ஓருயிர் இன்னொரு உயிருக்குத் தரும் உச்சபட்ச மரியாதைதான் காதல்!

காதல் என்பது ஓர் உயிர் இன்னொரு உயிருக்குத் தருகிற உச்சபட்ச மரியாதை. அந்த மரியாதைக்கான காரணம் அழகு, அறிவு, திறமை ஆகியவற்றின் மீதான வியப்பாகவோ, பண்பு நலன்கள் மீதான ஈர்ப்பாகவோ, மறக்கவே முடியாத நன்றியுணர்வாகவோ இருக்கலாம்.

ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் தாண்டி அது நம்மை நேசித்த உயிர்; நாம் சக உயிர்; என்கிற புரிதலுக்கு வருகிற போதுதான் காதல் நிஜமான மரியாதையைப் பெறுகிறது.

ஆனால் எல்லோராலும் சுலபமாக இந்த இடத்திற்கு வந்து விட முடிவதில்லை. அதற்கு அவர்கள் மட்டும் காரணம் இல்லை; அந்த நிலையை அடைவதற்கான சூழலும், வாழ்க்கையும் எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் நீயா நானாவில் ‘காதல்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஜான் மில்டன் பேசியதைக் கேட்டேன். தன்னம்பிக்கை குறைவோடு கடைசி பெஞ்ச் ஆளாக இருந்த தன்னை ஒரு பெண்ணின் காதலே ஒளிப்பதிவாளராக உருமாற்றியது என்று குறிப்பிட்டார்.

அந்தக் காதலுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்பதற்காக காதலியின் கொலுசு முத்துகளை இருபது ஆண்டுகளாக தன் கழுத்துச் செயினில் அணிந்திருந்ததாகக் குறிப்பிட்டார். அதைக் காட்டவும் செய்தார். ஐந்து முத்துக்கள் ஆரம்பத்தில் இருந்திருக்கின்றன. இப்போது இரண்டு முத்துக்கள் மீதமிருக்கின்றன.

இன்னொரு ஆச்சர்யம்.. அவருக்கு அந்தப் பெண்ணோடு திருமணம் ஆகவில்லை.. அந்தக் காதலைப் புரிந்து கொண்டு அதற்காக மனம் கோணாமல் அவருடைய சஹிருதயராக வாழ்ந்து வரும் மனைவியின் காதல் இதை விட ஒரு படி உயர்ந்தது.

இதையே மனைவி செய்திருந்தால் அவர் அனுமதித்திருப்பாரா? என்றொரு பெண்ணியக் கேள்வியை எழுப்பி இந்த வண்ணமயமான பலூனை சிறு குண்டூசி கொண்டு குத்தி புஸ்ஸென்றாக்கி விடலாம்.

நான் அப்படிப்பட்ட ஆண்களையும் கூட என் வாழ்வில் சந்தித்திருக்கிறேன். தன் இணையின் காதலை கருணையோடு ஏற்றுக் கொள்பவர்கள் இரு தரப்பிலுமே இருக்கிறார்கள். ஆனால் பிடிக்காவிட்டாலும் சகித்துக் கொள்கிற துர்பாக்கியம் பெண்ணுக்கு மட்டுமே வாய்க்கிறது. இந்த நிலை சரியாக நாம் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும்.

பக்தியோ, காதலோ சரணடைதலின் உச்சம் பாதம் பற்றுதல்தான். இருபது ஆண்டுகளாக கழுத்தில் அசையும் முத்தில் தெரிவது நிபந்தனையே இல்லாத காதலின் சரணாகதிதான்.

வீட்டுக்குச் சோறாக்குவதற்காக பக்கத்து வீட்டில் கடன் வாங்கி வைத்திருந்த அரிசியை பாரதி காக்கை குருவிக்குப் போட்டு,

‘காக்கைக் குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்க நோக்கக் களியாட்டம்’

என்று பித்தேறிப் புலம்பியபோது கோபப்படாமல் நின்றிருந்த செல்லம்மா ஒரு பைத்தியத்துடன் வாழ்வதற்கு தகுதி வாய்ந்த மற்றொரு பைத்தியம்தான்.

அந்த நிமிடத்தில் செல்லம்மாவின் மனதில் இதுதான் ஓடியிருக்கும்

‘இந்தாளு காக்கை குருவிட்ட கூட இவ்வளவு பாசமா இருக்கானே? நம்மள எப்படி பாத்துப்பான்?’

மில்டனின் மனைவிக்கும் இதே மாதிரி ஓர் எண்ணம் ஓடியிருக்கக் கூடும். சம்பந்தமே இல்லாமல் ஓர் உயிர் பிறிதோர் உயிரை நேசிப்பதை நம் லௌகீகக் கணக்குகளைத் தாண்டி ரசிப்பது பெருவரம். அப்படிப்பட்ட மனம் வாய்க்கப் பெற்றவர்களால் இந்த உலகம் அழகாககட்டும்.

– மானசீகன் 

You might also like