பெண் சார்ந்த ஒழுக்கவியல் இங்கு வலுவாக இருக்கிறது!

எழுத்தாளர் இராசேந்திர சோழன்

தமிழ் இலக்கிய உலகின் ஆகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவர் மறைந்த எழுத்தாளர் அஸ்வகோஷ் என்ற இராசேந்திர சோழன்.

தோற்றத்தில் மட்டுமல்லாமல், கதையோ, கட்டுரையோ, நாவலோ, எழுத்திலும் மொழி நடையிலும் கம்பீரத்தைக் கைக்கொண்டிருந்தவர். பேச்சும் உரையும்கூட அப்படித்தான்.

வெறும் எழுத்தாளராக மட்டுமின்றித் தீவிர செயற்பாட்டாளராகவும் திகழ்ந்தவர்.

2004 ஆகஸ்ட் மாதத்தில் இலக்கியச் சுற்றத்தின் இராசேந்திர சோழன் கதைகள் நூல் அறிமுக விமர்சனக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகத் திருச்சி வந்திருந்த இராசேந்திர சோழன்,  ‘தினமணி’க்கு அளித்த நேர்காணலின் ஒரு பகுதி இது.

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டதாக இருந்தாலும் இன்றைக்கும் படித்துப் பார்க்க அவருடைய நேர்காணல் அதே காத்திரத்துடன், கூர்மையுடன் திகழ்கிறது.  

***

கேள்வி: படைப்பு எப்படி இருக்க வேண்டும்?

பதில்: கருத்துகள் படைப்பில் வெளிப்படாமல் வாசிப்பவரின் மத்தியில் தூண்ட வேண்டும்: பக்கச்சார்பாக இருந்தால் அதுவே திகட்டலாகிவிடும்.

நியாயத் தீர்வு எடுப்பவனாகப் படைப்பாளன் இருக்கக் கூடாது; நியாயத் தீர்ப்பு எடுக்கச் செய்பவனாக இருக்க வேண்டும். ஒரேயொரு ஒளிக்கீற்றைத் தோன்றச் செய்தாலும் போதும்.

சமூகம் என்ன சொல்லுமோ என்ற கட்டுப்பாடுகள் இங்கிருக்கின்றன. சமூகம் சார்ந்த மதிப்பீடுகள் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்.

தன்னுடைய புரிதலில் பார்த்த நிகழ்வுக்கு உண்மையாக முன்வைக்கப்பட்டால் அதுவே நல்ல படைப்பு. இசங்களை முன்வைத்தால் பாதிக்கும்.”

படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையேயான மொழி இயல்பாக இன்றிச் சிக்கலாக மாற்றப்படும்போது வாசிப்பதில் தடை ஏற்படாதா?

படைப்பாளனுக்கும் வாசகனுக்குமுள்ள உறவு, தன் அனுபவத்தில் படைப்பாளன் வெளிப்படுத்த, வாசகன் அவன் அனுபவத்தில் பார்க்கிறான். அதற்கு வாசகனும் படைப்பாளியின் அனுபவத் தளத்துக்கு உயரும்போது மொழிச் சிக்கல் இருக்காது. அதற்காக வேண்டுமென்றே மொழிநடையைச் சிக்கலாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.

அனுபவ நெருக்கத்தில் வாசகன் தன்னையே படைப்பில் காண்கிறான். படைப்பு என்பது வாசகனைச் சென்றடைய வேண்டும்.”

சிறுகதை வடிவம் எப்படி இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

அம்பு அல்லது ஸ்ப்ரிங்கைப் போல இருக்க வேண்டும் சிறுகதையின் வடிவமும் பண்பும் இலக்கை நோக்கி விடுபட்டுத் தெறிக்கும்.

இந்த வகையில் எழுத்தாளர்களில் எனக்குப் பிடித்தவர்கள் புதுமைப்பித்தனும் தி. ஜானகிராமனும்.

பின்நவீனத்துவத்தை ஏன் கடுமையாக விமர்சிக்கிறீர்கள்?

வரலாற்றில் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு தத்துவம் மனிதனுக்கு நம்பிக்கையூட்டுபவையாக இருந்துவந்துள்ளன. கிறித்தவம், அறிவார்ந்த உலகம் என.

பின் நவீனத்துவம் என்பது ஒரு தத்துவமேயல்ல. இதுவரையுள்ள தத்துவங்களைக் கேள்விக்குள்ளாக்குவது. அது முன்வைப்பது வெற்றிடத்தைத்தான். மனிதனைச் செயல்படவிடாமல் முடக்குவதுதான் பின் நவீனத்துவம்.

பின் நவீனத்துவத்துக்கு இளம் படைப்பாளிகள் பலியாகிவிடக் கூடாது. வாழ்க்கையின் உண்மையை உணரத் தடையாக இருந்துவிடக் கூடாது அது.

பெண் கவிஞர்கள் பாலியலை வெளிப்படையாகப் பேசும் கவிதைகளை எழுதுகின்றனர். இவை இயல்பாக இல்லாமல் வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக எழுதப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுகிறதே?

இங்கே பெண் சார்ந்த ஒழுக்கவியல் கோட்பாடுகள் வலுவாக இருக்கின்றன. இதையே இன்னமும் உடைக்க முடியவில்லை.

பெண் படைப்பாளிகளின் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். மிக நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டவர்கள், ஒரு கலகக்குரல் எழுப்புவது இயல்பு. யார் ஆதிக்கம் செலுத்தினார்களோ அவர்கள்தான் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும்.

அவர்கள் எழுத எழுத இந்த விஷயங்கள் குறைந்து போய்விடும். ஆனால் ஆண் சாராமல் வாழ்வதுதான் பெண் விடுதலை என்ற கருத்து சரியல்ல. ஆணுக்குச் சமமாக இருக்க வேண்டும், ஆணுடன் இணைந்து வாழ்வதுதான் இயற்கை வாழ்க்கை.

சந்திப்பு: எம்.பாண்டியராஜன்

நன்றி: தினமணி

You might also like