி வழக்கு.
‘பொச்சுக்குட்டுத் தேயத் தேயத் திண்ணையிலயே உக்காந்திருக்கறாண்டா’ என்று திட்டுவதுண்டு.
வாலை இடைவிடாமல் ஆட்டிக்கொண்டிருக்கும் குருவியை எல்லாப் பகுதியிலும் ‘வாலாட்டிக்குருவி’ என்பார்கள். எங்கள் ஊரில் அதற்குப் பெயர் ‘பொச்சாட்டிக் குருவி.’
வயிற்றெரிச்சல் போலத்தான் ‘பொச்செரிப்பு’ என்பதும் வந்திருக்க வேண்டும்.
ஒரு விஷயத்தைப் பொருட்படுத்தாமல் போவதைக் குறிக்கப் ‘பொச்சு மண்ணத் தட்டி உட்டுட்டுப் போய்க்கிட்டே இருப்பேன்’ என்று சொல்லும் வழக்கம் உண்டு.
மண்ணில் உட்கார்ந்திருப்பவர் எழுந்து செல்லும் போது பின்பக்கம் படிந்திருக்கும் மண்ணைத் தட்டி விடுவது சாதாரணம்.
***
‘மௌனம்’ என்னும் தலைப்பிலான என் கவிதை இப்படி முடியும்:
என்னைக் குற்றவாளி ஆக்கிவிடும்
எல்லா முயற்சிகளையும்
பொச்சு மண்ணாய்த்
தட்டி எறிந்துவிட்டு
நடப்பேன் நான்.
நன்றி: பெருமாள் முருகன் பதிவு.